ரேட்டிங்(2 / 5)
Karthi - Krithi Shetty - Vaa Vaathiyaarதமிழ் சினிமாவில் சூது கவ்வும் என்ற டார்க் காமெடி திரைப்படம் மூலமாக கவனம் பெற்ற நலன் குமாரசாமி தற்போது வா வாத்தியார் என்ற படத்தை இயக்கி உள்ளார். கார்த்தி, சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ராஜ்கிரண் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். எம்.ஜி.ஆர் இறந்த நாளில் இவருக்கு பேரன் (கார்த்தி) பிறக்கிறார். எம்.ஜி.ஆர் படத்தில் நடிப்பது போல சிறந்த குணத்துடன் வளர்க்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால், பேரன் நம்பியார் கதா பாத்திரத்தின் மீது இன்ஸ்பியராகி தவறான வழியில் பணம் சம்பாதித்து, போலீஸ் வேலையில் சேர்க்கிறார்.
அரசின் தவறுகளை தட்டி கேட்கும் மஞ்சள் குழு என்ற அமைப்பின் மீது அரசு நடவடிக்கை எடுத்து கைது செய்கிறது. ராஜ்கிரண் வேண்டுகோளுக்கு இணங்க பேரன் கார்த்திக்குள் எம்.ஜி.ஆர் வருகிறார்.
பகல் நேரத்தில் நம்பியார் போல் கெட்டவராக இருக்கும் கார்த்தி இரவு நேரத்தில் எம்.ஜி.ஆர் போல் கெட்அப் மாற்றி கொண்டு மஞ்சள் குழுவுக்கு உதவி செய்கிறார். ஒரு கட்டத்தில் போலீஸ் கார்த்தியை நெருங்குகிறது. வாத்தியார் (எம்.ஜி.ஆர்) வெளியே வந்தாரா? என்று சொல்கிறது வா வாத்தியார்.
ஒரே மனிதனுக்குள் நம்பியார், எம்.ஜி.ஆர் இரண்டு பேரும் இருக்கும் கதையை சொன்ன 'நம்பியார்', என்ற படம், ஒரே மனிதனுக்குள் பல கேரக்டர்கள் (Split Personality) இருக்கும் கதைகளை சொன்ன அந்நியன், சந்திரமுகி உட்பட பல படங்கள் இந்த வா வாத்தியார் படம் பார்க்கும் போது நம் நினைவுக்கு வரும். இது பரவாயில்லை, அடுத்தடுத்து என்ன நடக்கும் என நாம் யூகிக்கும் அளவிற்கு திரைக்கதை பலவீனமாக இருக்கிறது. திரைக்கதைக்காகவே சூது கவ்வும் படத்திற்கு பாராட்டு பெற்ற நலன் குமாரசாமி இந்த படத்தையும் இயக்கி உள்ளார் என்பதை நம்ப உள்ளம் மறுக்கிறது.
எம்.ஜி.ஆர் கதை என்பதால் ரொம்ப சிரமப் பட வேண்டியதில்லை என நினைத்து சந்தோஷ் நாராயணன் அப்படியே எம்.ஜி.ஆர் பட பாடல்களை எந்த மாற்றமும் செய்யாமல் தூக்கி வைத்து விட்டார். பாடல்கள் மட்டும் இல்லாமல் பின்னணி இசையும் 1960 கால படங்களின் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது.
படத்தில் பாராட்ட வேண்டிய ஒன் அண்ட் ஒன்லி விஷயம் கார்த்தியின் நடிப்பு தான். எம்.ஜி.ஆர் போன்ற உடல் மொழி, குரல் என பல விஷயங்களை உற்று நோக்கி கவனமாக நடித்து இருக்கிறார் கார்த்தி. ஓவர் ஆல் படத்தை ஓரளவு ரசிக்க முடியும் என்று சொன்னால் கார்த்தி நடிப்பு மட்டுமே.
ஹீரோயின் என்றால் ஹீரோ என்ன செய்தாலும் கூடவே இருப்பார் என்ற சினிமா கதாநாயகி இலக்கணத்தை அப்படியே செய்து இருக்கிறார் கீர்த்தி ஷெட்டி.
வில்லனாக நடித்து கொண்டிருந்த ஆனந்த ராஜ் பல ஆண்டுகளாக காமெடியனாக நடித்து கொண்டிருக்கிறார். காமடியனாக நடித்து கொண்டிருந்தவரை கோமாளியாக மாற்றி இருக்கிறார் நலன் குமாரசாமி. எம். ஜி.ஆர். போல் மேனரிசம் செய்கிறேன் என்ற பெயரில் தனது உருவத்திற்கு பொருத்தமில்லாத கோமாளி சேட்டைகள் செய்து வெறுப்பு ஏற்றுகிறார் ஆனந்த ராஜ்.
வாத்தியார் என்று இன்று வரை மக்கள் நேசிக்கும் இடத்தில் இருப்பவர் எம்.ஜி.ஆர். இவரது டைட்டில்லை பயன்படுத்தும் போது இன்னும் கொஞ்சம் இந்த படத்தின் டீம் உழைத்திருக்கலாம். வா வாத்தியார் - கார்த்தி ரசிகர்களுக்கு பிடிக்கலாம். எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு பிடிக்குமா என்பது சந்தேகமே.

