இளம் கதாநாயகர்களுக்கு ‘டஃப்’ கொடுக்கும் மலையாள மார்கண்டேயன்!

மம்மூட்டி
மம்மூட்டி

நமது மலையாள மார்கண்டேயனின் நடிப்பில் தற்போது வெளிவந்து வெற்றிகரமாக நடைபோடுகிறது ‘பிரம்மயுகம்’ திரைப்படம். மலையாள மொழியில் இப்படம் வெளியாகி இருந்தாலும் தென்னிந்திய ரசிகர்கள் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு 1988 பிப்ரவரி மாதம் வெளியான 'ஒரு சிபிஐ டைரி குறிப்பு’ திரைப்படம்தான் இவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அப்போது மலையாள படங்களை விரும்பிப் பார்த்த தமிழ் ரசிகர்கள் இவரை அண்ணாந்து பார்த்தார்கள்! யார் இந்த மார்கண்டேயன்?

K. மது இயக்கத்தில் மலையாள மொழியில் வெளியான 'ஒரு சிபிஐ டைரி குறிப்பை’ப் பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு, அது ஒரு புதுவித திரில்லர் அனுபவத்தை அளித்தது. அப்படத்தில், மம்மூட்டி கதாபாத்திரம் சேதுராமய்யர் என்ற தமிழ் பின்புலம் கொண்ட சிபிஐ அதிகாரியாக உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு சில காட்சிகளில் மம்மூட்டி தமிழ் பேசினார். "டேய் படத்தில் நம்ம மம்மூட்டி தமிழ் பேசுறார்டா" என சராசரி ரசிகன் வியந்து பேசியதுகூட இப்படம் தமிழ்நாட்டில் வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்தது.

படம் தொடங்கி சில காட்சிகளுக்குப் பின்புதான் மம்மூட்டி அறிமுகம் ஆவார். ஒரு ஹீரோ அறிமுகத்திற்கான எந்தவித பந்தாவும் இருக்காது. மிக கேசுவலாக நடித்திருப்பார் மம்மூட்டி. சந்தேகப்படுபவர்களைக் குரல் ஏற்ற இறக்கங்ககளை வைத்தே மிரட்டுவார். CBI என அழைக்கப்படும் Central bureau of investigation (மத்திய புலனாய்வு நிறுவனம்) பற்றி மக்களில் பலர் தெரிந்துகொள்ள இப்படத்தின் திரில்லர் திரைக்கதையும், திரைக்கதைக்கு உயிர் கொடுத்த மம்மூட்டியும் முக்கிய காரணம்.

இப்படம் வெளியான சில வருடங்கள் கழித்து இந்தியாவில் ராஜீவ் காந்தி படுகொலை, மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்தது. இந்த வழக்குகளை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் பெயர்கள் ஊடகங்களில் பேசப்பட்டது. இப்படிப் பேசப்பட்டபோதெல்லாம், ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’ பட ஹீரோ சேதுராமய்யரும் (மம்மூட்டி) பலரின் நினைவுகளில் வந்து சென்றார்.

இப்படம் வெளியான பின்பு, வெவ்வேறு திரில்லர் கதைக் களங்களில், ஒரு சி.பி.ஐ. டைரி குறிப்பு பல பாகங்கள் வெளியானது. இந்தப் படங்கள் அனைத்திலும் மம்முட்டியின் பெயர் சேதுராமய்யர்தான். இப்படம் வெளியாகி இரண்டாண்டுகள் சென்ற பின்புதான் 1990ல் ‘மௌனம் சம்மதம்’ என்ற (நேரடி) தமிழ்ப் படத்தில் நடித்தார் மம்மூட்டி.

"நான் மூவேந்தர்கள் ஆட்சி செய்த சேர நாட்டை சேர்ந்தவன். நானும் தமிழன்தான். இந்த சேர நாட்டுக்காரனை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று ‘மௌனம் சம்மதம்’ பட சுவரொட்டியில் விளம்பரம் செய்தார் மம்மூட்டி. அப்படத்தில், வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் ஓரளவு வெற்றி பெற்றது. ஒரு சி.பி.ஐ. டைரி குறிப்பு படத்தை இயக்கிய K. மதுதான் ‘மௌனம் சம்மதம்’ படத்தையும் இயக்கி இருந்தார். திறமைகள் இருந்தாலும், தமிழ் சினிமாவில் ஜொலிக்க ஒரு மோதிர கையால் குட்டுப்பட வேண்டுமே? பாலசந்தர் என்ற மோதிர கை மம்மூட்டியைக் குட்டியது. 1991ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் ‘அழகன்’ படத்தில் நடித்தார் மம்மூட்டி. மூன்று பெண்களால் காதலிக்கப்படும் நபராகவும், சில குழந்தைகளுக்கு அன்புள்ள அப்பாவாகவும் வி்த்தியாசமான கதாபாத்திரத்தில், நல்ல நடிப்பைத் தந்திருப்பார் மம்மூட்டி.

அழகனுக்குப் பிறகு தமிழில் மம்மூட்டிக்கு ஏறுமுகம்தான். தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா, மறுமலர்ச்சி, ஆனந்தம், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், பேரன்பு என மாறுபட்ட பரிமாணங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களிடையேயும் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து தக்க வைத்துக்கொண்டார் மம்மூட்டி.

இதையும் படியுங்கள்:
நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா மந்தனா... என்னாச்சு தெரியுமா?
மம்மூட்டி

மம்மூட்டியின் இந்த வெற்றிக்குக் காரணம் என்ன?

கலையின் மீதுள்ள தேடல்தான். பல கதாநாயகர்கள் ஏற்கத் தயங்கும் பாத்திரங்களை சர்வசாதாரணமாக ஏற்று நடிக்கிறார். தன் பாலின ஈர்ப்பாளராக கடந்த ஆண்டு மம்மூட்டி நடித்து வெளிவந்த 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் அவர் ஏற்றது எந்த ஒரு ஹீரோவும் ஏற்கத் தயங்கும் கதாபாத்திரம்.

சென்ற ஆண்டு மட்டுமே காதல் - தி கோர், நண்பகல் நேரத்து மயக்கம், கண்ணூர் ஸ்குவாட் என மூன்று படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து, இளம் ஹீரோக்களுக்குப் போட்டியாக நிற்கிறார், மம்முக்கா என்று செல்லமாக அழைக்கப்படும் எழுபது வயது இளைஞர் மம்மூட்டி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com