
தமிழ் சினிமாவில் ரசிகர்களை மகிழ்விக்க வாரந்தோறும் புதுப்புது படங்கள் திரையிடப்படுகின்றன. இதனாலேயே வெள்ளிக்கிழமை என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏனெனில் அடுத்து வரும் விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் குடும்பத்துடன், நண்பர்களுடன் புதுப்படத்தை பார்த்து என்ஜாய் பண்ண முடியும் என்பதால் தான். அந்தவகையில் நாளை 21-ந்தேதி 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இதில் ‘டிராகன்’ மற்றும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’:
நடிகர் தனுஷ் பவர் பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ராயன், 3-வதாக 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேலும் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
'டிராகன் ':
அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
‘ராமம் ராகவம்’:
பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் தனராஜ் கொரனானி இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். இவர்களுடன் சத்யா, பிரமோதினி ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை செஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
‘படவா’:
கே.வி.நந்தா இயக்கிய இப்படத்தில் விமல், சூரி, ஸ்ரீதா, கேஜிஎஃப் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், செந்தில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை - ஜான் பீட்டர். தயாரிப்பு - ஜே ஸ்டூடியோ இண்டர்நேஷனல். இத்திரைப்படம் 6 ஆண்டுகளுக்கு முன் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘கெட் செட் பேபி’:
வினய் கோவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் உன்னி முகுந்தன், நிகிலா விமல் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் செம்பன் வினோத் ஜோஸ், ஜானி ஆண்டனி, மீரா வாசுதேவன், ஷியாம் மோகன், சுரபி லட்சுமி ஆகியோரும் நடித்துள்ளனர். ஒய்வி ராஜேஷ் மற்றும் அனூப் ரவீந்திரன் திரைக்கதை எழுதியுள்ளனர். சாம் சிஎஸ் இசையமைக்க, ஒளிப்பதிவு அலெக்ஸ் ஜே புலிக்கல்.
‘பிறந்த நாள் வாழ்த்து’:
ராஜு சந்திரா எழுதி இயக்கி, பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரித்துள்ள இந்த படத்தில் அப்புக்குட்டி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். ஐஸ்வர்யா அனில் கதாநாயகியாகவும், ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜி மேத்யூ முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். நவநீத் இசையமைத்துள்ளார்.
‘ஈடாட்டம்’:
சக்தி அருண் கேசவன் தயாரிக்கும் இப்படத்தை கதையெழுதி இயக்கியிருக்கிறார் ஈசன். நடிகர் ஸ்ரீ கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இப்படத்தில் வெண்பா, அனுகிருஷ்ணா, தீக்ஷிகா ஆகிய மூன்று பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜா, விஜய் விசித்திரன், காதல் சுகுமார், பவர் ஸ்டார், பூவிலங்கு மோகன், விஜய் சத்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்துள்ளார்.
ஜீத்து அஷ்ரஃப் இயக்கத்தில் ஆபீஸர் ஆன் டூட்டி, வி.கே. பிரகாஷ் இயக்கத்தில் விஷ்ணு பிரியா மற்றும் ரிஷி இயக்கத்தில் பல்லாவரம் மனை எண் 666 ஆகிய படங்களும் நாளை திரையரங்குகளில் வெளிவர உள்ளது.