கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)

Kalyanam Panniyum Brahmachari Movie
Kalyanam Panniyum Brahmachari
Published on

கமலும் 'கிரேசி' மோகனும்  இணைந்த பல படங்களில் ஆள் மாறாட்டம் செய்வது, அதனால் ஏற்படும்  குழப்பங்கள் என்று நம்மை சிரிக்க வைக்கும் கதைக்களம் அமைந்திருக்கும். ஆனால் இந்த கதையமைப்பு 1954 லிலேயே வந்துள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? அதுவும் 'நடிகர் திலகம்' நடிப்பில்? சிவாஜி கணேசன், பத்மினி,  டி ஆர் ராமச்சந்திரன், ராகினி என்ற பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்த 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்ற படம்தான் அது. 

கணபதியாக டி ஆர் ராமசந்திரனும், அவரது உறவினர் மற்றும் நண்பன் அம்பலவாணனாக சிவாஜி கணேசனும் போட்டிப் போட்டு நடித்து ரசிகர்களை பரவசப்படுத்திய முழு நீள நகைச்சுவை படம் இது. 

டி ஆர் ராமசந்திரன், ராகினி இருவருக்கும் திருமணம் செய்வதென்று பெற்றோர்கள் முடிவெடுத்திருப்பார்கள். ஆனால் கிராமத்து பெண் என்றும், படித்த தனக்கு இணை இல்லாத பட்டிக்காட்டுப் பெண் என்றும் கூறி பெண் பார்க்கும் படலத்தில் ராகினியை அவமானப்படுத்தி விடுவார் டி ஆர் ராமசந்திரன். 

டி ஆர் ராமசந்திரனின் தந்தை தன் மகனின் நண்பன் சிவாஜி கணேசனை அழைத்து தன் பிள்ளையை திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள சொல்லி உதவும் படி கேட்டுக் கொள்வார். மேல்நாட்டு மோகம், நவீன நடவடிக்கை, முற்போக்கு கொள்கைகள் கொண்ட டி ஆர் ராமசந்திரனுக்கு அழகான, பணக்கார, நவ நாகரிக நங்கையை  திருமணம் செய்துக் கொள்ளதான் ஆசை.  இதை அறிந்து கொண்டு, சிவாஜி கணேசன் மற்றும் ராகினியின் சிநேகிதியாக வரும் பத்மினி இருவரும் திட்டம் தீட்டி, ராகினி தேவி என்று உரு மாற்றம் செய்து ராகினியை டி ஆர் ராமசந்திரனின் எதிர் வீட்டில் குடி வரச்செய்வார்கள். அவருக்கு உதவி செய்ய பத்மினியும் உடன் தங்குவார். அந்த புதிய அழகான, மாடர்ன் யுவதியின் நடை, உடை, பாவனை இவற்றில் மனம் உருகி, மதி மயங்கி, அவரைதான் கல்யாணம் செய்துக் கொள்வேன் என்று டி ஆர் ராமச்சந்திரன் ஒற்றை காலில் நிற்க, அவர் விருப்ப படியே கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடைபெறும். தான் முதலில் நிராகரித்த கிராமத்து பெண்தான் தான் மணந்திருக்கும் ராகினி தேவி என்று அறியாமல் டி ஆர் ராமச்சந்திரன் ராகினியை ஆங்கிலத்தில் பேசவும், கார் ஓட்டவும் வற்புறுத்த அந்த நிலமையை சமாளிக்க பத்மினி, ராகினி, சிவாஜி ஆகியோர் அடிக்கும் கூத்துதான் மீதி கதை. இதற்கு நடுவில் சிவாஜி-பத்மினி காதல் வேறு ஒரு தனி டிராக். கடைசியில் உண்மை எப்படி வெளிவருகிறது, ராகினியை ஏற்றுக்கொள்கிறாரா டி ஆர் ராமசந்திரன் என்பது கிளைமாக்ஸ். 

இதையும் படியுங்கள்:
நிவின் பாலியின் Malayalee From India படத்தின் அப்டேட்… ரசிகர்கள் கொண்டாட்டம்!
Kalyanam Panniyum Brahmachari Movie

பி நீலகண்டன் திரைக் கதை, இயக்கம். தயாரிப்பு பி ஆர் பந்துலு. இசை டி ஜி லிங்கப்பா.

பாடியவர்கள் ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜிக்கி, ஏம் ராஜா, கண்டசாலா, ஜே பி சந்திர பாபு போன்றவர்கள்.

டி ஆர் ராமசந்திரனும், சிவாஜி கணேசனும் சேர்ந்து டான்ஸ் ஆடி பாடிய 'ஜாலி லைப் ஜாலி லைப்' பாடல் பலரால் விரும்பப்பட்டது.

'மதுமலர் எல்லாம் புது மணம் வீச,' 'வெண்ணிலாவும் வானும் போலே' போன்ற பாடல்கள் சிறப்பாக இருக்கும்.

சந்திராபாபு ஒரு சிறிய வேடத்தில் வருவார். டி. ஆர். ராமசந்திரன், மிஸ் ராகினி தேவியை கவர பாட்டு பாட வாய் அசைக்க, அவருக்காக சிவாஜி பாடப் போய் இருவரும் மாட்டிக் கொண்டு விழிக்கும், தவிக்கும் காட்சி வெகு ஜோர்!

தரமான நகைச்சுவை மேலோங்கி இருந்த இந்த படம் 1954 ல் வெளி வந்து வெற்றி வாகை சூடியது. அது ஒரு பொற்காலம்!

தொகுப்பு: பிரியா பார்த்தசாரதி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com