கிராமஃபோன் வடிவில் MGR படத்தின் பாட்டுப் புத்தகம்... ‘அன்பே வா’ பின்னணியில் இவ்ளோ சுவாரஸ்யமா?

1966 பொங்கலுக்கு வெளியான எம்.ஜி.ஆரின் ‘அன்பே வா’ திரைப்படப் பாட்டுப் புத்தகத்தின் பின்னணியும் சுவாரஸ்யமான சினிமா ரகசியங்களும்!
அன்பே வா
அன்பே வா
என்.எஸ்.வி.குருமூர்த்தி

ஐம்பது வருடங்களுக்கும் மேலான எழுத்துலக அனுபவம். 1970 முதல் சிறு துணுக்குகள் எழுதி, கல்கி, குமுதம், விகடன், சாவி, இதயம் பேசுகிறது, குங்குமம், தினமணி கதிர், காமதேனு, இந்து தமிழ் திசை இவற்றிலும், சிறுவர்மணி இதழில் கடந்த 8 வருடங்களாக சுமார் 90 நாடகங்கள் அரங்கம் என்ற பகுதியிலும் பிரசுரமாகி உள்ளன. கல்கி ஆன்லைனில் இது வரை சுமார் 45 கதைகள், கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ஒரு cartoon படத்துக்கு வசனம் எழுதும் போட்டியில் (இடம் சோழா ஹோட்டல் function - Overseas SANMAR...குழுமம்) ரைட்டர் சுஜாதா அவர்கள் கையால் இரண்டாம் பரிசு ஒரு விழாவில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது .

Updated on

'அன்பே வா' சினிமா படப் பாட்டுப் புத்தகம் எப்படி இருக்கும் தெரியுமா ?

14.01.1966 பொங்கல் அன்று ரிலீஸ் ஆனது அன்பே வா. எம் ஜி ஆர் நடித்த சினிமா. அந்தக் காலத்தில் சினிமா தியேட்டர்களில் அந்தப் படத்தின் பாட்டு புத்தகம் தியேட்டர்களில் விற்பார்கள்.

படத்தின் காட்சிகள் ஸ்டில் ஆக தியேட்டர் வராந்தாவில் காட்சிப் படுத்துவார்கள். அதை மக்கள் பார்த்து ஓரளவு கதையை யூகிக்க ஆர்வம் காட்டுவார்கள். படப் பெட்டிகளுடன் பாட்டு புத்தகங்களும் கட்டு தனியாக வரும்.

அன்பே வா படத்தின் பாட்டு புத்தகம் புதுமையாக இருந்தது. அது செவ்வக வடிவ புத்தகமாக இல்லாமல் வட்ட வடிவில் கிராம ஃபோன் ரெகார்டு வடிவத்தில் புதுமையாக இருந்தது.

இதன் அடிப்படை என்னவென்றால் அன்பே வா தயாரித்த ஏவிஎம் அவர்கள் தகப்பனார் ஆவிச்சி செட்டியார் 1928 ஆரம்பகாலத்தில் காரைக்குடியில் கிராம போன் ரெகார்டுகள் விற்பனை செய்தார்.

பின்னர் சென்னையில் 1932 ல் 'சரஸ்வதி ஸ்டோர்ஸ்' ஆரம்பித்து கிராமபோன் ரெகார்டுகள் இசை ரெகார்டிங்குகள் விற்பனை நடந்தது. அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் கம்பெனியின் ஆஸ்தானப் பாடகர் போல் தொடர்ந்து ரெகார்டுகள் தந்தார். ஸரஸ்வதி பாய் என்ற கதாகாலட்சேப பெண்மணி ரெகார்டுகள் பதிவுக்கு அப்போதே 1933 ல் ரூ10000 சன்மானம் பெற்றார்.

அன்பே வா
அன்பே வா

ஜெர்மனி ஓடியன் கம்பெனி, பெர்லினில் இவற்றைத் தயாரித்துக் கொடுத்தனர். யுத்தகாலத்தில் ஜெர்மன் அரசு தடை செய்யவே கல்கத்தா ஹெச் எம் வி கம்பெனியுடன் சேர்ந்து இசைத்தட்டுகள் வெளியிட்டனர்.

எம் கே தியாகராஜபாகவதர் சரஸ்வதி ஸ்டோர்ஸ் கம்பெனிக்கு பாடி ரெகாடிங் செய்ய மறுத்து விட்டார். இவர்கள் துறையூர் ராஜகோபாலசர்மா என்பவரை அதே பாடல்களை ஆர்செஸ்ட்ராவில் பாட வைத்து இசைத்தட்டுகளாக விற்பனை செய்து அமோகமாக விற்பனை ஆனது.

