விமர்சனம்: L2: எம்புரான் - பிரம்மாண்டத்தில் கோட்டை கட்டி திரைக்கதையில் கோட்டை விட்ட சேட்டன்கள்!
ரேட்டிங்(2.5 / 5)
மலையாள சினிமா என்றாலே மாஸ், மசாலா விஷயங்கள் இல்லாமல் நேர்த்தியான திரைக்கதை, எளிய கதை மந்தார்கள் போன்ற அழகியல் அம்சங்களை கொண்டதாக இருக்கும். கடந்த 2019 ஆம் ஆண்டு ப்ரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் இந்த விதிமுறைகளை சிறிது மாற்றி ஒரு மாஸ் ஹீரோ படமாக வெளிவந்து வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எம்புரான் என்ற பெயரில் மலையாளம் உடப்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது.
சிறந்த கேரள முதல்வராக வாழ்ந்து மறைந்த PKR என்பவரின் மகன் ஜதின் (டோவினோ தாமஸ்) கேரள முதல்வராக இருக்கிறார். பல்வேறு ஊழல்களை செய்கிறார். வட இந்தியாவை மைய்யமாக கொண்டு செயல்படும் ஒரு இயக்கத்துடன் இணைந்து செயல் படுகிறார். இதனால் வருத்தப்படும் கட்சியினர் 'லூசிபர்' என்று அழைக்கப்படும் ஸ்டீபன் நெடும்பள்ளியை (மோகன் லால்) கேரள அரசியலுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். ஸ்டீபன் நெடும்பள்ளி மீண்டும் கேரளாவிற்கு வருகிறார். என்ன செய்தார் நெடும்பள்ளி என்று சொல்கிறது இந்த இரண்டாம் பாகம்.
இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே படமாக தர வேண்டிய ஒன் லைன் கதையை மூன்று மணி நேரத்திற்கு மேல் ஜவ்வ்வ்வ்வ்வ்வ்வாக... இழுத்து இருக்கிறார்கள். பெரும்பான்மையான காட்சிகளை அதிக செலவில் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். இந்த பிரம்மாண்டத்திற்கு செலுத்திய கவனத்தை சிறிதளவு கூட திரைக்கதை உருவாக்கத்தில் காட்டவில்லை டைரக்டர் பிரிதிவிராஜ்.
மோகன்லால் பிரச்னை இருக்கும் கேரளத்திற்கு வருவதற்கு பதில் இராக், துருக்கி, உத்ரபிரதேசம் என சுற்றி கொண்டிருக்கிறார். ஹீரோ மோகன்லால் அறிமுக காட்சியில் பில்ட் அப் இருந்தால் பரவாயில்லை. ஹீரோ வரும் ஒவ்வொரு காட்சியிலும் யாரவது ஒருவர் ஹீரோவுக்கு பில்டப் செய்து கொண்டே இருக்கிறார். 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், வட இந்திய மத கலவரம், கேரளாவின் இடது சாரி மற்றும் காங்கிரஸ் அரசியல் போன்றவற்றை இந்த படம் தொட்டு செல்கிறது. சரியான கதை அமையாததால் இந்த விஷயங்களை ரசிக்க முடியவில்லை.
ஒளிப்பதிவாளர் சுஜித் வரதேஷ், எடிட்டர் அகிலேஷ் இருவரும் ஒவ்வொரு காட்சியிலும் பிரமாண்டத்தை அள்ளி தந்திருக்கிறார்கள். தீபக் தேவ்வின் இசையும் சிறப்பாக வந்துள்ளது. காட்டிற்குள் நடக்கும் ஒரு சண்டை காட்சியை வித்தியாசமாக வடிவமைத்துள்ளார் மாஸ்டர் சில்வா. கேமரா, ஒப்பனை, எடிட்டிங், சண்டை காட்சி, ஆர்ட் டைரக்ஷன் என அனைத்தையும் இப்படத்தில் சிறப்பாக செய்த சேட்டன்கள் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார்கள்.
தொழில் நுட்ப அம்சங்கள் சிறப்பாக இருந்தும் கதையுடன் இணையாததால் ரசிக்க முடியவில்லை. மோகன்லால் வசனம் பேசி நடித்ததை விட துப்பாக்கி, கத்தியுடன் சண்டை போட்ட காட்சிகள் தான் அதிகம். மஞ்சு வாரியர் சில காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். மற்ற அனைவரையும் விட வில்லன் அர்ஜுன் சிங் நடிப்பு நன்றாக உள்ளது.
மலையாளிகள் மாஸ் மசாலா என்ற பிரம்மாண்டத்திற்குள் நுழையாமல் தங்களுக்கே உரித்தான நேர்த்தியான திரைக்கதை படங்களை தருவதே சிறந்தது என்பதை இந்த எம்புரான் உணர்த்துகிறான்.