

பவிஷ் நடிப்பில் புதுமை: ஒரு புதிய காதல் படம் நாயகனின் வருகை!
மகேஷ் ராஜேந்திரன் டைரக்ஷனில் பவிஷ் நாராயண்,நாகதுர்கா, செல்வராகவன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் லவ் ஓ லவ்.
கதை
மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார் பவிஷ். இவரது அப்பா கே. எஸ். ரவிக்குமார் மகன் மீது அன்பாக இருக்கிறார். அப்பா, தங்கை, அம்மா என ஒரு அமைதியான, அன்பான வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் பவிஷ். காதல் வந்துவிட்டால் இந்த மகிழ்ச்சி எல்லாம் மறைந்து விடும் தானே? ஆம்.. பார்த்தவுடன் பிடித்துப் போன நாகதுர்காவை காதலிக்கிறார் பவிஷ். நாகதுர்காவோ பவிஷ் பர்சை பதம் பார்க்கிறார். நாக துர்காவின் காதலுக்காக நிறைய செலவு செய்கிறார் பவிஷ். இதனால் பல இடங்களில் கடன் வாங்கி கடனாளியாகி விடுகிறார்.
ஒரு சிறு பிரச்சனையில் பவிஷ் குடும்பத்தை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நாகதுர்காவின் தாய் அவமானப்படுத்துகிறார். இதனால் நாக துர்காவினுடைய காதலை மறக்க முடிவெடுக்கிறார் பவிஷ். இருந்தாலும் நாக துர்கா பவிஷ் மீது உண்மையான காதலில் இருப்பதாக சொல்கிறார். இதைக் கேட்கும் பவிஷ் இதை நிரூபிக்க "உன்னால் நான் கடனாளி ஆனேன், என்னுடைய மாத இஎம்ஐ அனைத்தையும் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் உன் காதலை ஏற்றுக் கொள்கிறேன்”, என்கிறார். நாக துர்காவும் இதை சரி என்று ஒப்புக்கொள்கிறார். இறுதியில் என்ன ஆனது என்று சொல்கிறது லவ் ஓ லவ்.
திரைக்கதை
இந்த படத்தின் கதையானது சில ஆண்டுகளுக்கு முன்னால் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படத்தின் கதையை ஒத்திருக்கிறது. 'படைப்பாளிகள் சிந்தனை ஒன்று போல் இருக்கலாம்' தவறு இலலை , என நாம் முடிவுக்கு வந்தால் கூட படம் நகரும் விதம் எந்த விதத்திலும் சுவாரசியத்தை தரவில்லை. போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் அனைத்துமே மிகுந்த நாடகத் தன்மை கொண்டதாக உள்ளது. ஹீரோவிற்கு ஆக்சன் சீன் வரவேண்டும் என்பதற்காகவே வலுக்கட்டாயமாக சண்டைக் காட்சியை திணித்திருக்கிறார் இயக்குனர்.
ஹீரோ பவிசின் கேரக்டர் நன்றாக உருவாக்கப்பட்டிருந்தாலும், ஹீரோயின் நாகதுர்கா கேரக்டர் சரியாக உருவாக்கப்படவில்லை. கிரெடிட் கார்டு, இஎம்ஐ, தனிநபர் கடன் இவையெல்லாம் வாங்கக்கூடாது என்ற அறிவுரையை சரியான களத்தில் சொல்லாததால் இதன் பாதிப்பு என்ன என்பதை நம்மால் முழுமையாக உணராமல் போய்விடுகிறது. தனக்கு செலவு செய்த பணத்தை கேட்கும் காதலன், அதற்கு மீண்டும் செலவு செய்யும் ஹீரோயின் என்ற ஒன்றை சரியான திசையில் நகர்த்த தவறிவிட்டார் டைரக்டர். படத்தில் வரும் காதல் காட்சிகளை பார்க்கும் 90களில் வந்த காதல் திரைப்படங்களின் காட்சிகளை பார்ப்பது போல் உள்ளது.
வசனம்
காவல்துறை அதிகாரியாக வரும் செல்வராகவனின் வசனம் சற்று ரசிக்க வைக்கிறது "உங்க பிரச்சனையில் என்னை ஏண்டா மாட்டி விடுறீங்க" என்று செல்வராகவன் கேட்கும் இடம் மற்றும் "உன்கிட்ட வாங்குன கடனை இன்னொருத்தன் கிட்ட உன் நண்பன் கடன் வாங்குவான். இதெல்லாம் வேண்டாம்" என்று கே. எஸ். கே எஸ் ரவிக்குமார் சொல்லும் இடமும் வசனங்களில் சிறப்பு.
நடிப்பு
பவிஷ் நடிப்பில் வசன உச்சரிப்பில் தனுசை நினைவுபடுத்துகிறார். நடிப்பில் தனது பாணியை மாற்றிக் கொண்டால் இன்னொரு தனுஷ் போன்று பவிஷ் உருவாகலாம். இருந்தாலும் இவரது நடிப்பை ரசிக்க முடிகிறது. ஹீரோயின் நாக துர்கா நன்றாக நடித்து இருக்கிறார் இருந்தாலும் ஸ்கிரீனில் பார்க்கும்போது பவிசை விட வயது மூத்தவராக தெரிகிறார்.
கே. எஸ். ரவிக்குமார் பையனிடம் அதீத அன்பு செலுத்தும் இடத்திலும் பையன் ஏமாற்றிய பிறகு மனமுடைந்து ஒதுங்கி செல்வதும் நன்றாக உள்ளது. வனிதா விஜயகுமார் வசனங்கள் பேசும் போது நாம் ரசிப்பதற்கு பதிலாக இரிடேட் ஆகிறோம்.
இசை
பாக்சனின் இசையில் பாடல்கள் எதுவும் கேட்கும் படி இல்லை இருந்தாலும் இவர் பாடலுக்கு ஒரு இடத்தில் பவிஷ் ஆடும் நடனம் நன்றாக உள்ளது.
கடைசியாக…
'காதலுக்காக அன்பை தேடலாம். கடனை தேடக்கூடாது' என்ற நல்ல விஷயத்தை டைரக்டர் சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால் சொன்ன விதத்தில் ஒரு தெளிவும், ஆழமும் இல்லாததால் இந்த லவ் ஓ லவ் ஒரு முழுமையான காதல் திரைப்படமாக உருவாகவில்லை.
கதையின் பலவீனங்களை அறிந்துகொள்வதன் மூலம், ஒரு திரைப்படம் தரமாக இருக்கத் தேவையான திரைக்கதை நுணுக்கங்கள் மற்றும் நடிகர்களின் தேர்வு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்துகொள்வீர்கள்.