எந்தப் பணியில் இருந்தாலும் நம் காதுகளில் விழுந்து கண் மூடி மெய்மறக்கச் செய்யும் கம்பீரக் குரலின் சொந்தக்காரர் எஸ்.வரலட்சுமி. இவர் பாடிய 'ஏடு தந்தானடி தில்லையிலே அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே... ' என்ற ராஜ ராஜ சோழன் படப் பாடல் இவரது புகழையும் சேர்த்து நினைவூட்டுகிறது இன்றும். 'இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்.. ' எனும் இவரது ஆராரோ தாலாட்டுப் பாடலில் மெய்மறந்து உறங்கியவர்கள் ஏராளம்.
இவை மட்டுமா? 'தென்றல் வந்து தீண்டாதோ தெம்மாங்கு பாடாதோ'.... என்ற சிவகங்கை சீமை பட பாடல்... 'சிங்காரக்கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி.'.. என்ற வீரபாண்டிய கட்டபொம்மன் படப் பாடல்... உள்ளிட்ட பல பாடல்களை தன் வெங்கலக் குரலால் பாடியும் தன் வித்தியாசமான எதிர்மறை நடிப்பாலும் 60 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்த புகழை தமிழ்த் திரைப்படத் துறையில் பெற்றவர் எஸ்.வரலட்சுமி.
1925 ஆகஸ்ட் 13 ல் ஆந்திர மாநிலம் ஜக்கம்பேட்டையில் பிறந்த இவரின் நூற்றாண்டில் இவர் பற்றிய திரைத்துளிகளை இங்கு காண்போம்.
பாலயோகினி (1937) திரைப்படத்தில் துறவி வேடத்தில் 9 வயதில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். 1938ல் இயக்குனர் கே.சுப்பிரமணியம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட அவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவுடன் சேவாசதனம் என்ற படத்தில் இளம்வயது தோழியாக நடிக்கத் துவங்கினார். பலரின் கவனத்தை கவர்ந்த சூப்பர் டூப்பர் வெற்றிப்படமாகிய 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி'யில் நடித்ததன் மூலம் முன்னணி அந்தஸ்து பெற்ற நடிகையாக அங்கீகரிக்கப்பட்டார்.
தொடர்ந்து சக்கரவர்த்தித் திருமகள், பணமா பாசமா, ஆதிபராசக்தி என்று பல படங்களில் பல வேடங்களில் தனது தனித்துவமான குரலாலும் நடிப்பாலும் கம்பீரமான உருவத்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக அம்மன் வேடம் கனகச்சிதமாக பொருந்தி மற்ற அம்மன் வேட நடிகைகளின் உதாரணமாக திகழ்ந்தார் இவர்.
வீரபாண்டிய கட்டபொம்மனில் சிவாஜியின் மனைவியாகவும் ராஜராஜசோழனில் சகோதரியாகவும் அவர் ஏற்ற பாத்திரத்தில் சிவாஜியின் நடிப்புக்கு ஈடான நடிப்பில் பேசப்பட்டார்.
அன்றைய முன்னணி நடிகர்களுடன் முக்கிய வேடங்களில் நடித்ததன் மூலமும் தனது பாடல்களை தானே பாடியதன் மூலமும் தமிழ்த் திரைப்படங்களில் திறமையான பாடகியாகவும் நடிகையாகவும் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். அவரது பிற்கால வாழ்க்கையில், அவர் அம்மா மற்றும் அத்தை வேடங்களில் நடித்தார்.
தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம் ஜி ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினி, கமல், பாக்யராஜ் என்று திரையுலகில் இறுதிவரை தன் ரீங்காரம் கொண்ட குரல் வளத்துடன் திரைப்பயணம் செய்தது ஆண்டவன் அவருக்கு அருளிய அன்பளிப்பாகவே எண்ணினார் அவர்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் கவியரசர் கண்ணதாசனின் மூத்த சகோதரருமான ஏ.எல்.எஸ். அவர்களின் இரண்டாவது மனைவியாக மணமுடித்து முருகன், நளினி என்ற இரண்டு பிள்ளைகளைப் பெற்ற பின்னும் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் மூத்த வேடங்களில் தொடர்ந்து நடித்து ரசிக்க வைக்கும் பாடல்களைத் தந்தார். குறிப்பாக தொடர்ந்து 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்து 1991ல் கமல்ஹாசனின் குணா படம் வரை பயணித்தது சிறப்பு.
ஏ.எல்.எஸ்.தயாரிப்பில் வெளிவந்த கந்தன் கருணை படத்தில்... 'வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா'.. என்ற பாடல்... நீதிக்கு தலைவணங்கு என்ற படத்தில்... 'இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூ வில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்'... போன்ற எந்நாளும் ரசிக்க வைக்கும் திரையுலக தேவகானங்களால் காலம் கடந்தும் வாழும் எஸ்.வரலட்சுமி 2009 செப்டம்பர் 22 ல் சென்னையில் காலமானார்.
தமிழ் சினிமாவில் இவரது பணியைப் பாராட்டி பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் அக்டோபர் 2007 இல் சிவாஜி குடும்பத்தினரால் வழங்கப்பட்ட சிவாஜி கணேசன் நினைவு விருது மற்றும் 2004 ஆம் ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்ட கவிஞார் கண்ணதாசன் விருது போன்ற சமீபத்திய விருதுகள் குறிப்பிடத்தக்கவை.
இந்த ஆகஸ்ட் மாதம் நூறாவது ஆண்டில் இருக்கும் இவரின் கம்பீரமான உருவமும் குரல் வளமும் என்றும் நம்முடன் பயணிக்கும்.