
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் சுனில் தத் மற்றும் புகழ்பெற்ற நடிகை நர்கிஸ் தத்தின் மகனுமாவார். சிறு வயதிலேயே சினிமாவில் நுழைந்த சஞ்சய் தத்தின் முதல் படமான 'ராக்கி' மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவர் நடித்த விதாதா, கல்நாயக், மிஷன் காஷ்மீர், முன்னாபாய் எம்பிபிஎஸ், லகே ரஹோ முன்னாபாய் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டானவை.
சஞ்சய் தத் குறைவான படங்களில் நடித்தாலும் அனைத்தும் பெரிய அளவில் வெற்றி பெற்றவை. சஞ்சய் தத் பயோபிக் படமான 'சஞ்சு' கூட ₹950 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்து பெரிய சாதனை செய்தது. உலகில் எந்த நடிகரின் பயோபிக் படமும் இந்தளவுக்கு வெற்றி பெற்றதில்லை. பாலிவுட் படங்களில் சல்மான் கானுக்கு அண்ணனாக நடிக்கும் சஞ்சய் தத் , சர்ச்சையில் சிக்குவதிலும் சிறை தண்டனை பெற்றதிலும் அவருக்கு அண்ணனாகவே இருக்கிறார்.
சமீப காலங்களில் ஹிந்தி திரையுலகை தாண்டி கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் அவர் நடிக்க தொடங்கியுள்ளார். சஞ்சய் தத் வில்லனாக நடித்த கேஜிஎப் திரைப்படம் பெரிய வெற்றி பெற்றதால், அவர் வில்லனாக நடித்தால் படம் பெரிய வெற்றி பெறும் என்று செண்டிமெண்டாக நினைக்கின்றனர். சமீபத்தில் கன்னட நடிகர் துருவ் சார்ஜாவின் கேடி: தி டெவில் படத்தில் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அப்போது சஞ்சய் தத் வெளியிட்ட ஒரு கருத்து இப்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
டீஸர் வெளியிட்டு விழாவில் சஞ்சய் தத்திடம் தமிழ் நடிகர்களான ரஜினி மற்றும் கமல் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சஞ்சய், "நான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை மதிக்கிறேன், அவர்கள் எனக்கு சீனியர்கள், நான் அவர்களைப் பார்த்து அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன். நான் ரஜினிகாந்துடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளேன். அவர் மிகவும் பணிவாக பழகக் கூடிய நபர்.
அது போல நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கவும் நான் விரும்பினேன். விஜய்யுடன் பணிபுரிய எனக்கு பிடித்து இருந்தது. ஆனால் , லோகேஷ் கனகராஜ் மீது எனக்கு கோவம் வருகிறது. அவர் லியோ படத்தில் எனக்கு பெரிய வேடத்தை கொடுக்காமல் என்னை வீணடித்து விட்டார். எனக்கு நடிகர் அஜித்தையும் பிடிக்கும், அவர் என் நெருங்கிய நண்பர்" என்று கூறினார். சஞ்சய் தத்தின் இந்த பேட்டி தற்போது வைரலாக நாடு முழுக்க சுற்றுகிறது.