விமர்சனம்: வீர தீர சூரன் - கம்பேக் கொடுத்தாரா கோப்ரா, தங்கலான்!

Veera Dheera Sooran Movie Review
Veera Dheera Sooran Movie
Published on

வெளிவருவதற்கு முன்பே பரபரப்பைக் கிளப்பிய படம். சீயான் விக்ரம் தொடர் தோல்விகளுக்குப் பிறகு வெற்றியை எதிர்நோக்கி இருக்கும் படம். சித்தாவின் வெற்றிக்குப் பிறகு புத்துணர்வுடன் இயக்குனர் அருண்குமார் ஒரு புதிய களத்தில் இறங்கியுள்ள படம். மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு, எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன் என நடிப்பில் புதிய பரிமாணம் காட்டக் கூடியவர்கள் இணைந்துள்ள படம். ஒரே இரவில் நடக்கும் கதையுள்ள படம். இப்படி பல எதிர்பார்ப்புகளோடு வந்துள்ள படம் தான் வீர தீர சூரன். காலை, மதியம் காட்சிகள் ரத்து. மாலை வருமா எனத் தெரியவே நான்கு மணிக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு வழியாக இயக்குனர் மாலைக் காட்சிகளிலிருந்து படம் திரையிடப்படும். தாமதத்திற்கு மன்னியுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதெல்லாம் சரி படம் எப்படி.

படக்குழுவினர் பல பெட்டிகளில் சொன்னது போல முதல் காட்சியில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது கதை. தனது கணவனைக் காணவில்லையென ஊரின் பெரியவர் எனச் சொல்லப்படும் ரவி என்பவர் வீட்டில் வந்து முறையிடுகிறார் ஒரு பெண். பெரியவரின் மகன் கண்ணன் (சூரஜ் வெஞ்சாரமூடு) அந்தப்பெண்ணை அடித்து விரட்டி விடுகிறார். அடுத்த காட்சியில் அந்தப் பெண்ணையும் தனது மகளையும் காணவில்லை. அவர்கள் உயிருக்கு ஆபத்து. அதற்குக் காரணம் பெரியவரும் அவரது மகனும் என்று காவல் துறையிடம் முறையிடுகிறார் ஒருவர். காவல்துறை கமிஷனரான அருணகிரி (எஸ் ஜே சூர்யா) தனது பழைய கணக்கைத் தீர்க்க இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த நினைக்கிறார். என்கவுண்டரில் இருவரையும் போட்டுத் தள்ளத்தயாராகிறது காவல்துறை. விஷயமறிந்த பெரியவர் அவரது நம்பிக்கைக்குரிய காளி (விக்ரம்) யின் உதவியை நாடுகிறார். ஒரு மளிகைக்கடை நடத்தி தனது மனைவி கலை (துஷாரா) மக்களோடு வாழ்ந்து வரும் அவருக்கு ஒரு வன்முறையான ஒரு பின்கதை உண்டு. வேண்டாவெறுப்பாக மனைவியின் மறுப்பையும் மீறிப் பெரியவர் சொல்லும் ஒரு வேலையை நடத்த ஒப்புக் கொள்கிறார் விக்ரம். அதன் பிறகு என்ன ஆனது. காளி யார். எஸ் ஜே சூர்யா ஏன் இவர்களைக் கொல்லத் துடிக்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பது தான் கதை.

விக்ரம் நாயகனாக இருந்தாலும் இந்தப் படத்தின் பின்னால் இருந்து ஆயாசமாக ஆகியிருக்கும் மற்றொரு நாயகன் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ். முதல் காட்சியிலிருந்து ஒரு இருண்ட மனநிலையை நமக்குக் கடத்திவிடுகிறார். இவரது பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம். திருவிழாக் கட்சிகளாகட்டும், சண்டைக்காட்சிகளாகட்டும், பரபரப்பு கூட்டும் துரத்தல்களாகட்டும் நின்று விளையாடுகிறார் மனிதர். ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வரும் இவரும் சேர்ந்து சில அமைதியான காட்சிகளைக் கூட அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் சென்று விடுகிறார்கள்.

