மாங்குயிலே… பூங்குயிலே… 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரும் 'கரகாட்டக்காரன்'..!

ராமராஜன், கவுண்டமணி-செந்தில் காம்போவின் ஆல்டைம் பிளாக்பஸ்டர் கரகாட்டக்காரன் விரைவில் டிஜிட்டல் வடிவில் மறுவெளியீடு!
karakattakaran
karakattakaran
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

சினிமா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, கரகாட்டக்காரன் திரைப்படம் விரைவில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இந்த செய்தி 90ஸ் கிட்ஸ்களுக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அப்படி என்ன இந்த திரைப்படத்தில் இருக்கிறது? என்று கேட்டால் ஆழமான கதை அம்சமும் , கண்கலங்க வைக்கும் பெரிய சென்டிமென்ட் எதுவும் இருக்காது.

படத்தின் பெயர் தான் 'கரகாட்டக்காரன்'. ஆனால் , கதாநாயகன் திரைப்படத்தில் வாய் பிளக்க வைக்கும் அளவிற்கு கரகாட்டம் எல்லாம் ஆடி இருக்க மாட்டார். ஆனால் , படம் பார்க்கும் எவரும் அவரது ஆட்டத்தில் குறை கண்டுபிடிக்க மாட்டார்கள். படம் எடுக்கப்பட்ட விதம் அவ்வாறு.

ராமராஜன் கதாநாயகன் முத்தையாவாக நடிக்க , கனகா கதாநாயகி காமாட்சியாக நடித்துள்ளார். அத்துடன் கவுண்டமணி , செந்தில் , சந்தான பாரதி , சந்திரசேகர் , காந்திமதி , சண்முகம் , ஜூனியர் பாலையா , பெரிய கருப்புத்தேவர் , கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படங்களில் வரிசையில் முன்னணியில் எப்போதும் இருக்கும்.

திரைப்படம் ஆரம்பமாகும் முதல், பாதிக்கும் மேல் வரை தவில் வித்வான் கவுண்டமணி , நாதஸ் செந்தில் , சரசு கோவை சரளாவின் நகைச்சுவை ரசிகர்களை சிரிக்க வைத்து வயிறை புண்ணாக்கி விடும். அதுவும் இந்த திரைப்படத்தில் வரும் வாழைப்பழக் காமெடி இன்று வரையில் சிரிக்க வைப்பதில் அதன் தரம் உயர்ந்து இருக்கிறது. படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகரும் தங்களின் கதாபாத்திரமாகவே மாறி , கதைக்குள் நம்மை இழுத்து செல்வார்கள். இந்த படத்தில் வரும் கார் கூட அனைவரையும் சிரிக்க வைக்கும் ஒரு நகைச்சுவை கதாபாத்திரமாகவே மாறி இருக்கும்.

படம் முழுக்க நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும் கதைக்கேற்ப வில்லனாக சந்தானபாரதியும் , அவரது கையாளாக சந்திர சேகரும் படத்தின் விறுவிறுப்பை கூட்டி இருப்பார்கள். இந்த திரைப்படத்தை கங்கை அமரன் இயக்கி இருந்ததால் , அவரது சகோதரர் இளையராஜா மிகவும் அற்புதமாக பாடல்களை வழங்கியிருப்பார். அதுவும் "மாங்குயிலே பூங்குயிலே , குடகு மலை காற்று , மாரியம்மா மாரியம்மா , ஊரு விட்டு ஊரு வந்து," போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனவை.

Karakattakaran
Karakattakaran

1989 -ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, ஒரு வருடத்தையும் கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களின் வரிசையில் கரகாட்டக்காரன் திரைப்படத்திற்கும் இடம் உண்டு. இந்த திரைப்படம் சிவாஜி கணேசன் - பத்மினி நடிப்பில் உருவான 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தின் கதையை ஒத்தது. அந்த திரைப்படம் நடிப்பிற்கும் நாட்டியத்திற்கும் இசைக்கும் இலக்கணமாக இருந்தது. அதிலிருந்து கரகாட்டக்காரன் மூலக்கதை தவிர மற்ற காட்சிகளில் முற்றிலும் மாறுபட்டது.

கரகாட்டக்காரன் மக்களை எளிய முறையில் மகிழ்விக்க, நகைச்சுவையை முக்கிய அம்சமாகக் கொண்டு முழுவதும் உருவாக்கப்பட்டது. படத்தின் காட்சி அமைப்புகள் ரசிக்க வைக்கும் வகையில் அழகிய கிராமங்களில் பின்னணியில் இருந்து எடுக்கப்பட்டது.

தற்போது கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மறு வெளியீட்டிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் ஒலி ஒளி அமைப்புகளை மேம்படுத்தும் பணிகள், டிஜிட்டலாக மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.விரைவில் படத்தின் மறு நாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.