கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள ரகு தாத்தா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் நேரடியாக தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள படம் ரகு தாத்தா. பெரும் வரவேற்பை பெற்ற தி ஃபேமிலி மேன் வெப் தொடருக்கு கதை எழுதிய சுமன் குமார் எழுதி இயக்கியுள்ளார். இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
தமிழகத்தில் இந்தி திணிப்பு விவகாரம் உருவெடுத்து வருகிறது. பலரும் இந்தி திணிப்புக்கு எதிராக ஆதரவு குரல் நீட்டி வருகின்றனர். இதனால் சில நாட்கள் இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ் டேக்குகளும் வைரலாகி வந்தன. இந்த நிலையில் இந்த படமும் இதனை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் என்சிசி மாணவர்களிடம் இந்தியில் சொல்லப்படும் வார்த்தையை புரிந்துகொண்டு பலரும் அதன்படி செயல்பட, கீர்த்தி சுரேஷ் மட்டும் தமிழ்ல சொல்லுங்க சார் என உறுதியாக நிற்கிறார். அடுத்தடுத்த காட்சிகளில் இந்தி திணிப்பு வலுவாக எதிர்க்கப்படுகிறது. இந்த டீசரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கவனம் பெற்றுள்ள நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி ரகு தாத்தா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் ஏற்கனவே அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்தியா படமாக தயாராகி வரும் புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது அதற்கு போட்டியாக களமிறங்க உள்ளதை கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படக்குழு உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.