விக்னேஷ் சிவனின் எல்.ஐ.சி பட டைட்டில் மாற்றம்... புது பெயர் என்ன?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. 2019ஆம் ஆண்டு வெளிவந்த 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த அந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. கால மாற்றம் மற்றும் டெக்னாலஜி மாற்றம் மனித வாழ்க்கையை எப்படி மாற்றி வருகிறது எனும் மெசேஜை நகைச்சுவையுடன் தந்து பாராட்டு பெற்றார் பிரதீப் ரங்கநாதன்.
இதனையடுத்து சில வருட இடைவெளியில் பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கிய குறும்படத்தையே அடிப்படையாக்கி 'லவ் டுடே' எனும் படத்தை இயக்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இவானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குநரான பிரதீப் ரங்கநாதனே இதில் ஹீரோவாகவும் நடித்தார். இந்தப் படம் அவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. படம் திரையரங்குகளீல் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து தமிழ்த்திரையுலகில் கவனம் பெற்று முன்னணி நடிகராகவும் வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
அதே போன்று போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அப்படத்திற்கு பின்னர் அவர் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரெளடி தான் திரைப்படம் விக்னேஷ் சிவனின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தின் போது அவர் முதன்முதலில் நயன்தாராவை சந்தித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து தற்போது இருவரும் திருமணமும் செய்துகொண்டு கணவன், மனைவியாக வாழ்கின்றனர். இந்த 2 மாஸான இயக்குனர்களும் தற்போது ஒன்றிணைந்துள்ளனர்.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்து டிராப் ஆன எல்.ஐ.சி என்கிற படத்தை தான் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கி உள்ளார் விக்கி. இப்படத்திற்கு எல்.ஐ.சி என பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது அதன் தலைப்பை மாற்ற விக்கி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வருகிற ஜூலை 25-ந் தேதி பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளன்று வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.