

சமீப காலத்தில் மலையாள சினிமா ஃபேன் இந்தியா சினிமாவை நோக்கி நகர்கிறது. இந்த வரிசையில் தற்போது ஒரு பான் இந்தியா முயற்சியாக வந்துள்ளது காட்டாளன் (Kattalan) என்ற திரைப்படம். இப்படத்தை பால் ஜார்ஜ் இயக்கி உள்ளார். ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், சுனில், ஜெகதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
கேரள வனப்பகுதிகளில் யானைகளை கொடூரமாக கொன்று அதன் தந்தத்தை வெட்டி எடுத்து வியாபாரம் செய்து வருகிறார் மாரி. இவர் தனக்கு கீழே சுமார் 40 பேர்களை வைத்து அடிமை போல வேலை வாங்குகிறார். இவருக்கு எடி என்ற ஒரு புது வியாபார எதிரி உருவாகிறார். இவரை அடக்கி யானை தங்கத்தை இலங்கைக்கு கடத்த ஆண்டனி என்பவரின் உதவியை நாடுகிறார் மாரி. இந்த ஆண்டனி மாரிக்கு ஒரு வலது கரம் போல் செயல்படுகிறார். இவரது அனைத்து கடத்தல் வேலைகளுக்கும் முன் நின்று நடத்தி வருகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் மாரிக்கும் ஆண்டனிக்கும் பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சினையால் மிகவும் கோபம் கொள்ளும் மாரி ஆண்டனியையும் தன் கீழே உள்ள அடிமைகளையும் முழுமையாக அழிக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறார். இவர் முயற்சி வெற்றி அடைந்ததா என்பதே மீதி கதை.
இந்தப் படத்தில் நாம் பெரிதும் பாராட்ட வேண்டிய—மேலும் முழுமையாக ரசிக்கக்கூடிய—முதல் விஷயம், அதன் ஒளிப்பதிவுதான். ஒளிப்பதிவாளர் ராண டிவ் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியிலும் மிகப் பிரமாதமாக இருக்கிறது. குமுளி பகுதியின் காடுகளும் அதன் மலை கிராமங்களும் மிகவும் நேர்த்தியாகவும் அதே சமயத்தில் மிகவும் சிறப்பாகவும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ரவி பசுவின் இசை மிகவும் சிறப்பாக இருந்தாலும் கே.ஜி.எஃப் படத்தை நினைவுபடுத்துகிறது.
திரைக்கதையும் படம் நகரும் விதமும் முதல் பாதி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. முதல் பாதையில் இந்த படம் வேறு ஏதோ ஒரு வித்தியாசமான ஒரு விஷயத்தை பேசப்போகிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இடைவேளைக்கு பின்பு படம் படுத்து விடுகிறது. இடைவேளைக்குப் பிறகு வெறும் சண்டை காட்சிகள் மட்டுமே இருக்கிறது. ஆனால் அந்த சண்டை காட்சிகளும் பல படங்களில் பார்த்த காட்சிகளையே நமக்கு நினைவூட்டி இருக்கின்றன. முதல் பாதியில் இருக்கும் திரைக்கதையின் வேகம் இரண்டாம் பாதியில் இல்லை.
நடிப்பை பொறுத்தவரையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது சுனில்தான், யானை தந்தம் வெட்டி கடத்தும் கொடூரமான மனிதராக நடிப்பில் சபாஷ் போட வைக்கிறார் சுனில். இவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒன்று செய்யப் போகிறார் என்று ஒரு பயத்தை நமக்குள் விதைத்து விடுகிறார். இருந்தாலும் இவர் நடிப்பின் பாதிப்பில் இவர் புஷ்பா படத்தில் நடித்த பாதிப்பு சற்று தெரிகிறது. இதை சுனில் தவிர்த்து இருக்கலாம்.
இவருக்கு அடுத்தபடியாக நடிப்பில் சபாஷ் போட வைப்பது நாம் ஹீரோ ஆண்டனி வர்கீஸ் தான். மிகவும் அமைதியாக இருந்துவிட்டு ஆக்சன் காட்சிகளில் அதிரடியாக நடித்திருக்கிறார். துஷாரா விஜயன் கையில் துப்பாக்கியை பிடித்துக் கொண்டு சண்டை போடுகிறார். இவர் சில காட்சிகள் மட்டுமே வருகிறார். இவருக்கு நடிக்க பெரிய ஸ்கோப் இல்லை. இருந்தாலும் துஷாரா விஜயனுக்கு மலையாளத்தில் இப்படம் ஒரு என்ட்ரி என்ற அளவில் மட்டுமே சொல்ல முடியும்.
படத்தில் சில காட்சிகள் நன்றாக உள்ளன. யானை தந்தத்தை ஒரு டெட் பாடியில் வைத்தும் கடத்தும் இடத்தில் மிகவும் சிறப்பாக காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோல இன்னும் நான்கு காட்சிகள் படத்தில் இருந்திருந்தால் இந்த படம் ஒரு சிறப்பான ஆக்ஷன் திரில்லர் படமாக வந்திருக்கும். இருந்தாலும் வித்தியாசமான ஒளிப்பதிவு, எடிட்டிங், நமக்குத் தெரியாத யானை தந்தம் கடத்தும் மாபியா போன்ற விஷயங்கள் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் யானை தந்தங்கள் கடத்தலை பற்றி சொல்லும் காட்டாளன் திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக யானை போல் நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் திரைக்கதையில் பூனை போல சுருங்கி விட்டது.