கும்கி 2 திரைப்பட விமர்சனம்!
ரேட்டிங்(2.5 / 5)
கும்கி, கயல், மைனா, காடன் என பல பெயர் சொல்லும் படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். தனக்கு 2012 ல் கும்கி திரைப்படத்தில் வெற்றி பெற்று தந்த யானை செண்டிமெண்ட்டை மீண்டும் கையியில் எடுத்து கும்கி 2 படத்தை தந்துள்ளார். இந்த படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
திம்மம் மலை பகுதியில் வாழ்ந்து வருகிறான் சிறுவன் பூமி. இவன் மீது இவனது தாய் தந்தை அன்பு செலுத்தாமல் இருக்கிறார்கள். இதனால் சோகமாகவே இருக்கிறான் பூமி. ஒரு நாள் பள்ளி சென்றுவிட்டு திரும்பும் வழியில் தாயை இழந்த ஒரு குட்டி யானை சேற்றில் மாட்டி கொண்டிருப்பதை பார்கிறான். அதை போராடி மீட்கிறான். அந்த யானைக்கு நிலா என்று பெயர் வைத்து அன்புடன் பழகுகிறான்.
குட்டி யானை வளர்ந்து பெரிய வனானதும் அதை கடத்தி பெரிய தொகைக்கு விற்று விட பூமியின் அப்பாவும், அம்மாவும் திட்டம் போடுகிறார்கள். சில வருடங்கள் கழித்து யானை நிலாவை கடத்தியும் விடுகிறார்கள். இதனால் சோகமாகும் பூமி யானையை பல இடங்களில் தேடி அலைகிறான். ஐந்து வருடம் கழித்து தனது நிலா ஊருக்குள் புகுந்து விடும் காட்டு யானைகளை விரட்டும் கும்கி யானையாக இருப்பதை பார்க்கிறான். ஒரு வழியாக யானையை மீட்டு அழைத்து வருகிறார். வரும் வழியில் யானையை கடவுளுக்கு உயிர் பலி தர விரும்பும் ஒரு பிரபல அரசியல்வாதியின் அடியாகள் பூமியை தாக்கி, யானை நிலாவை பலி கொடுக்கும் இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள். தன் யானையை பூமி மீட்டாரா, என மீதிக்கதை சொல்கிறது.
பதவிக்காக யானையை பலி கொடுக்கும் இதே ஒன்லைனில் ஏற்கனவே விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த படைத்தலைவன் என்ற படமும், ஆரி நடிப்பில் ராஜபீமா படமும் வந்துள்ளது. இந்த இரு படங்களையும் பிரபு சாலமன் பார்த்தாரா? அல்லது பார்க்கவில்லையா என தெரியவில்லை.
'ஒரே போன்ற சிந்தனைகள்' படைப்பாளிகளுக்கு வருவது இயல்பு தான் என்றாலும் சொல்லும் விதத்திலாவது வித்தியாசமாக பிரபு சாலமன் யோசித்து இருக்கலாம். யானைக்கும், சிறுவன் பூமிக்கும் இடையே நடக்கும் பரஸ்பர அன்பின் பரிமாற்றங்கள் மிக அழகாக உருவாக்கபட்டுள்ளது. இது முதல் முப்பது நிமிடங்களுக்கு மட்டும் தான். பிறகு வரும் காட்சிகள் மிக சாதாரணமாகவும், எந்த வித சுவாரசியமும் இல்லாமல் நகர்கிறது.
பிரபு சாலமன் படங்களில் சுகுமாரின் ஒளிப்பதிவு உயிரோட்டமாக இருக்கும். இந்த படத்தில் இது மிஸ்ஸிங். பட தொகுப்பில் சில இடங்களில், Continuity மிஸ் ஆகிறது. மைனா, கயல், கும்கி, தொடரி போன்ற படங்களில் எளிய மனிதர்களின் வாழ்வியல் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கும். இதுவும் இந்த கும்கி 2 வில் நோ.
ஒரு படத்தின் CG ஒர்க் என்பது இது CG என்று திரையில் தெரியாத அளவில் இருக்க வேண்டும். இந்த படத்தில் இது CG என்று சொல்லும் அளவிற்கு பல காட்சிகள் உள்ளன. யானை ஒரு இடத்தில் பெரிதாகவும், இன்னொரு இடத்தில் சிறிதாகவும் உள்ளது. நிவாஸ் கே.பிரசன்னா வின் பின்னணி இசை சில இடங்களில் வசனங்களை கேட்க முடியாத அளவில் உள்ளது.
படத்தில் இது போன்ற குறைகள் இருந்தாலும் ஹீரோவாக நடிக்கும் மதி மற்றும் வில்லனாக நடிக்கும் அர்ஜுன் தாஸ் இருவரின் நடிப்பும் நன்றாக உள்ளது. யானை உடன் இருக்கும் போது மகிழ்ச்சி, இல்லாத போது தவிப்பு இரண்டிலும் ஹீரோ மதி ஸ்கோர் செய்கிறார். அர்ஜுன் தாஸ் அமைதியான வில்லானாக வந்து விட்டு போகிறார்.
நகைச்சுவை என்ற பெயரில் ஆன்ட்ரூஸ் கத்தி கொண்டே இருக்கிறார். அழகான காதல், வன மக்களின் வாழ்வியல், யானைக்கும் மனிதனுக்கும் இடையேயான அன்பு என பல நல்ல விஷயங்களை கும்கி முதல் பாகம் சொன்னது. இது இரண்டாம் பாகத்தில் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது.
கும்கி 2 இது பிரபுசாலமன் படம். ஆனால் பிரபு சாலமன் படம் போல் இல்லை.

