நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது சினிமா என்றால் மிகையல்ல.சிறிய நடிகர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கதையம்சம் உள்ள நல்ல திரைப்படங்கள் சமீபத்தில் பெருமளவு வெற்றி பெறுவதும் ,கோடி கோடியாக பணத்தைக் கொட்டி எடுக்கப்படும் படங்கள் கதை அமைப்பு சரியில்லாததால் ஃபிளாப் ஆவதும் தற்போது பெருகி வருகிறது.
அதே சமயம், முன்னணியில் இருக்கும் விஜய்யின் அரசியல் பிரவேசம், ரஜினிகாந்தின் 'எவர்கிரீன்' மறு வெளியீடுகள் என சினிமா மீதான பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனின் 25-ஆவது படமான 'பராசக்தி', பொங்கல் வெளியீட்டிற்குத் தயாராகி வரும் வேளையில், துவக்கத்திலிருந்தே பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் நடிக்கும் கடைசி படமான 'ஜனநாயகன்' திரைப்படத்துடன், சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' மோதி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு இரு நடிகர்களின் ரசிகர்களிடையே பலமாக உள்ளது. தற்போது 'பராசக்தி' படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கு பரபரப்பான பொருளாக மாறியுள்ளது.
'சூரரைப் போற்று' போன்ற வெற்றிப் படங்களின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா எனப் பல பிரபலங்கள் நடிப்பில் உருவானது 'பராசக்தி'. 1960-களில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை (Anti-Hindi Agitation) மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது. அரசியல் மற்றும் ஹிந்தி எதிர்ப்புத் தொடர்புடைய காட்சிகள் காரணமாக, இந்திய சென்சார் குழு அதிக காட்சிகளை நீக்கக் கோரியது. அதை மறுத்த படக்குழு, மறு தணிக்கைக்குச் சென்ற நிலையில், தற்போது ரிலீஸ் தேதி குறித்த குழப்பம் நீங்கி ஜனவரி 10 அன்று வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதிலும் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. காரணம் ராஜேந்திரன் எனும் உதவி இயக்குனர் இத்திரைப்படத்தின் மூலக்கதை தன்னுடையது என வழக்கு தொடர்ந்துள்ளார். மொழிப்போரை மையப்படுத்தித் தான் எழுதி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்த 'செம்மொழி' எனும் கதைதான் தற்போது 'பராசக்தி' திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் கதையை பலரிடம் தான் சொன்னதாகவும் கலைஞர் கருணாநிதியும் தனது கதையைக் கேட்டு பாராட்டியதாகவும் சொல்கிறார். 2010ல் சேலம் தனசேகரன் எனும் தயாரிப்பாளரி்டம் சொல்லி அவர் அதை இயக்குநர் சுதா கொங்கராவிடம் கூறி அப்போது முன்னணியில் இருந்த நடிகர் சூர்யாவை வைத்து புறநானூறு என்ற தலைப்பில் படம் தயாரிக்க திட்டமிட்டு பின் அது கைவிடப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
சுதா கொங்கரா அந்தக் கதையின் தழுவலாகவே இந்தப் படத்தை இயக்கி உள்ளதாகவும் இந்தப் பிரச்சினையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாலும் இந்தப் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு மீதான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் படத்திற்கு தடை விதிக்க மறுத்தும் இரண்டு கதைகளும் ஒன்றுதானா என ஆய்வு செய்ய சொல்லி ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும்படி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு உத்தரவிட்டும் கதை திருட்டு தொடர்பாக இயக்குனர் சுதா கொங்கரா ஜனவரி 2ஆம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அளிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு குறித்த விசாரணை மீண்டும் வரும் ஜனவரி 2-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. படக்குழுவும் இது தொடர்பாகத் தங்கள் தரப்பு விளக்கத்தைத் தெளிவாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. காப்புரிமை (Copyright) மற்றும் கதை உரிமை தொடர்பான சிக்கல் என்பதால், சினிமா ரசிகர்களாலும் கதைப்பிரியர்களாலும் 'பராசக்தி' தற்போது உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.