Lineman movie review
Lineman movie review

விமர்சனம்: லைன்மேன் - அங்கீகாரத்தை தேடும் ஒரு இளைஞனின் போராட்டம்!

Published on
ரேட்டிங் (3 / 5)

நம் இந்திய நாட்டில் திறமைக்கும், உழைப்புக்குமான சரியான அங்கீகாரத்தை தேடும் இளைஞர்கள் பலர். தனது கண்டு பிடிப்புக்கான அங்கீகாரத்தை தேடும் ஒரு மனிதனின் போராட்டத்தை சொல்லும் படமாக வந்துள்ளது 'லைன்மேன்'.

இப்படம் ஆஹா OTT  தளத்தில் வெளியாகி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு  தமிழ் நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை உதயகுமார் இயக்கி உள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் எந்த வசதியும் இல்லை. ஊரில் உள்ள பெரும்பான்மையான மக்கள் உப்பள தொழிலை நம்பி வாழ்கிறார்கள்.  இந்த பகுதியில் மின்சார துறையில் லைன் மேனாக இருக்கும் சப்பையாவின் (சார்லி ) மகன் செந்தில் (ஜெகன்). செந்தில் எலட்ரிக்கல் படித்து விட்டு பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறார். தெரு விளக்குகள் சூரிய வெளிச்சம் பட்டவுடன் அணைந்து விடுவது போலவும், சூரிய வெளிச்சம் மறைந்தவுடன் விளக்குள் எரிவது போலவும் ஒரு சாதனத்தை கண்டு பிடிக்கிறார். இதன் மூலம் மின்சாரத்தை  சிக்கனப்படுத்த முடியும் என்பதால் இதற்கான அங்கீகாரத்தை பெற பல அரசு அலுவலகங்களின் கதவை தட்டுகிறார். லஞ்சம், மெத்தனமாக நடந்து கொள்ளுதல்  என அரசு இயந்திரங்கள் வழக்கம் போல செந்திலின் கண்டு பிடிப்பை கண்டு கொள்ளாமல் இருக்கின்றன. முதல்வரை பார்க்க முயற்சி செய்தும் முடியாமல் போக, விரக்தி அடையும் செந்தில், தலைமை செயலகம் முன்பு அரசுக்கு அனுப்பிய மனுக்களை தூக்கி வீசுகிறார். இதனால் செந்தில் கைது செய்யப்படுகிறார். இவரும், இவரின் கண்டு பிடிப்புகளும் என்ன ஆனது என்று சொல்வது தான் லைன் மேன்.

உப்பள தொழிலாளர்கள், உப்பளம், டீக்கடை, கிராமத்து தபால்காரர் என கதை மாந்தார்கள் வழியே படம் ஒரு கவிதை போல் செல்கிறது. குறைந்த முதலீட்டு படம் என்பது காட்சி ஊருவாக்கத்தில் தெரிகிறது. சிறிய பட்ஜெட் படங்களின் முதல் தேர்வாக சார்லி இருக்கிறார். நம் பகுதியில் நாம் பார்க்கும் ஒரு சராசரி லைன் மேனை நடிப்பில் கண் முன் கொண்டு வருகிறார். ஊர் மக்களுக்காகவும், மகனுக்காகவும் பேசும் போது, அவரது பல வருட அனுபவம் நடிப்பில் தெரிகிறது. ஜெகன் பாலாஜி, முதல் படம் என்று தெரியாத அளவுக்கு நடிப்பை தந்திருக்கிறார். 'புறக்கணிப்பின் வழி 'எப்படி இருக்கும் என நடிப்பில் தெரிய வைக்கிறார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ஜாலியோ ஜிம்கானா - பேரில் மட்டுமே ஜாலி; திரையில் சிரிப்பு காலி!
Lineman movie review

படத்தின் இரண்டாவது பாதியில் திரைக்கதை கந்துவட்டி, தற்கொலை என ட்ராக் கொஞ்சம் மாறுவது கதைக்கு தேவையற்றதை பேசுவது போல் உள்ளது. விஷ்ணு கே.குமாரின் ஒளிப்பதிவில் உப்பள காற்றின் வெப்பத்தை உணர முடிகிறது. சிவராஜின் படத் தொகுப்பு இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம்.

இப்படத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும் படத்தை ரசிக்க முடிகிறது. 'பள்ளி மாணவர் இந்த புதிய கருவியை கண்டு பிடித்தார். அந்த கல்லூரி மாணவரின் இந்த கண்டுபிடிப்பு மிக சிறப்பாக உள்ளது' என்பது போன்ற செய்திகள் அடிக்கடி செய்தித்தாள்களில் பார்க்கிறோம். சில வருடங்கள் கழித்து இந்த கண்டு பிடிப்புகளும், இந்த மாணவர்களும் எங்கே இருக்கிறார்கள் என்று நமக்கு தெரிவதில்லை. லயன் மேன் படத்தில் வரும் செந்தில் போல் அங்கீகாரத்திற்கு போராடி கொண்டிருக்கலாம். இவர்கள் அனைவருக்கும் இந்த படம் ஒரு சமர்ப்பணம்.

logo
Kalki Online
kalkionline.com