துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த உற்சாகமான தகவலை இயக்குநர் வெங்கி அட்லூரி வெளியிட்டுள்ளார். 'லக்கி பாஸ்கர் 2' திரைப்படம் நிச்சயம் உருவாகும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படம், தனித்துவமான கதைக்களம் மற்றும் துல்கர் சல்மானின் அழுத்தமான நடிப்பால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மும்பையின் 90களின் பின்னணியில் வங்கி முறைகேடுகள் மற்றும் பங்குச்சந்தை ஊழல் குறித்த கதைக்கரு, படத்தை பான் இந்தியா அளவில் பிரபலமாக்கியது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி, "லக்கி பாஸ்கர் 2 நிச்சயமாக வரும். இதற்கான ஸ்கிரிப்ட் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை. நானும் துல்கர் சாரும் அவரவர் படங்களில் பிஸியாக இருக்கிறோம். சிறிது காலம் எடுக்கும், ஆனால் உறுதியாக லக்கி பாஸ்கர் 2 படம் வருவது உறுதி" என்று கூறியுள்ளார்.
தற்போது நடிகர் சூர்யாவை வைத்து 'சூர்யா 46' என்ற படத்தின் படப்பிடிப்பில் வெங்கி அட்லூரி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் முடிந்ததும் 'லக்கி பாஸ்கர் 2' படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தனது இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வாத்தி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகாது என்றும், அது தனிக்கதையாக இருக்க வேண்டும் என்று தனுஷ் விரும்பியதாகவும் வெங்கி அட்லூரி தெளிவுபடுத்தியுள்ளார்.
'லக்கி பாஸ்கர்' படத்தின் முதல் பாகம், ரூ. 110 கோடிக்கும் மேல் வசூலித்து பெரும் வெற்றியைப் பெற்றது. துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்த அப்படத்தின் தொடர்ச்சி குறித்த இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'லக்கி பாஸ்கர் 2' மற்றொரு பிளாக்பஸ்டராக அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.