கமல் விக்ரம் படத்தில் நடித்தது குறித்து கங்கை அமரன் பேசியிருக்கிறார்.
மணிரத்னம் மற்றும் கமல்ஹாசனும் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு தக் லைஃப் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெட்சுமி, அசோக் செல்வன், அபிராமி, வடிவுக்கரசி, அலி ஃபைசல், சன்யா மல்ஹோத்ரா என பலரும் நடித்திருக்கின்றனர். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். சென்னை, கோவா உள்பட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் முதல் பாடல் வெளியீட்டையே பிரம்மாண்டமான விழாவாக நடத்தியுள்ளனர் படக்குழுவினர்.
மேலும் இதன் இசை வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
விக்ரம் படத்திற்கு முன்னர் 4 ஆண்டுகள் கமல் சினிமா பக்கம் வராமலையே இருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியான 'விக்ரம்' திரைப்படம், நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு மாபெரும் கம்பேக் படமாக அமைந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் தோன்றிய கமல்ஹாசன், இந்த படத்தில் தனது முத்திரையை அழுத்தமாக பதித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் எடுத்து நடத்தி வந்தார்.
இப்படியான நிலையில், கமலின் விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அப்படத்தை பற்றியும் கமலின் நடிப்பை பற்றியும் கங்கை அமரன் பேசியிருக்கிறார். "தமிழ் சினிமாவில் தற்போதைய சூழலில் நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பதும் ,நல்ல நடிப்பிற்கான கதையை தேர்ந்தெடுப்பதும் குறைந்து விட்டது. கமலையே மாத்திட்டாங்க. கமல் எவ்ளோ பெரிய நடிகர். ஆனால் விக்ரம் படத்தை பாருங்க. எத்தனை சண்டை காட்சிகள், வித விதமான துப்பாக்கியை காட்டுறாங்க.. கமலையும் இந்த காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றிவிட்டார்கள்.” என்று பேசியிருக்கிறார்.
கங்கை அமரன் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், கவித்துவமான பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் படங்களும் இயக்கியுள்ளார். சமீப காலங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், பேச்சாளராகவும் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பேசி வருகிறார். நகைச்சுவையாகவும், மனதில் பட்டதை தயங்காமலும் பேசிவிடுகிறார். இதனை சிலர் வரவேற்றாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.