லியோ விமர்சனம்!
'எங்கோ பார்த்த ஞாபகம் '(4 / 5)
ரசிகர்களன் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடித்த லியோ படம் வெளியாகி உள்ளது.
ஹிமாசல் பிரதேஷ் பகுதியில் காபி ஷாப் வைத்து நடத்துபவர் பார்த்திபன் (விஜய் ) மனைவி, மகன், மகள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.தன் மகளை கொல்ல நினைக்கும் சிலரை கொன்று விடுகிறார் பார்த்திபன்.கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் பார்த்திபனை துரத்துகிறார்கள். அனைவரையும் பந்தாடி விடுகிறார் பார்த்திபன்.காபி கடை நடத்தும் ஒருவருக்கு துணிச்சல் எப்படி வந்தது? இவர் பார்த்திபன் இல்லை 1999 ஆம் ஆண்டில் இறந்த போன லியோ தாஸ் என்கிறது ஒரு கேங் ஸ்டர் குழு.
பார்த்திபன் யார் என்ற தேடலில் வழியில் கதை நகர்கிறது. பல படங்களின் தழுவல்களை வைத்து அட்லீ மட்டும் தான் படம் எடுக்க வேண்டுமா என்ன? நானும் எடுப்பேன் என படம் தந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். 1989ல் வெளியான கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வெற்றி விழா கதையை கொஞ்சம் அப்படியும், இப்படியும் மாற்றி தந்துள்ளார் லோகேஷ். இந்த ஒரு படம் மட்டும் இல்லை பல படங்களை பார்த்து 'இம்ப்ரெஸ் 'ஆகி விட்டார் டைரக்டர்.படத்தில் வரும் கழுகு அடையாளமும் நர பலியும் கே. ஜி. எப் படத்தை நினைவுபடுத்துகின்றன.
லோகேஷ் கனகராஜ் விக்ரம் -2 படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் நடித்த துணை நடிகர்கள் பட்டாளத்தை அப்படியே அழைத்து வந்து விட்டார் போல தெரிகிறது. விக்ரம் படத்தின் இறுதி காட்சியில் வரும் கேங்ஸ்டர் கும்பலை போல இந்த படத்திலும் ரௌடி கும்பல் நின்று கொண்டிருக்கிறார்கள். எதிரிகளை வீழ்த்த பல படங்களில் நாய், யானை போன்ற விலங்குகளை பயன் படுத்துவார்கள். லோகேஷ் கொஞ்சம் 'வித்தியாசமாக' யோசித்து கழுதை புலியை பயன்படுத்தி உள்ளார்.
இந்த கழுதை புலிக்காக கதை களத்தை ஹிமாசலில் வைத்திருப்பார் போல் தெரிகிறது. படத்தில் விஜய்க்கு நடுத்தர வயது என்கிறார்கள் ஆனால் ஒரு வயதான மனிதரை போல் ஒப்பனை செய்துள்ளார்கள். பழைய படங்களில் வில்லனை காட்ட முகத்தில் ஒரு மரு வைத்துருப்பார்க்கள். விஜய்யின் நரைத்த முடி மேக் அப்பை பார்த்தால் இந்த மரு நினைவுதான் வருகிறது. விஜய் அழும் போதும், தான் லியோ இல்லை என உணர்த்த போராடும் போதும் சிறந்த நடிப்பை தந்துள்ளார். திரிஷா ஒரு நடுத்தர வயது தாயாக மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார். சஞ்சய் தத், அர்ஜுன் என இரண்டு வில்லன்கள் இருந்தும் நம்மை பயமுறுத்த மறுக்கிறார்கள்.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு சண்டை காட்சிகளிலும், ஹிமாசலின் அழகையும் அற்புதமாக காட்சிப்படுத்தி உள்ளது. அனிருத் இசையில் நான் வரவா பாடல் மட்டும் ஆட்டம் போட வைக்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே இது பல படங்களில் சொல்லப்பட்ட 'திருந்தி வாழும் ஒரு ரவுடி' கதை என்பது தெரிந்து விடுவதால் சுவாரசியம் குறைந்து விடுகிறது. படத்தின் கிளைமேக்ஸ் முடிந்து பின் '"லியோ நீ அழிக்க வேண்டியது இன்னமும் இருக்கு "என்று போன் கால் மூலமாக அடுத்த பார்ட்டுக்கு டைரக்டர் லீட் தரும் போது ரசிகர்களுக்கு 'பகீர் 'என்ற உணர்வு வருவதை உணர முடிந்தது. டைரக்டர் சார் கேங்ஸ்டர்களை கொஞ்சம் நாளைக்கு விட்டு விடுங்க. அவங்க வேலை பார்க்கட்டும். கேங்ஸ்டர்ஸ் பாவமில்லையா?