(கால ஓட்டத்தில் 1970 களில் சினிமா பாட்டு கேஸட்டுகள், சிடிக்கள் விற்பனை செய்தார்கள். 1980ல் பின்னர் அது தாசபிரகாஷ் உணவகத்துடன் இணைந்து ஹோட்டலாக மாறிவிட்டது. தற்போது டிடிகே சாலைக்கு இடம் மாறிவிட்டது ஏவிஎம் சவுண்ட் ஸோன். இசை சிடி, டிவிடி விற்பனையகம்)

அதனால் தானோ என்னவோ அன்பே வா பாட்டு புத்தகம் கிராம போன் ரெகார்டு வடிவில் இருந்தது.

இன்றும் அன்பே வா திரைப்பட வரலாற்றிலும் ஏவி எம் வரலாற்றிலும் அதிகம் விவாதிக்கப்படும் படம் ஆகும். அது ஏ வி எம்மின் முதல் வண்ணப் படம். சிவாஜி, ஜெமினி, கமலஹாசன், டி ஆர் மகாலிங்கம், கே ஆர் ராமசாமி இவர்கள் நிறைய படம் பண்ணி இருந்தாலும் எம் ஜி ஆர் வைத்து இவர்கள் தயாரித்தது அன்பே வா மட்டுமே. எம் சரவணன் அவர்கள் எம் ஜி ஆர் ரசிகர். அவரை வைத்து ஒரு படம் எடுக்க ஆசைப்பட்டார்.

அன்பே வா
அன்பே வா

பாடல்கள், ஒளிப்பதிவு, இசை, செட் அமைப்புகள் காட்சி ஜோடனைகள் எல்லாமே பிரம்மாண்டம்.

ஏ சி திருலோகசந்தர் இயக்கத்திலும் அவர் நடித்தது இது ஒன்றே. எம் ஜி ஆரின் சம்பளம் அப்போது அவர் பெற்றது ரூ 3,25,000/- ஆகும். படத்தயாரிப்பு மொத்த செலவு ரூ 30 லட்சத்தில் 10% எம் ஜி ஆர் சம்பளம்.

ஆனந்த விகடனில் அப்போது பணியாற்றிய சாவி இந்தப் படக்குழுவுடன் சென்றார் உதவிக்கு. அவரும் புதிய வானம் பாட்டில் தலைகாட்டுவார்.

கதை சிம்லாவில் நடப்பதாக இருக்கும். சிம்லாவில் மொத்தம் 5 நாட்கள் தான் படப்பிடிப்பு நடந்தது. மீதம் ஊட்டியில் எடுத்தார்கள். படம் வெளியாகி நல்ல வசூலைக் கொடுத்தது. எம் ஜி ஆர் ஃபார்முலா இல்லாமல் ஒரு காதல் கதை. படத்தில் வில்லன், ஹீரோ, ஹீரோயின் இடையே வரும் ஈகோ தான்.

1961ல் வெளியான 'கம் செப்டம்பர்' என்ற ஆங்கிலப் படத்தை ஒட்டி எடுத்ததாகச் சொல்வார்கள்.

கல்கி விமர்சனத்தில் படத்தின் ஒளிப்பதிவு, (ஓளிப்பதிவாளார் மாருதி ராவ்) சிம்லா காட்சிகள் படமாக்கிய விதம், திருலோகசந்தரின் இயக்கம், நாகேஷ் காமெடி, எம்ஜி ஆர், சரோஜாதேவி ஜோடி நடிப்பை பாராட்டி எழுதி இருந்தார்கள்.

ஆனந்த விகடன் தன் விமர்சனத்தில் தமிழில் ஒரு ஆங்கிலப் படம்.கதை என்று ஏதுமில்லை. ஆனால் 3 மணி நேரம் பொழுது நன்றாகப் போகிறது என்றார்கள்.

ஏவி எம் நிறுவனத்தின் தாரக மந்திரம் நேர்மை மற்றும் சிக்கனம். எதையும் வீணாக்க மாட்டார்கள். 1967 ல் மெஹர்பான் என ஒரு இந்திப்படத்தை எடுத்தார்கள். அசோக்குமார், சுனில்தத், நூடன் அதில் நடித்தனர். இயக்கம் ஏ.பீம்சிங்.(படிக்காத மேதை இந்தி பதிப்பு)

அந்தப் படத்திற்காக ஒரு பிரம்மாண்ட பங்களா செட் ஏவி எம் போட்டார்கள். படம் முடிவடைந்து அந்த செட்டைப் பிரிக்க மனம் வரவில்லை.

அதில் கொஞ்சம் மாற்றம் செய்து அதில் எடுத்த படம் தான் தமிழ் த்ரில்லர் அதே கண்கள். ஏசி திருலோகசந்தர் இயக்கம். செட்டைப் பார்த்துவிட்டு ஒரு திகில் படம் எடுக்கலாம் எனச் சொல்லி ஒரே வாரத்தில் கதை தயாரித்துவிட்டார் அவர்.

கும்னாம், பீஸ் ஸால் பாத், பூட் பங்களா திகில் படங்களைக் குழைத்து ஒரு கதை தயாரித்துவிட்டார். 26.05.1967 ல் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது அதே கண்கள். கல்கி தன் விமர்சனத்தில் ஒளிப்பதிவு, செட்களின் படோபடாபம் இவற்றைப் பாராட்டி எழுதி இருந்தார்கள்.

