
நமது திறமையை நிரூபிக்க வேண்டுமெனில் தகுந்த நேரத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். சிலருக்கு எளிதாக கிடைக்கும் வாய்ப்பு, மற்ற சிலருக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது. சிலருக்கு எதிர்பாராமல் கூட இந்த வாய்ப்பு கிடைக்கும். அப்படி ஒரு வாய்ப்புதான் நடிகர் லிவிங்ஸ்டன் தமிழ் சினிமாவில் நடித்ததற்கே காரணம். அவருக்கு கிடைத்த வாய்ப்பு என்ன? வாய்ப்பைக் கொடுத்தவர் யார் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திரம், காமெடி, கதாநாயகன் மற்றும் வில்லன் என பல கதாபாத்திரங்களில் கலக்கியவர் நடிகர் லிவிங்ஸ்டன். இயக்குநராகும் ஆசையில் சினிமாவை நோக்கிப் பயணித்த லிவிங்ஸ்டனை, நடிகராக அரவணைத்துக் கொண்டது தமிழ் சினிமா. இருப்பினும் நடிகராவதற்கு அவர் முயற்சிக்கவே இல்லை. தமிழ் சினிமாவின் ஒரு மாஸ் நடிகரின் மூலம் தானாக கிடைத்த வாய்ப்பு அது. எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட லிவிங்ஸ்டன், தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி பல ஆண்டுகள் சினிமா துறையில் நிலைத்து நின்றார்.
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த். ஒருமுறை கேப்டனை சந்தித்து கதை சொல்ல லிவிங்ஸ்டன் சென்றுள்ளார். இவர் சொன்ன கதை கேப்டனுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே தனது நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தருக்கும் இந்தக் கதையைச் சொல்ல சொல்லியிருக்கிறார் கேப்டன். லிவிங்ஸ்டன் கதை சொன்ன விதம் அனைவருக்கும் பிடித்து விட்டது. அந்த சமயத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் செந்தில்நாதன் இயக்கத்தில் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
இப்படத்தில் ராம்குமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழுவினர் யாரைத் தேர்வு செய்வது என குழப்பத்தில் இருந்தனர். அப்போது லிவிங்ஸ்டன் இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என கேப்டன் விஜயகாந்த் கூறினார். இத்திரைப்படம் 1988 ஆம் ஆண்டு திரைக்கு வந்து 175 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. கதை சொல்லி, இயக்குநராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கலாம் என்றிருந்த லிவிங்ஸ்டன், கேப்டனின் உதவியால் நடிகராக மாறி விட்டார்.
ஒருவேளை அவர் நடிக்காமல் இயக்குநராகி இருந்தால், இன்று பலருக்கும் லிவிங்ஸ்டனைத் தெரிந்திருக்காது. பூந்தோட்ட காவல்காரன் படத்தில் நடித்த பின்பு, இவருக்கான சினிமா வாய்ப்புகள் குவிந்தன. இதனால் காமெடி, வில்லன் மற்றும் ஹீரோ என பல படங்களில் நடித்து அசத்தினார். தொடக்கத்தில் சினிமாவிற்காக தனது பெயரை ராஜன் எனப் பயன்படுத்தி வந்தார்.
கன்னி ராசி, காக்கிச்சட்டை, அறுவடை நாள் மற்றும் சுந்தர புருஷன் போன்ற பல படங்களில் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் வானத்தைப் போல, வாலி, கேப்டன் பிரபாகரன், சொல்லாமலே, பிரியமான தோழி மற்றும் வேங்கை உள்ளிட்ட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் லிவிங்ஸ்டன். கடைசியாக டாணாக்காரன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்சமயம் வெள்ளித்திரை வாய்ப்புகள் குறைந்த நிலையில், சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார் லிவிங்ஸ்டன்.