
மார்கன் திரைப்படம் 2025 ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வெளியானது. இதை எழுதி, இயக்கி, எடிட்டிங் செய்து அறிமுக இயக்குனராக லியோ ஜான் பால் அறிமுகமானார். தயாரித்தவர் மீரா விஜய் ஆண்டனி. இது ஒரு தமிழ் க்ரைம் திரில்லர் திரைப்படம். கொலை மர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தின் தலைப்பு முதலில் 'ககன மார்கன்' என்று இருந்தது.
அதன் பொருள் சித்தர்கள் அகராதியில் காற்றின் வழியே பயணிப்பவன் என்று பொருள். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீசானது. மார்கன் திரைப்படத்தை சுமார் 1000 திரைகளில் ரிலீஸ் செய்திருந்தனர். விஜய் ஆண்டனி கெரியரிலேயே அதிக திரைகளில் ரிலீசான படம் இதுதானாம்.
விஜய் ஆண்டனி, அஜய் திஷன், பி. சமுத்திரக்கனி, ப்ரகிடா மற்றும் தீப்ஷிகா ஆகியோர் நடித்துள்ள படம். இதற்கு எஸ். யுவா அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் ஒரு சுவாரசியமான க்ரைம் தில்லர் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் என்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு நாட்களில் நல்ல வசூலை பெற்று வருகிறது.
மார்கன் திரைப்படத்தை சுமார் 10 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். உலகளவில் ரூ.1கோடி வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது. பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரங்களை வெளியிடும் சாக்.நிக் வலைதளம் மார்கன் படம் முதல் நாளில் 85 லட்சங்கள் வரை வசூல் செய்திருக்கும் என்று கூறுகிறது. அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் மார்கன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் அதிகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 50 லட்சம் வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது. தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் கடந்த வாரம் ரிலீசானது. தெலுங்கு மாநிலங்களில் பயங்கர ஹிட்டாகி இருந்தாலும் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவு வசூல் இல்லை. ஆனால் ஜூன் 27 அன்று ரிலீஸான மார்கன் வசூலில் குபேராவை முந்தியது.
மார்கன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் குவிந்து கொண்டிருப்பதால் அதன் தாக்கம் கட்டாயம் வசூலிலும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. விஜய் ஆண்டனியின் பின்னணி இசை கதைக்கு பலம் சேர்ப்பதாக கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ரசிகர் பாலா அவர்கள் கூறுகிறார். சித்தர்கள் வழியில் வாழ்க்கையை காணும் விஷயம் என்றும், ரசாயன ஊசி, அடுத்தடுத்த திருப்பங்கள் கொலை ஏன் நடந்தது போன்ற காரணங்கள் திரைப்படத்தை சலிப்படையாமல் பார்க்க வைக்கிறது என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் நீச்சல் குளத்தை காட்சிப்படுத்திய விதம் மிகவும் அருமை என்று மற்றொரு ரசிகர் மனோகர் பாராட்டுகிறார். ரசிக்கும்படியான காட்சிகளும், நடிகர்கள் எதார்த்தமான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்துவதாகவும் மற்றொரு ரசிகர் பாராட்டுகிறார். பல்வேறு திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக இருந்ததாக வேறொரு ரசிகர் கூறுகிறார்.