நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு இணையவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இப்படத்தின் இயக்குநர் குறித்தும் தயாரிப்பு குறித்தும் பார்ப்போமா?
கோலிவுட்டில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருபவர் தனுஷ். பா.பாண்டி படத்தின்மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். முதல் படமே பெரிய ஃபீல் குட் படத்தை கொடுத்தார். இதனால், அடுத்து இயக்கிய ராயன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பைத் தாங்கி நின்றது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடவில்லை.
இதனையடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கினார். இப்படம் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இவர் நடிப்பில் குபேரன் படம் உருவாகி வருகிறது. மேலும் "தேரே இஸ்க் மெய்ன்" என்ற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55-வது படத்திலும் உள்ளார்.
பிஸி லைனப்பில் இருக்கும் தனுஷின் அடுத்த படம் குறித்தான அப்டேட் கசிந்துள்ளது.
நடிகர் தனுஷ் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இவர் இதற்கு முன்னர் போர் தொழில் படத்தை இயக்கி வெற்றி இயக்குநராக வலம் வந்தார்.
இவரின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கவுள்ளார். முதலில் மமிதா ஃப்ரெண்ட் கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது நடிப்புத் திறமையினால் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அந்தவகையில் நஸ்லன் மற்றும் மமிதா இணைந்து நடித்த ப்ரேமலு திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனைப் படைத்தது. இதனையடுத்து மமிதாவிற்கு தமிழ் படங்கள் உட்பட பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. ஜிவி பிரகாஷுடன் Rebel என்ற படத்தில் இணைந்து நடித்தார் மமிதா.
இப்படியான நிலையில், படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.