
சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீரென 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. துப்புரவுப் பணியாளர்களை தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசு முன்வந்துள்ளது. இதனை எதிர்த்து ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் துப்புரவுப் பணியாளர்கள் 13 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டத்தைக் கலைக்க காவல்துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டது. இந்நிலையில் இன்று மீண்டும் போராட்டத்தைத் தொடங்கவிருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 2 மண்டலங்களின் துப்புரவுப் பணியாளர்களை தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கொஞ்சம் கொஞ்சமாக துப்புரவுப் பணியை தனியாரிடமே கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் வசம் துப்புரவுப் பணி சென்றால், அது எங்களுடைய வேலையை பாதிக்க வாய்ப்புள்ளது என துப்புரவுப் பணியாளர்கள் கருதுகின்றனர். இதனால் அரசு இந்த நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும் என துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால் துப்புரவுப் பணியை தனியாருக்கு கொடுப்பதில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக உள்ளது.
இந்நிலையில் துப்புரவுப் பணியாளர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட சில வசதிகள் செய்து தரப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இது ஆறுதலாக இருந்தாலும் தனியார் வசம் துப்புரவுப் பணி செல்லாது என்ற உத்தரவையே இவர்கள் எதிர்பார்க்கின்றனர். துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தைக் கலைத்து விட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றமும் தெரிவித்தது.
இந்நிலையில் ஒருவார இடைவெளிக்குப் பின் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பாக இன்று மீண்டும் போராட்டத்தைத் தொடங்க துப்புரவுப் பணியாளர்கள் முடிவு செய்துள்ளதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிக்கு முன்பு 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணி துணை ஆணையரான ஜெயச்சந்திரன் மற்றும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையரான ஜெரினா பேகம் ஆகியோரின் தலைமையின் கீழ் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருவேளை துப்புரவுப் பணியாளர்கள் இன்று போராட்டத்தைத் தொடங்கினால், அவர்களை கைது செய்ய 20-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. இதுதவிர காவல்துறை ரோந்து வாகனங்கள், 10-க்கும் அதிகமான ஆம்புலனஸ்கள் மற்றும் 3 தீயணைப்பு வாகனங்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பு தயார் நிலையில் உள்ளன.