

தமிழ்த் திரையுலகம் பல ஜாம்பவான்களைக் கண்டிருக்கிறது. பன்முகத் தன்மை கொண்ட அவர்கள் பலவாறாக ஜமாய்த்திருக்கிறார்கள். அந்த வரிசையில் பல பேர் அரியணையேறி இருக்கிறார்கள். இந்தக் கட்டுரையில், அவர்களில் இரண்டு பேரின் சுவாரசியமிக்க இனிய சந்திப்பைக் கண்டு நாமும் இன்புறுவோமே!
நாகர்கோயில் சுடலை முத்து கிருஷ்ணன் என்று நீட்டி முழக்கினால், பலர் ஒருவாறு யோசிப்பார்கள். யோசனைக்கே இடமில்லாது உணர்த்த வேண்டுமென்றால், என்.எஸ்.கே என்று சொல்ல வேண்டும். இன்னும் எளிதாக்கிக் ‘கலைவாணர்’ என்று சொன்னால் எல்லோரும் கப் என்று பிடித்துக் கொள்வார்கள். நாடக மேடை நடிகர், சினிமா நகைச்சுவை நடிகர், பாடகர், அரசியல்வாதி என்று பலமுங்கள் இவருக்குண்டு!
அந்தக் காலத்தில், இல்லையில்லை… எல்லாக் காலத்திலுமே மூன்றுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. முத்தமிழ் (இயல், இசை, நாடகம்), முக்கனி (மா, பலா, வாழை) என்பதோடு நிற்காமல், எதையும் மூன்று முறை சொல்லி உறுதிப்படுத்தும் வழக்கமும் நம்மிடையே உண்டு. அதனால்தான் மூன்று எழுத்துக்களைக் கொண்ட என்.எஸ்.கே, எம்.ஜி.ஆர், சிவாஜி, அண்ணா ஆகியோர்களெல்லாம் உயரத்தை எட்டி உலகோர் மனதிலும் இடம் பிடித்தார்களோ?
எவர் மனதையும் புண்படுத்தாத பண்பட்ட சிரிப்பின் மூலம் மக்களைக் கவர்ந்தவர், கலைவாணர் என்.எஸ்.கே. அதோடு, எதிர்கால விஞ்ஞான முன்னேற்றம் எப்படி அமைய வேண்டுமென்பதையும் தன் பாடல்கள் மூலம் உணர்த்தியவர். அவரின் அன்றைய கனவுகள், இன்று நடைமுறைக்கு வந்து நமக்கு உதவுகின்றன. அன்பையும், பண்பையும் ஒரு சேரக் கொண்டிருந்ததனால் புரட்சித் தலைவரே அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத் திரைத் துறையில் ஏதாவது பிரச்னைகள் என்றால், கலைவாணரைக் கூப்பிட வேண்டுமென்றுதான் எல்லோரும் குரல் கொடுப்பார்களாம். ’இந்தியாவின் சார்லி சாப்ளின்’ என்றே அவர் அழைக்கப்பட்டார்.
மேனகா படம் மூலம் அறிமுகமானவர். எம்.ஜி.ஆர் படமான சதி லீலாவதியில் நடித்துத் திரை வாழ்க்கையில் முன்னேறினார்.
ஒரு நாள் என்.எஸ்.கேயிடம் நண்பர் ஒருவர் ‘ரங்க ராஜன்’ என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் வாலியை அறிமுகப்படுத்தி வைக்கிறார். இருவருக்குமே சற்று நேரம் கிடைக்கிறது பேச!வாலிபக் கவிஞரைப் பார்த்து கலைவாணர் கேட்கிறார். ”முயல் ஆமை கதை தெரியுமா?”
கவிஞரோ, ‘இவர் என்ன நம்மை சின்னப்பையன் என்று நினைத்து விட்டாரா?’ என்று மனத்தில் ஓடிய எண்ணத்துடன் உள்ளுக்குள் சிரித்தபடியே, "ஆமை வராதுன்னு நெனச்சி, அவசரம் எதுக்குன்னு எண்ணி, ரெஸ்ட் எடுத்ததால முயல் தோற்றிடிச்சி!” என்று பதில் சொல்கிறார் வாலி!
“அப்படியும் சொல்லலாம்! ஆனா சாதாரணமானவங்க இந்தப் பதிலைச் சொன்னா ஏற்றுக்கிடலாம். ஆனா பதில் சொல்பவர் கவிஞர் ஆயிற்றே! இன்னும் சிறந்த பதிலை நான் எதிர்பார்க்கறது தப்பில்லையே!” சின்னச் சிரிப்புடன் கலைவாணர் கிண்டி விட,
கவிஞர் சற்றே யோசிக்கிறார். மீண்டும் அதே பதிலை சற்றே மாற்றிச் சொல்கிறார். இருப்பினும் கலைவாணர் ஒத்துக் கொள்ளவில்லை. கவிஞரோ மேலும் யோசிக்கிறார்!
“என்ன ரொம்ப யோசனை? அதெல்லாம் வேண்டாம்பா! நான் சொன்னதைத் திருப்பிச் சொல்லுங்க விடை கெடைச்சிடும்." சொல்லி விட்டு NSK அவரையே பார்க்கிறார். அவரும் முயல் ஆமை… முயல் ஆமை… என்று திருப்பித் திருப்பிச் சொல்ல இறுதியாக முயலும் ஆமையும் சேர்ந்து, "முயலாமை" ஆகி விட, கைதட்டியபடியே ‘சரியான விடை வந்திடுச்சி!’ என்று சிரித்தாராம்.
உண்மைதானே! முயலாமை காரணமாகத்தானே பலரின் முன்னேற்றம் தடை பட்டுக் கிடக்கிறது. முயன்றால், முடியாதது எதுவுமில்லைதானே! மெத்தனமல்லவா வீழ்ச்சிக்குக் காரணம் முயலைப்போல!