விமர்சனம்: லாந்தர் - வெளிச்சம் குறைவு!
ரேட்டிங்(2.5 / 5)
கடந்த சில ஆண்டுகளாகவே மலையாள சினிமா பல்வேறு வித்தியாசமான திரில்லர் படங்களைத் தந்து வருகிறது . இது போன்ற படங்கள் கேரள எல்லையைத் தாண்டி மற்ற மாநிலங்களிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தற்சமயம் தமிழ் சினிமாவிலும் பல இளம் இயக்குநர்கள் திரில்லர் படங்களைத் தந்து வருகின்றனர் . ராட்சசன், போர் தொழில் போன்ற சில திரில்லர் படங்கள் வெளியாகி இங்கே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு கதை வெற்றி பெற்றால், அதேபோல் திரைப்படங்கள் எடுப்பது தமிழ் சினிமாவில் வாடிக்கை. இப்போது த்ரில்லர் வகை படங்கள் தமிழில் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. விதார்த் நடிப்பில், ஷாஜி சலீம் இயக்கத்தில், ‘லாந்தர்’ என்ற திரில்லர் படம் வெளியாகி உள்ளது.
கோவை மாநகரில் உதவி காவல் ஆணையராக இருக்கும் அரவிந்த் (விதார்த்) மிக நேர்மையான அதிகாரி. கோவை மாநகரில் ஒரு நாள் இரவில் கருப்பு ரெயின் கோட் போட்ட ஒரு சைக்கோ மனிதன் ஒரு ஆயுதத்தை பயன்படுத்தி கண்ணில் படுவோரை எல்லாம் அடித்து கொலை செய்து வருகிறான். இவனைப் பிடிக்கும் முயற்சியில் சில காவல் அதிகாரிகளும் படுகாயம் அடைகிறார்கள். ஒருவனை சந்தேகப்பட்டு விரட்டி செல்கிறது காவல் துறை. விரட்டிச் செல்லும்போது அந்த நபர் காவல் துறையினரின் வாகனம் மோதி இறந்து விடுகிறார். ஆனால், இவர் கொலைகாரன் இல்லை என்று தெரிய வருகிறது. பட்டுக்கோட்டையில் கொலைகாரனுக்கு ஒரு லீட் கிடைக்கிறது. இந்த லீடை வைத்து ஒரு பயணம் செய்கிறது காவல் துறை. அந்த கொலையாளியை பிடிக்க காவல் துறையால் முடிந்ததா என்பதுதான் மீதி கதை.
படம் தொடங்கியதும் மிக வேகமாக நகர்கிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக நகர்கிறது திரைக்கதை. அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பு படம் பார்க்கும்போது ஏற்படுகிறது. வெயிட், வெயிட்... ரொம்ப கற்பனை பண்ணாதீங்க. நான் சொன்ன விஷயங்கள் எல்லாம் இடைவேளை வரைக்கும்தான். பாப்கார்ன் வாங்கிட்டு வந்து இடைவேளைக்கு பின் உட்கார்ந்து பார்த்தால் நாம நினைச்சது ரொம்ப தப்பு என்ற ரேஞ்சில் படம் செல்கிறது. இரண்டாவது பாதி ஆரம்பித்த உடனேயே கொலைகாரன் யார் என்று சொல்லிவிடுவதால் படத்தில் சுவாரசியம் குறைந்து விடுகிறது. சரி பரவாயில்லை, இதன் பிறகாவது ஏதாவது ட்விஸ்ட் இருக்குமா என்று பார்த்தால் அதுவும் பெரிதாக இல்லை. பிளாஷ் பேக் காட்சிகள் பல படங்களில் பார்த்த விஷயங்களை நினைவு படுத்துகிறது.
படத்தை ஓரளவு ரசிக்க வைப்பதற்கான காரணங்களாக இருப்பது ஞானசௌந்தரின் ஒளிப்பதிவும், பிரவீனின் இசையும்தான். இரண்டும் மிக சிறப்பாக இருக்கிறது. விதார்த் போலீஸ் அதிகாரியாகவும், ஒரு அன்பான கணவனாகவும் நன்றாக நடித்துள்ளார். சஹானா, ஸ்வேதா என இரண்டு ஹீரோயின்கள் படத்தில் இருந்தாலும் சிறப்பான நடிப்பை தந்திருப்பது மஞ்சுவாக நடித்திருக்கும் சஹானாதான். காதல், மன அழுத்தம், கோபம் என பல உணர்வுகளை சிறப்பாகத் தந்துள்ளார்.
விதார்த் படம் என்றால் வித்தியாசமான கதை இருக்கும், படம் மிக சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் படம் பார்க்க வந்தவர்களை ஏமாற்றி விட்டது இந்த, ‘லாந்தர்’ என்றே சொல்லலாம். திரில்லர் படத்திற்குத் தேவையான டீடைல் மற்றும் ட்ரீட்மென்ட் இப்படத்தில் குறைவாகவே உள்ளது. திரைக்கதை சரியாக இருந்திருந்தால் இந்த ‘லாந்தர்’ வெளிச்சம் தந்திருக்கும்.