
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் உருவான ‘கேம் சேஞ்சர்’ என்ற திரைப்படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்திருந்தார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியானது.
லவ் பேர்ட்ஸ் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி வாழ்க்கையில் புது அத்தியாயத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள். அதாவது இவர்கள் இன்ஸ்டாகிராமில் தங்கள் முதல் குழந்தையை விரைவில் எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரின் கைகளில் சிறிய குழந்தை சாக்ஸைப் பிடித்தபடி உள்ள படத்தை இன்ஸ்டாகிராமில் போட்டு, ‘எங்கள் வாழ்வின் மிகப்பெரிய பரிசு. விரைவில் வரும்’ என்ற தலைப்பில் தங்களின் மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டுள்ளனர்.
2021-ம் ஆண்டு வெளியான ‘ஷெர்ஷா’ படத்தில் கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவும் ஜோடியாக நடித்த போது காதலிக்க தொடங்கிய இவர்கள் மீடியா கண்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்தனர். இந்தத் திரைப்படத்தில், சித்தார்த் கேப்டன் விக்ரம் பத்ராவாகவும், கியாரா அவரது காதல் மனைவி டிம்பிள் சீமாவாகவும் நடித்திருந்தார்.
2 ஆண்டுகளாக காதலித்த இவர்கள் 2023-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ராஜஸ்தானின் ஜெய்சல்மரில் நடைபெற்ற இந்த ஜோடியின் திருமணத்திற்கு, கரண் ஜோஹர், ஷாஹித் கபூர், மீரா ராஜ்புத் மற்றும் மனிஷ் மல்ஹோத்ரா உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
இவர்களின் பதிவு இணையத்தில் வைரலானதை தொடர்ந்து திரைவுல பிரபலங்கள் கியாரா, சித்தார்த் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது நடிகை கியாரா அத்வானி யாஷுடன் டாக்ஸிக் என்ற படத்திலும், ஹிருத்திக் ரோஷனுடன் வார் 2 மற்றும் ரன்வீர் சிங்குடன் டான் 3 படங்களில் நடிக்கிறார்.
நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா கடைசியாக சாகர் ஆம்ப்ரே மற்றும் புஷ்கர் ஓஜா இயக்கத்தில் ராஷி கண்ணா மற்றும் திஷா பதானியோட ‘யோதா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது, சித்தார்த் துஷார் ஜலோட்டா இயக்கத்தில் 'பரம் சுந்தரி' படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கும் இந்த படம் ஜூலை மாதம் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மேடாக் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் சித்தார்த் மற்றும் கியாரா இணைந்து நடித்து வருகின்றனர்.
இயக்குநர் கரண் ஜோஹரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சித்தார்த் மல்ஹோத்ரா பின்னாளில் இவரது இயக்கத்தில் ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார்.