

நடிகர் கமல் பாலிவுட்டில் வெற்றிகரமாக இயங்கி இருந்தாலும் அதிலிருந்து ஏன் விலகினார்? என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும். அதற்கான காரணங்களை ஒருமுறை கூறியிருந்தார். கமல் 1974 ஆம் ஆண்டிலேயே 'ஆய்னா ’ திரைப்படத்தில் ஒரு சிறு காட்சியில் தோன்றியதன் மூலமாக பாலிவுட்டில் கால் பதித்திருந்தார். ஆயினும் 1981 ஆம் ஆண்டு தான் 'ஏக் துஜே கே லியே' திரைப்படத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமானார்.
கமல் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருந்தாலும், கதாநாயகனாக அவரை வளர்த்தது மலையாள சினிமா தான். அவரது வளர்ச்சி தமிழ் சினிமாவின் வழியே தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே நேரம் பாலிவுட்டில் ஒரு வெற்றிகரமாக நடிகராக அவர் உருவெடுத்திருந்தார். பாலச்சந்தர் இயக்கத்தில் அவர் நடித்த ஏக் துஜே கேலியே திரைப்படம் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்று,கமலுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது.
அதைத் தொடர்ந்து கமல் நடித்த பாலிவுட் திரைப்படங்கள் பலவும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. வெற்றிகரமான பாலிவுட் நடிகர்களில் ஒருவராக கமலும் மாறினார். கமல் நடித்த 'தேரி கசம்' என்ற காதல் திரைப்படமும் நல்ல வெற்றி பெற, அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஹிந்தி திரைப்படங்களின் வாய்ப்பினை பெற்றார். மூன்றாம் பிறை படத்தின் ஹிந்திப் பதிப்பான 'சத்மா' திரைப்படமும் கமலுக்கு வலிமையான நட்சத்திர அந்தஸ்தை வழங்கியது. இந்த திரைப்படத்தின் மூலம் தான் ஸ்ரீதேவி பாலிவுடில் நிரந்தரமாக குடியேறினார்.
1984 ஆம் ஆண்டு கமல் நடித்த 6 திரைப்படங்களில் 5 திரைப்படங்கள் ஹிந்தி திரைப்படங்களாக இருந்தது. எனக்குள் ஒருவன் என்ற ஒரே தமிழ் திரைப்படத்தில் மட்டுமே அந்த ஆண்டு கமல் நடித்திருந்தார். அவர் நடித்த ஹிந்தி திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் , அதற்கு அடுத்த ஆண்டு கமல் நடித்த 'சாகர்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்த திரைப்படத்தை பாலிவுட்டின் மிகப்பெரிய இயக்குனர் ரமேஷ் சிப்பி இயக்கியிருந்தார், ரிஷிகபூர் மற்றும் டிம்பிள் கபாடியா ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். அதே நேரத்தில் அமிதாபச்சன் மற்றும் ரஜினி உடன் இணைந்து கமல் நடித்திருந்த 'கிராப்தார்' திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.
கணிசமான வெற்றிகளை பாலிவுட்டில் கமல் பெற்றிருந்தாலும் 1985 ஆம் ஆண்டுக்கு பின்னால் கமல் பாலிவுட் நடிப்பதை முற்றிலும் நிறுத்தி இருந்தார். அதற்குப் பின்னர் 1997 இல் 'சாக்ஷி 420' திரைப்படத்தில் மூலம் பாலிவுட்டில் மீண்டும் நுழைந்தார். இந்த திரைப்படம் வெற்றி பெற்றாலும் நேரடியான ஹிந்தி படங்களில் அதற்கு பின்னால் கமல் நடிக்கவில்லை.
1985 ஆம் ஆண்டு காலகட்டங்களில் கமல் ஹிந்தியில் அதிக ஆர்வம் காட்டிய போது , தமிழில் முதல் இடத்தை நோக்கி ரஜினிகாந்த் வேகமாக முன்னேறி வந்தார். அதேநேரம் தமிழில் பிரபு , டி.ராஜேந்தர் , முரளி, மோகன், பாக்யராஜ் , விஜயகாந்த் , போன்ற புதுமுக நடிகர்கள் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியை பெற்றுக் கொண்டிருந்ததால், கமல் தனக்கான இடத்தினை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கலாம்.
90 களில் பாலிவுட் மும்பை நிழல் உலக தாதாக்களின் பிடியில் சிக்கி இருந்தது. மற்ற ஹிந்தி நடிகர்களுக்கு கிடைத்த சொகுசு வசதிகள் தனக்கு கிடைக்கவில்லை , அவர்கள் 6 திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு வசதியாக இருந்தார்கள். அதே நேரம் எனது துணியினை நானே துவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். ஹிந்தி சினிமாவின் ஏழை உறவினராக நான் இருந்தேன். இது போன்ற காரணங்களினால் தான் பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்ததாக முன்பு இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் கமல் தெரிவித்திருந்தார்.
மேலும் நிழல் உலக சாம்ராஜ்யத்தை தான் எதிர்க்கவோ , அவர்களின் அச்சுறுத்தலுக்கு பணியவோ , நான் அங்கு இருக்க விரும்பவில்லை. அது போல கருப்பு பண விஷயத்தில் சிக்கவும் விரும்பவில்லை. எப்போதும் கருப்பு பணம் பெற நான் விரும்பியதில்லை. அதனால் , நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று முந்தைய நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார்.