Pritam and Pedro: ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான புதிய காமெடி த்ரில்லர் சீரிஸ் – முழு விமர்சனம்!

ராஜ்குமார் ஹிரானியின் ஆல்-இன்-ஆல் மேஜிக்; ஹேக்கிங் பின்னணியில் வீர் ஹிரானி, அர்ஷத் வர்சி, விக்ராந்த் மஸ்ஸியின் மிரட்டல் நடிப்பு.
Pritam and Pedro OTT review
Pritam and Pedro OTT reviewSOURCE:JIOHOTSTAR
Updated on

PK (2014), Sanju (2018), Dunki (2023) ஆகிய படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி தயாரித்துள்ள வெப் சீரிஸ் இது. ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது. மொத்தம் 6 எபிசோடுகள்; ஒவ்வொரு எபிசோடும் 32 முதல் 37 நிமிடங்கள் வரை என்பதால், ஆக மொத்தம் மூன்றரை மணி நேரத்தில் ஒரே அமர்வில் பார்த்துவிடலாம். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் மகன் வீர் ஹிரானிதான் இந்த வெப் சீரிஸின் நாயகன்.

ஸ்பாய்லர் அலர்ட்!

கதைக்களம்:

வில்லனின் அப்பா ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும்போது, நாயகன் அவரிடம் மாணவனாகப் படிக்கிறான். நாயகன் ஹேக்கிங் செய்வதிலும், கணினியை பயன்படுத்துவதிலும் வல்லவன்; ஆனாலும் படிப்பில் சுமார்தான். எல்லோருக்கும் முன்னால் நாயகனை வில்லனின் அப்பா மட்டம் தட்டி அவமானப்படுத்திவிட, நாயகனுக்கு செம கோபம் வருகிறது.

"எல்லா மனிதர்களுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் உண்டு" என்று குருதிப்புனல் படத்தில் ஒரு புகழ்பெற்ற வசனம் வருமே? அதுபோல, வில்லனின் அப்பா எதிலாவது சிக்குவாரா என்று நாயகன் பார்த்து காத்திருக்கிறான். தனது ஹேக்கிங் திறமையைப் பயன்படுத்தி, அவருக்கு ஒரு தவறான உறவு (Illegal Affair) இருப்பதை கண்டுபிடிக்கிறான்.

நாயகனுக்கு பெரிய அதிர்ச்சி. இப்படி ஆகும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.வில்லன் தன் அப்பாவின் மரணத்துக்கு காரணமான நாயகனை வித்தியாசமான முறையில் பழி வாங்க நினைக்கிறான்.அவனது திட்டம் என்ன? எண்ணம் நிறைவேறியதா? என்பது மீதி திரைக்கதை.

நடிகர்களின் பங்களிப்பு:

  • வீர் ஹிரானி (நாயகன்): அறிமுகப் படத்திலேயே அசால்ட்டாக நடித்திருக்கிறார். இயக்குநரின் மகன் என்பதால் அவரது கதாபாத்திர வடிவமைப்பு மிகவும் வலுவாக எழுதப்பட்டுள்ளது. நடிப்பும் ஓகே.

  • அர்ஷத் வர்சி (போலீஸ் அதிகாரி): இன்னொரு நாயகனாக போலீஸ் ஆபீசராக காமெடி கலந்த ரோலில் அர்ஷத் வர்சி நடித்திருக்கிறார். சினிமாத்தனம் இல்லாத, ஓவர் பில்டப் இல்லாத இயல்பான கதாப்பாத்திர வடிவமைப்பு இவருடையது.

  • விக்ராந்த் மஸ்ஸி (வில்லன்): இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பில்லை என்றாலும், கிளைமாக்ஸில் ஓரளவு நன்றாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

  • மோனா சிங்: போலீஸ் அதிகாரியின் மனைவியாக வந்து கச்சிதமாக நடித்திருக்கிறார்.

  • சத்யதீப் மிஸ்ரா & ஸ்ருதி மராத்தே: விளையாட்டு துறை அமைச்சராக (ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர்) சத்யதீப் மிஸ்ரா கெத்து காட்டியிருக்கிறார். மினிஸ்டரின் மனைவியாக ஸ்ருதி மராத்தே கிளாமராக நடித்திருக்கிறார்.

இவர்கள் போக மற்ற அனைவரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

எடிட்டிங், இயக்கம்,தயாரிப்பு என ஆல் இன் ஆல் அறிவு ராஜாவாக ராஜ்குமார் ஹிரானி அசத்தி இருக்கிறார்.

பாடல்களுக்கான இசையை சாந்தனு மோய்ட்ராவும், பின்னணி இசையை சஞ்சய் வந்த் ரேக்கரும், தீம் இசையை விஷால் கரானாவும் அமைத்திருக்கிறார்கள்.