அன்பே வா
அன்பே வா

எம் ஜி ஆர் அன்பே வா படத்தில் கறுப்பு சிவப்பு பட்டை போட்ட கோட் போட்டிருப்பார். அந்த உடைகள், அவரின் கார் எல்லாம் இன்றும் பத்திரப்படுத்தி வைத்துள்ளார்கள்.

அந்தப் படத்தில் காமெடிக்கு டணால் தங்கவேலுவை சிபாரிசு செய்தார் எம் ஜி ஆர். ஆனால் ஏ வி எம் தங்கள் ஆஸ்தான நடிகர் டி ஆர் ராமச்சந்திரனை நடிக்க வைக்க முடிவெடுத்துவிட்டார்கள். எம் ஜி ஆர் எதுவும் மறுப்பு சொல்லவில்லை. ஆனால் தன் கருத்தை டி ஆர் ராமச்சந்திரனிடம் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். ஹீரோயினுக்கு ஜெயலலிதா அவர்களையும் எம் ஜி ஆர் சிபாரிசு செய்தார் என்பார்கள்.

அன்பே வா
அன்பே வா

டி ஆர் ராமச்சந்திரன் ஒரு வைதீக சுத்த சைவர். படத்தில் அவர் புண்ணாக்கு வியாபாரி புண்ணியகோடி. அவர் சிக்கன் சாப்பிடும் சீன் வரும். அதற்காக கேக் மூலம் சிக்கன் மாதிரி செய்து சாப்பிடச் சொல்லி படமாக்கினார்கள்.

அன்பே வா படத்தின் ஆரம்பத்தில் நாயகன் எம் ஜி ஆர், ஜே பி என்ற தொழில் அதிபர் விமானத்தில் பயணிக்கும் ஒரு காட்சி வரும். அதில் பக்கத்து சீட் பயணியாக நடித்தவர் யார் தெரியுமா… அதே கண்கள் படத்தில் வரும் கொலைகாரன் சாமியார் வேடம் போட்ட அதே நடிகர் செல்வகுமார் தான்.

அன்பே வா படத்தின் பாடல் வரிகளை இப்படி எழுதி இருந்தார் வாலி. புதிய வானம் புதிய பூமி பாட்டில் உதய சூரியனின் பார்வையிலே…. பட நிறுவனம் லிரிக்ஸை மாற்றுங்கள். சென்ஸார் ஆட்சேபிப்பார்கள் எனச் சொல்லி வாலி புதிய சூரியனின் பார்வையிலே என மாற்றி டி எம் எஸ் பாடினார். ஆனால் படத்திலோ எம் ஜி ஆர் வாயசைப்பு உதய சூரியன் என்று தான் இருக்கும்.

அரசியலும் சினிமாவும் எம்ஜி ஆரின் இரு கண்கள், இரு கைகள், இரு கால்களாக இருந்த காலம் அது. அண்ணாவின் இதயத்தில் அவருக்கு தனி இடம் இருந்தது.

அன்பே வா
அன்பே வா

போராட்டங்களில் கலந்து கொள்ள எம் ஜி ஆர் ஆர்வம் காட்டினாலும் அண்ணா அவரை நம்பி பணத்தைக் கொட்டி முதலீடு செய்பவர்கள் பாதிப்படைவார்கள் என எம் ஜி ஆரை போராட்டங்களில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு அளித்தார். அதற்கு ஈடாக எம் ஜி ஆரும் தன் உடை, நடை, பாவனை, கதை வசனங்களில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் முடிந்த அளவு அரசியலை நுழைத்து அண்ணாவுக்கு பக்க பலமாய் இருந்தார்.

'தொழிலாளி' படத்தில் ஒரு வசனத்தை எம் ஜி ஆர் இந்த பஸ் தொழிலாளிகளின் நம்பிக்கை சூரியன் எனச் சொல்ல. எம் ஆர் ராதா ஆட்சேபித்தார். உன் அரசியலை சினிமாவுக்கு வெளியே வச்சுக்கோ எனக் கடுகடுத்தார். அந்த வசனம் மாற்றப்பட்டது. நம்பிக்கை நட்சத்திரம் என்று.

இன்றும் அன்பே வா படப் பாடல் 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' சிம்பொனி இசைக் குழுக்களால் இசையாக வாசிக்கப் பட்டு இணையத்தில் வைரலாகி அமோக ஆதரவு பெற்று வருகிறது.

‘அன்பே வா’ திரைப்படத்தின் புதுமையான பாட்டுப் புத்தகத்தின் பின்னணி மற்றும் ஏவிஎம் நிறுவனத்தின் வரலாற்றுப் பொக்கிஷங்களை வாசகர்கள் தெரிந்துகொள்வார்கள்.

logo
Kalki Online
kalkionline.com