
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படத்தை குறிப்பிட்டு கமெண்ட் அடித்திருந்த மன்சூர் அலிகான், தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் லியோ படத்தில் சிறிய தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் 'தம்மாத்துண்டு ரோலுக்கு இம்மா பெரிய பில்டபு' என்றும் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை 'வாங்க பாலஸ்தீனத்திற்கு விடுதலை வாங்கி கொடுக்கலாம்' என்று குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில் தன்னுடைய கடந்த பதிவிற்கு வருத்தம் தெரிவித்து மன்சூர் அலிகான் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், குண்டு போட்டு மனிதனை கொல்லும் நரமாமிச பட்சிகளின் உலக அரசியலால் மன அழுத்தத்தில், நேற்று மீம்ஸ் போன்று நான் போட்ட பதிவு என்னையே அதிர்ச்சியடைய வைத்தது.
தம்மாத்தூண்டு என்ற என் சொல் பதம் என்னையே நான் மன்னிக்க முடியாதவனாக ஆக்கிவிட்டது. அதற்காக லோகேஷ், அவரது குழுவினர் சக்தி, சந்தோஷ், நிமெட், கௌதம் பாலா, ராம்குமார் ஆகியோர் எவ்வளவு மெனக்கெட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கின்றேன்.
நான் நடிகர் விஜய் சாருடன் பல படங்களில் வில்லனாக நடித்து அட்டூழியம் செய்திருக்கின்றேன். தற்போது நான் எதர்ச்சியாக பேசுவது ஊடகங்களில் பலமாக பரப்பப்படுகிறது.
என்னுடைய சொந்த படைப்பு காரணமாக லியோ திரைப்படத்தில் என்னால் உடலை வடிவமைத்து அர்ப்பணிக்க முடியவில்லை. அதற்காக நான் வருத்தப்படுகிறேன். நவம்பர் 1 நடைபெறும் சக்சஸ் மீட்டில் சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார். மன்சூர் அலிகான் இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி பரவி வருகிறது. அதே சமயம் மன்சூர் அலிகான் எப்பொழுதுமே இப்படித் தான் மனதில் பட்டதை எல்லாம் பேசி விடுவார் என்று திரை வட்டாரத்தினர் குறிப்பிடுகின்றனர்.