

2025-ம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. இப்போது தான் 2025 தொடங்கியது போல் இருந்தது, இதற்குள் ஆண்டு முடிந்து 2026 பிறக்கப்போகிறது. ஆண்டு முடியவுள்ள இந்த நேரத்தில் சற்று திரும்பிப்பார்த்தால் இந்தாண்டு தொடங்கியதில் இருந்த உலக போர்கள், அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, விமான விபத்துகள், புல்வாமா பயங்கரவாத தாக்குதல், இயற்கை பேரழிவுகள், பிரபலங்களின் மரணம் என பல எதிர்பார்க்காத விஷயங்களை கடந்து வந்து விட்டோம்.
இந்நிலையில் 2025-ம் ஆண்டு இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட விவரங்கள் குறித்த பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதில் மக்கள் எந்தெந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்று பார்க்கும் போது விசித்திரமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும்.
இதிலிருந்து மக்களுக்கு எந்நெந்த விஷயங்களில் ஆர்வம் அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது. அந்த வகையில் கூகுளின் 'year in search 2025' அறிக்கையின்படி, இந்த ஆண்டு இந்தியர்கள் அதிகம் தேடியது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
தற்போது உலகம் முழுவதும் AI மோகம் பிடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். அனைத்து துறையிலும் AI நுழைந்து விட்டது. கூகுளின் சொந்த தயாரிப்பான 'ஜெமினி' (Google Gemini) தான் இந்தியர்களின் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்துள்ளது. அதாவது கூகுளில் ஜெமினி (Google Gemini), ஜெமினி ஏஐ போட்டோ, சாட் ஜிபிடி கிப்ளி ஆர்ட் படம் ஆகியவற்றை தான் மக்கள் அதிகமாக தேடி இருக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள மக்களுக்கு சினிமாவிற்கு அடுத்தபடியாக கிரிக்கெட்டிற்கு தான் ஆர்வம் அதிகம். அந்த வகையில் ஐபிஎல் (IPL) குறித்த செய்திகளை அதிகளவும் மக்கள் கூகுளில் தேடி உள்ளனர். இது விளையாட்டின் மீதுள்ள ரசிகர்களின் அசைக்க முடியாத ஆர்வத்தை நிரூபித்துள்ளது. வைபவ் சூர்யவன்ஷி, தோனி 2026 ஐபிஎல்லில் விளையாடுவரா, பெங்களூரு அணி கோப்பையை வென்றது, இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வென்றது குறித்தும் அதிகளவு தேடல்கள் பதிவாகியுள்ளன.
நிகழ்ச்சிகள் என்று பார்க்கும் போது ஸ்குவிட் கேம்(Squid Game) மற்றும் பிக் பாஸ் ஷோக்களை இந்தியர்கள் அதிகம் தேடிய நிகழ்ச்சிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
அடுத்ததாக ரெசிபி என்று பார்க்கும் போது இந்தியர்களுக்கு எப்போதுமே உணவு மீது அலாதி பிரியம். அந்த வகையில் அதிகளவு இந்தியர்கள் தேடிய உணவில் இட்லி முதலிடம் பிடித்துள்ளது. அடுத்ததாக பாரம்பரிய உணவுகளான யுகாதி பச்சடி, திருவாதிரை களி, கொழுக்கட்டை, தேக்குவா (இனிப்பு பிஸ்கட்), பீட்ரூட் கஞ்சி குறித்தும் இந்தியர்கள் அதிகளவு தேடலில் ஈடுபட்டுள்ளனர்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்தும், அதை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்த ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் அதிகமாக இந்தியர்கள் கூகுளில் தேடி இருக்கிறார்கள். அதேபோல் போர் நிறுத்தம் என்றால் என்ன? (What is ceasefire) போன்ற உணர்வுப்பூர்வமான கேள்விகளும் அதிகளவு தேடப்பட்டுள்ளன.
மகா கும்பமேளா, சுனிதா வில்லியம்ஸ், 67 வைரல் மீம்ஸ், காற்றின் தரம் மற்றும் நிலநடுக்கங்கள் ஆகியவையும் இந்தியர்கள் அதிகமாக தேடிய விஷயங்களின் பட்டியலில் உள்ளது.