Madras Mafia Company Movie Review
Madras Mafia Company Movie

மதராஸ் மாஃபியா கம்பெனி திரைப்பட விமர்சனம்!

Published on
ரேட்டிங்(3 / 5)

1980 களிலும், 90 களிலும் டெரர் வில்லனாக தமிழ் சினிமாவில் நடித்தவர் ஆனந்தராஜ். பாட்ஷா படத்தில் 'ரஜினியையே கம்பத்தில் கட்டி அடித்தவர்' என்ற பெயர் ஆனந்த ராஜுக்கு உண்டு. இவ்வளவு டெரர் ஆனந்தராஜ் கடந்த பத்தாண்டுகளாக காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இன்றைய இளம் டைரக்டர்கள் பலர் நகைச்சுவைக்கு காட்சி எழுதும் போது ஆனந்தராஜ் அவர்களை மனதில் வைத்து எழுதுகிறார்கள். தற்போது ஆனந்தராஜ் ஹீரோவாக நடித்து 'மதராஸ் மாஃபியா கம்பெனி' என்ற படம் வெளிவந்துள்ளது. சுகந்தி அண்ணாதுரை கதையில், முகுந்தன் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் மதராஸ் மாஃபியா கம்பெனி படம் வந்துள்ளது.

Madras Mafia Company Movie
Madras Mafia Company Movie

'மதராஸ் மாஃபியா கம்பெனி' என்ற பெயரில் அடிதடி,கொலை போன்ற செயல்களை செய்வதற்காக ஒரு ஏஜென்சி நடத்தி வருகிறார் பூங்காவனம் (ஆனந்தராஜ்). இவரின் அராஜகத்தை முறியடிக்க காவல் அதிகாரி திகழ் பாரதி (சம்யுக்தா) பல்வேறு முயற்சிகளை செய்கிறார். இருவருக்கும் மோதல் வருகிறது. இரண்டு தரப்பிலும் பலர் கொல்லப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் ஆந்திராவில் வைத்து பூங்காவனத்தை என்கவுன்டர் செய்து விடுகிறார். பூங்காவனதிற்கு இறுதி காரியங்கள் செய்யும் போது தான் கொல்லப்பட்டது பூங்காவனம் இல்லை என்று தெரிய வருகிறது. பூங்காவனம் தனது இறுதி ஊர்வலத்திற்கு வருகிறார். அங்கே இவருக்கு அதிர்ச்சி தரும் விஷயங்கள் நடக்கிறது. இது என்ன என்பது தான் இப்படம்…

அடி தடி செய்வதற்க்காக ஒரு ஏஜென்சி என்ற யோசித்ததற்கு டைரக்டரை பாராட்டலாம். படத்தின் ஆரம்பம் மிக சாதாரணமாக நகர்கிறது. படத்தின் இரண்டாம் பாதி சற்று வித்தியாசமாக செல்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் தமிழ் சினிமாவில் யாரும் வைக்காத கிளைமாக்ஸாக வந்திருக்கிறது. படத்தில் வில்லனை கொலை செய்வது என்ற விஷயம்தான் சினிமாவில் வந்துள்ளது. ஆனால் வில்லனின் கேரக்டரை கொலை செய்வது என்ற மாறுபட்ட சிந்தனையில் இப்படம் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
கும்கி 2 திரைப்பட விமர்சனம்!
Madras Mafia Company Movie Review

கொஞ்சம் காமெடி, அதே பழைய வில்லத்தனம் என காட்சிக்கு, காட்சி 'அட்ரா சிட்டி' செய்கிறார் ஆனந்தராஜ். இவரை தவிர வேறு யாரும் பூங்காவனம் கேரக்டரை செய்திருக்க முடியாது என்று சொல்ல தோன்றுகிறது. சில காட்சிகளில் வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார் முனீஸ்காந்த். சம்யுக்தா போலீஸ் கேரக்டரில் சரியாக பொருந்தினாலும் இவரின் குரல் சரியாக பொருந்தாவில்லை.

ஸ்ரீ காந்த் தேவாவின் இசையும், அசோக் குமாரின் ஒளிப்பதிவும் இந்த கம்பெனிக்கு கூடுதல் பலம். நாம் இதுவரை பார்த்த ஆனந்தராஜை ஒரு மாறுபட்ட கேரக்டரில் பார்க்க விரும்பினால் இந்த மதராஸ் மாஃபியா கம்பெனி கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.

மதராஸ் மாஃபியா கம்பெனி - ஆனந்தராஜின் அட்ரா சிட்டி.

logo
Kalki Online
kalkionline.com