Pritam and Pedro OTT review
Pritam and Pedro OTT reviewSource:jiohotstar

சபாஷ் டைரக்டர்! (பிளஸ் பாயிண்டுகள்):

  1. ஓப்பனிங் சீனில் வரும் ஏடிஎம் கொள்ளைக் காட்சி பரபரப்பு என்றால், "வெறும் 10 நிமிடங்களில் கொள்ளையர்களை கண்டுபிடிப்பேன்" என போலீஸாருக்கு சவால் விட்டு, நாயகன் அதை செய்து காட்டுவது பிரமிப்பு.

  2. போலீஸ் ஆபீசருக்கும்,அவரது மனைவிக்கும் நடக்கும் தகறாரும், அதைத்தொடர்ந்து வரும் காட்சிகளும் பரபரப்பு.

  3. அமைச்சரின் மனைவியின் போன் தொலைந்து போவதும், அதை போலீஸ் அதிகாரி அசால்ட்டாக டீல் செய்வதும், அதன் காரணமாக சைபர் கிரைம் பிரிவுக்கு தண்டனை பணியிடமாற்றம் (பனிஷ்மெண்ட் போஸ்டிங்) பெறுவதும் செம கலகலப்பான காமெடி.

  4. மினிஸ்டரின் மகனை வில்லன் கடத்துவது ,நாயகன் தற்கொலை செய்து கொண்டால் தான் விடுவிப்பேன் என்று மிரட்டுவது பரபரப்பான காட்சிகள்.

  5. வில்லன் கேட்ட பணத்தை ஒரு பேக்கில் வைத்து அவனை ட்ராக் செய்ய நாயகன் செய்யும் ஐடியா அபாரம்.

  6. நாயகனும் போலீஸ் அதிகாரியும் அடிக்கடி சவால் (பெட்) கட்டிக்கொள்வதும், அதில் எப்போதும் நாயகனே ஜெயிப்பதும் சுவாரஸ்யம்.

  7. நாயகன் ஒவ்வொரு வழக்கிலும் ஹேக்கிங் மூலம் அசால்ட்டாக வில்லனை முந்துவதை பார்க்கும்போது, நமக்கும் ஹேக்கிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பீறிடுகிறது.

  8. அமைச்சரின் மனைவியின் முன்னாள் காதலன் பழைய புகைப்படங்களை வைத்து மிரட்டும்போது, நாயகன் அந்த வழக்கை டீல் செய்யும் விதம் அபாரம்.

ரசித்த வசனம்:"காலம் மாறுது, திருடர்களும் மாறுகிறார்கள், நாமும் மாறனும்!"

லாஜிக் குறைகள் (Logic Mistakes):

  1. மினிஸ்டரின் மனைவியின் போன் மிஸ் ஆகி விட்டதும் அதைக்கண்டு பிடிக்க முடியாமல் போலீஸ் ஆபீசர் அதே மாடல் ,அதே கலர் போன் புதிதாக வாங்கித்தரும் ஐடியா எப்படி ஒர்க் அவுட் ஆகும்?அந்த போனில் கால் லாக்ஸ்,கேலரி செக் பண்ண மாட்டாங்களா?புது போன் பிளாங்க்காக இருக்குமே?

  2. கிளைமாக்ஸில் வில்லன் வருகிறானா என்பதை போலீஸார் பைனாகுலர் மூலம் கண்காணிப்பது போல, வில்லனும் தன்னை சுற்றி போலீஸ் இருக்கிறதா என்று கண்காணிக்க மாட்டானா?

  3. கிளைமாக்ஸில் அமைச்சரின் மகன் இருக்குமிடத்தை கண்டுபிடித்த போலீஸ் அதிகாரி, உடனே அந்த விஷயத்தை அமைச்சரிடமோ அல்லது உயர் அதிகாரிகளிடமோ போன் செய்து சொல்லாமல், ஒரு சாதாரண காவலரிடம் (கான்ஸ்டபிள்) சொல்வதும், அவர் தானே அதைகண்டுபிடித்தது போல அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்குவதும் அப்பட்டமான சினிமாத்தனம்; நம்பும்படி இல்லை.

  • அடல்ட் கன்டென்ட் / வார்னிங்: இல்லை (Clean U/A - குடும்பத்துடன் பார்க்கலாம்).

  • கல்கி பைனல் கமெண்ட்: விறுவிறுப்பான, பரபரப்பான, காமெடியான சைபர் கிரைம் த்ரில்லர் வெப் சீரிஸ். தாராளமாக பார்க்கலாம்!

  • ரேட்டிங்: 3/5

இதையும் படியுங்கள்:
'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படத்திற்கும் நிஜ சம்பவத்திற்கும் தொடர்பு உண்டா?
Pritam and Pedro OTT review
இதையும் படியுங்கள்:
OTT: ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி டிரெண்டாகும் டாப் 2 வெப் சீரிஸ்..!
Pritam and Pedro OTT review
logo
Kalki Online
kalkionline.com