அஜித், மம்முட்டி, தபு நடித்த படம் விரைவில் ரீரிலிஸாக உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
சென்ற ஆண்டு வாலி, காதலுக்கு மரியாதை, யாரடி நீ மோஹினி போன்ற பல பழைய படங்கள் ரீரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றன. அதுமட்டுமல்லாமல் திரையரங்கு உரிமையாளர்களும் நல்ல வசூலை ஈட்டினார்கள். இப்படி ரீரிலீஸான படங்களிலேயே மிக அதிகமாக வசூல் ஈட்டிய படம் கில்லி. சமீபத்தில் தளபதி, மன்மதன், வல்லவன் ஆகிய படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டன.
சென்ற ஆண்டு புதிதாக வந்த படங்கள் ஓடாததால் பழைய படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டன.இந்தாண்டு வேறு விதமான ஸ்டைலை பயன்படுத்துகிறார்கள். அதாவது நன்றாக ஓடிய படத்தின் வெளியிடப்பட்ட தேதி அன்று மீண்டும் ரீரிலீஸ் செய்வது ட்ரெண்டாகி வருகிறது. அல்லது ஹீரோக்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவர்களின் ஹிட்டான படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகின்றன.
இப்படிதான் ரஜினி பிறந்தநாள் அன்று தளபதி படம் ரீரிலீஸ் செய்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதேபோல், சிம்பு பிறந்தநாளன்று வல்லவன், மன்மதன் ஆகிய படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டன.
தற்போது இத்தனை ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது என்று கூறி அதனை கொண்டாடும் விதமாக மேலும் சில படங்கள் ரீரிலீஸ் செய்யப்படவுள்ளன. அதாவது சச்சின், ரஜினிமுருகன் (ரீரிலீஸாகிவிட்டது), பொல்லாதவன் என்று நிறைய படங்கள் வரிசையில் இருக்கின்றன.
விஜயின் சச்சின் படம் ரீரிலிஸ் என்ற செய்திகள் வந்த நிலையில், அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குரல் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அஜிதின் குட் பேட் அக்லி படம் வருகிறது என்பதை மறந்துவிட்டனர் போலும்.
என்னத்தான் அஜிதின் புது படங்கள் ரிலீஸானாலும், பழைய படங்களுக்கு மவுஸ் அதிகம் என்றே கூற வேண்டும். அந்தவகையில் அஜித், மம்முட்டி, தபு, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் ரீரிலிஸாகவுள்ளது. இப்படத்தை ராஜிவ் மேனன் இயக்கினார்.
இப்படம் இப்போதும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறது. இப்படத்தின் பாடல்களும் ஹிட்தான். மலையாள சூப்பர் ஸ்டார், கோலிவுட்டின் தல, உலக அழகி சேர்ந்து நடித்த படம் என்றால் சும்மாவா? அப்போது எந்தளவு வரவேற்பை பெற்றதோ, அதே அளவு வரவேற்பு ரீரிலிஸிலும் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.