மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை, அமரன் என்ற படமாக வெளியாகிய நிலையில், 10 வருடங்களுக்கு முன்னரே பிரித்விராஜ் படத்தில் மேஜர் முகுந்த் பற்றி வந்திருக்கிறது. தற்போது இது வைரலாகி வருகிறது.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான படம்தான் அமரன். சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி ஆகியோர் நடிப்பில் கடந்த 31ம் தேதி வெளியான இப்படத்தை கமல் தயாரித்திருக்கிறார். இந்தப் படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த ஒவ்வொருவருமே அழுகாமல் வெளியே வருவதில்லை. அந்தளவிற்கு உணர்வுப்பூர்வமான ஒரு படம் அமரன்.
மேஜர் முகுந்தின் தேசப்பற்றையும், அவரின் காதலையும் அழகாக படமாக எடுத்துள்ளனர்.
தற்போதுவரை 250 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. கமல், ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்றவர்களின் படமே இத்தனை கோடி வசூல் செய்திருக்கிறது. அந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் வந்துள்ளார். இப்படியான சூழலில் முகுந்த் பற்றி ஏற்கனவே ஒரு படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் படமாக இருந்திருந்தால் படம் வெளியாவதற்கு முன்னரே மக்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், அது ஒரு மலையாள படமாகும்.
கடந்த 2014ம் ஆண்டு முகுந்த் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். அவர் இறந்த அடுத்த வருடமே மலையாள படத்தில் அவரைப் பற்றி பேசி இருக்கிறார்கள். பிரித்விராஜ் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு ரிலீசான பிக்கெட் 43 படத்தில் தான் இது நடந்திருக்கிறது. இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்திருக்கும் பிரித்விராஜ் இன்னொரு ராணுவ வீரருடன் போனில் பேசுவார்.
அப்போது அந்த ராணுவ வீரர் பிரித்விராஜிடம் இங்கு மூன்று பேர் இறந்து விட்டார்கள். அதில் மேஜர் முகுந்த் சார் கூட ஒருவர் என்று சொல்கிறார். அதற்கு பிரித்விராஜ் என்ன முகுந்த் சார் இறந்துவிட்டாரா, அவருக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கிறதே என கவலையோடு சொல்கிறார்.
அதற்கு அந்த ராணுவ வீரர் என்ன செய்வது, நமது நிலைமை அப்படிதானே என்று கூறியிருப்பார்.
தற்போதுதான் இந்த விஷயம் தெரியவந்திருக்கிறது. சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.