பரபரவென்று நகரும் முதல் பாதி திரைக்கதை நம்மை நிமிர்ந்து அமர வைக்கிறது. ஒரு முக்கியமான கட்டத்தில் பக்காவான இண்டர்வல் பிளாக் என நாம் நினைக்க அங்கிருந்து பத்து நிமிடங்கள் கழித்து வேறு இடத்தில் அது வரும்போது நமக்குச் சிரிப்பு வந்தாலும் அதுவரை இருந்த சீரியஸான மனநிலையை சட்டென்று மாற்றிச் சப்பென்றாகி விடுகிறது. படத்தில் எல்லாரையும் எல்லாருக்கும் தெரிகிறது. பார்க்கும் நமக்கு மட்டும் தெரியவில்லை. அந்த இடைவேளை பிளாஷ் பாக்கிற்கு பிறகு விவரங்கள் புரிந்து விடுகிறது. நமது சுவாரசியமும் வடிந்து விடுகிறது. பின்னர் கிளைமாக்சில் மட்டுமே கொஞ்சம் சூடு பிடிக்கிறது. இது ஒரு பின்னடைவு என்றே தோன்றியது. இவர்கள் அடித்துக் கொள்வதற்கான காரண காரியங்களிலும் பெரிதாக ஒரு பலம் இல்லை.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: Adolescence - A 'Must See' Series - நச்சுனு நான்கே நான்கு எபிசோட்கள்! நறுக்குன்னு தெறிக்கும் கருத்துகள்!
Veera Dheera Sooran Movie Review

ஊரே பயப்படும், பெரியவர் மற்றும் அவரது மகனின் பூர்வாசிரமக் கதைகள் தெளிவாக விளக்கப் படவில்லை. அதனால் அவர்கள் ஆபத்தானவர்கள். பயங்கரமானவர்கள் என்ற பயமே வரவில்லை. விக்ரமும் மிகப் பெரிய ஆட்டக்காரர். அலட்சியமாகத் துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்றவற்றை கையாளுபவர் என்பதும் தெரிந்து விடுவதால் இதற்கு மேல் இப்படித் தான் போகும் என்று நமக்குத் தெளிவாகத் தெரிந்து விடுகிறது. இவர்கள் அனைவரின் குணமும் மாறிக் கொண்டே இருப்பதால் கதாநாயகன் என்ற ஒரே காரணத்திற்காக விக்ரம் தப்பித்து விடுவார் என்பது மாறுமா என்ன.

வேகமாக நகரும் திரைக்கதை. ஏகப்பட்ட சண்டைக்காட்சிகள் வைக்க இடமிருந்தாலும் கிளைமாக்ஸ் சண்டை மட்டுமே போதும் என்று நினைத்தது இயக்குனரின் சாமர்த்தியம். ஆனால் இடைவேளை வரை அழகாக நகர்த்திக் கொண்டு வந்த திரைக்கதையை பின்பாதியில் அம்போ என்று விட்டு விட்டு முடிவில் சுத்தமாக யோசனையைத் தூக்கி தூர வைத்து விட்டார். அவர் சறுக்கியது இந்த இடத்தில் தான். இதுக்காடா இவ்வளவு நேரம் சுத்த விட்டீங்க என்று தான் தோன்றியது படத்தின் முடிவில். துஷாரா விக்ரமின் காதல் காட்சிகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. தூள் படத்தின் சிங்கம்போலப் பாட்டை இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்கும் பயன்படுத்தியது அந்த நிமிட கைத்தட்டலுக்கு உதவியது அவ்வளவே.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ராமம் ராகவம் - குடும்பத்தில் ஒருவரையே வில்லனாக்கி, பாசப் போராட்டத்தில் நகரும் பொருள் பொதிந்த படம்!
Veera Dheera Sooran Movie Review

பாகம் 2 என்று வெளிவந்தாலும் இதற்கு முதல் பகுதி என்ற விஷயமே இப்படத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. இது மார்கெட்டிங் தந்திரமாக ஒரு ஆர்வத்தைக் கிளப்பும் விஷயமாகத் மட்டும் தான் தெரிகிறது. எஸ் ஜே சூர்யா என்கவுண்டர் குறித்து தனது அணியுடன் பேசும் காட்சி சபாஷ். அதே போல் சூரஜுக்கு ஒரு காட்சி, துஷாராவிற்கு ஒரு காட்சி, விக்ரமிற்கு சில காட்சிகள் (போலீஸ் ஸ்டேஷன் காட்சி நம்பமுடியாமல் இருந்தாலும் ஒரு மாஸ் மொமென்ட்) எனக் குறிப்பிட்டுச் சொல்லும் காட்சிகள் உண்டு.

வந்தே பாரத் போன்ற முதல் பாதி. எக்ஸ்பிரஸ் வேகத்தில் இரண்டாம் பாதி. பேஸஞ்சர் வேகத்தில் பார்த்துப் பழகிய கிளைமாக்ஸ் என்று கலவையாக வந்திருக்கும் வீர தீர சூரன் எதிர்பார்ப்போடு ஆரம்பித்து ஏமாற்றத்தோடு முடிகிறது. அந்த விதத்தில் சூப்பர் என்றும் சொல்ல முடியாமல், சுமார் என்றும் சொல்ல முடியாமல் நடுவில் ஓகேப்பா என்ற நிலையில் பயணித்து விட்டது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ட்ராமா - ஒரு எச்சரிக்கை மணி!
Veera Dheera Sooran Movie Review

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com