கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான படம் தக் லைஃப். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. வெகு மக்களுக்கு இந்த படம் பெரிதாக பிடிக்கவில்லை. இதனால் இந்த படம் பெரும் தோல்வியை அடைந்தது.
இதனிடையே, ‘தக் லைஃப்’ பார்த்துவிட்டு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
"‘தக் லைஃப்’ படம் பார்த்தேன். அசந்துவிட்டேன். ஒரு அண்டர்வேர்ல்டு கேங்ஸ்டர் படத்துக்குத் தேவையான எல்லாமும் சரியான விகிதத்தில் இருந்தது. இதுவே ஆங்கில மொழியில் ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருந்தால் ரசித்துப் பாராட்டியிருப்போம். ஒரு நல்ல படத்தின் அத்தனை அம்சங்களும் உயர் தரத்தில் இருந்தன. ஆழமான கதை, அட்டகாசமான திரைக்கதை, அசரவைக்கிற படப்பிடிப்பு இடங்கள். ஒரு காட்சிகூட சலிப்பை ஏற்படுத்தவில்லை என்பது வியப்பு!
இதுவரை இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் போய்ப் பாருங்கள். மணிரத்னமும், கமல்ஹாசனும், ரஹ்மானும், ரவி.கே.சந்திரனும் இந்தியாவுக்குக் கிடைத்த வரங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் மணிரத்னம் இப்போது மன்னிப்பு கேட்டுள்ளார். "எங்களிடமிருந்து இன்னொரு நாயகனை எதிர்பார்த்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கடந்த காலத்தை மீண்டும் உருவாக்குவது எங்கள் நோக்கம் அல்ல..." என்று அவர் கூறினார்.
மேலும், "மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் இணைந்து இருந்ததால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ‘நாயகன்’ போன்றே ஒரு படத்தை கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. வேறு மாதிரியான சோதனையை மேற்கொண்டோம். ஆனால் ரசிகர்கள் ‘நாயகன்’ போன்ற படத்தையே எதிர்பார்த்தனர். இதுவே அவர்கள் ஏமாறுவதற்கான காரணம். அதற்காக நாங்கள் இருவருமே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என மன்னிப்பு கோரியுள்ளார்.