
நம் இந்திய நாட்டில் உண்டு மகிழ மட்டுமின்றி கடவுளுக்குப் படைக்கவும் பல வகையான சுவை மிக்க உணவுகளை தயாரித்து வருகிறோம். இவற்றுள் ஒரே ஒரு உணவு மட்டும் 'ஃபுட் ஆஃப் காட்ஸ்' என அழைக்கப்படுகிறது. அந்த தனித்துவம் மிக்க உணவு கோகோ என்றால் நம்புவீர்களா?
ஆம்... சவுத் ஈஸ்ட் ஆசியா, சென்ட்ரல் அமெரிக்கா, வெஸ்ட் ஆஃப்ரிக்கா மற்றும் சவுத் அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறு பண்ணைகளில் வளர்க்கப்படும் காகாவ் (Cacao) மரத்திலிருந்து பெறப்படும் பழம் தான் இந்த கோகோ.
கோகோ சேர்த்து தயாரிக்கப்படும் சாக்லேட்டின் வரலாறு மிகப் பழமையானது. கோகோவின் சுவைக்காக அதை கொதிக்கும் நீரில் போட்டு சூடான பானமாகத் தயாரித்து மாயா இனத்தினர் அருந்தி வந்தனர். சுவைக்காக இந்த பானத்தில் பட்டை மற்றும் மிளகு சேர்த்தனர். அதையே 'ஃபுட் ஆஃப் காட்ஸ்' என அழைத்து அஸ்டெக்ஸ் (Aztecs) பழங்குடி இனத்தினர், பேரரசர் மோக்டஸுமா II (Moctezuma II) அவர்களின் மேஜையில் படைத்தனர்.
1502 ஆம் ஆண்டு யூரோப்பியரான கிரிஸ்டோபர் கொலம்பஸ் முதன் முதலாக கோகோ பீன்களை காண நேர்ந்துள்ளது. ஒரு சிறிய படகை அவர் சிறை பிடித்தபோது அதிலிருந்த கோகோ பீன்களைப் பார்த்து, "மர்மமான தோற்றம் கொண்ட ஆல்மன்ட்" என கூறியுள்ளார். காகாவ் மரத்தின் விதையான கோகோ ஒரு காலத்தில் மீசோ அமெரிக்காவின் நாணயமாகவும் அங்கீகரிக்கப்பட்டு நடை முறையில் இருந்துள்ளது.
1753 ஆம் ஆண்டு, ஸ்வீடிஷ் விஞ்ஞானி ஒருவர் காகாவ் மரத்திற்கு 'தியோப்ரோமா (ஃபுட் ஆஃப் காட்ஸ்) காகாவ்' எனப் பெயரிட்டுள்ளார்.
கோகோவின் தனித்துவமான சுவை மற்றும் ஊட்டச் சத்துக்களின் காரணமாக சாக்லேட் தயாரிப்பில் கோகோ ஒரு முக்கிய கூட்டுப்பொருளாக சேர்க்கப்படுகிறது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கவும், இதய நோய் வரும் அபாயத்தை தடுக்கவும், மூளையின் அறிவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. கோகோ, செரோடோனின் மற்றும் டோப்பமைன் ஆகிய ஹார்மோன்களின் உற்பத்தியை சம நிலையில் வைக்க உதவி புரிகிறது. இதனால் மன அழுத்தம், வருத்தம், மன சோர்வு போன்ற கோளாறுகள் உடலிலிருந்து நீங்கும் வாய்ப்பு உண்டாகிறது. இதன் ப்ரீபயோட்டிக் குணமானது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 70 சத விகிதத்திற்கு குறையாமல் கோகோ சேர்த்து தயாரிக்கப்படும் டார்க் சாக்லேட் இதய நோய்களை தடுப்பதில் பங்காற்றுகிறது.
இத்தனை நன்மைகள் தரக்கூடிய கோகோவை 'ஃபுட் ஆஃப் காட்ஸ்' எனக் கூறுவதில் தவறேதுமில்லையே!