மகன், மகளால் கைவிடப்பட்ட தந்தைக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த 'வாழ்வு'!

ஏழைகளின் இதயத் தெய்வமான பொன்மனச்செம்மலின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக நிறைய சம்பவங்கள் உண்டு ... இரண்டு சம்பவங்கள் இப்பதிவில்...
MGR true stories
Actor MGR
Published on

தனது சிறுவயதில் எம். ஜி.ஆர் கும்பகோணத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது, ஒரு நாள் அவரது தாய்க்கு வேலை செய்ய முடியாமல் காய்ச்சல் வந்தது. குடும்ப சூழலின் காரணமாக அவர்களிடம் பெரிதும் பண வசதி இல்லை. அந்த சமயம், ஒரு பெரியவர் எம். ஜி. ஆரின் அன்னைக்குப் பணம் கொடுத்து உதவினார். இத்தனைக்கும் அந்த பெரியவர் உறவினர் கூட கிடையாது. அவர் கொடுத்த பணம் மிக உதவியாக இருந்தது.

எம் .ஜி.ஆரின் அன்னை அவரிடம் "இந்த பெரியவர் நம்மிடம் எந்த பலனையும் எதிர்பாராமல் உதவி செய்திருக்கிறார். அவருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். எதிர்காலத்தில் நீ நல்ல நிலைக்கு வந்தால் மறக்காமல் இந்த பெரியவருக்கு மரியாதை செய்" என்று கூறியிருந்தார்.

முதன்முதலில் சதி லீலாவதி படம் நடித்து பெற்ற ரூ 100 பணத்தை தாயிடம் கொடுத்து வணங்கினார். பட வாய்ப்புகள் சுமாராக இருந்தது. ஆனால் இவர் தன்னம்பிக்கையை விடவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு மிகவும் பிரபலமானார். அவர் பிரபலமான பிறகு கும்பகோணத்தில் தனக்கு உதவிய பெரியவரை ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து விருந்து வைத்து உபசரித்து  கணிசமான பணம் கொடுத்தார். அந்தப் பெரியவர் மெய்சிலிர்த்தார்.

"தம்பி அன்று நான் வசதியாக இருந்தேன்.  நான் உங்களுக்குச் செய்த உதவி சாதாரணமானது தான். எனக்கு இத்தனை மரியாதை கொடுத்து , கணிசமான பணமும் தந்து கௌரவிக்கிறீர்களே எனக்கு பணம் வேண்டாம். உங்கள் அன்பு ஒன்றே போதுமே," என்றார்.  

அதற்கு எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே"ஐயா, நான் உங்களை மறக்க மாட்டேன். எனது அன்பளிப்பை ஏற்றுக் கொண்டால்தான் மகிழ்ச்சி அடைவேன். அன்று தாங்கள் செய்த உதவிக்கு இது ஈடாகாது. ஏற்றுக் கொள்ளுங்கள்," என்றார்.

கண் கலங்கிய அந்த பெரியவர் "இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வள்ளலாக இருக்கிறீர்களே" என்று கூற அதற்கு பொன்மனச்செம்மல் "நீங்கள் எனக்கு அன்றைக்கு வள்ளலாகத் திகழ்ந்தீர்கள்," என்றார். 

பெரியவருக்கு அந்த பணம் உதவியாக இருந்தது. நல்ல மனித நேயம் படைத்தவராக எம். ஜி. ஆர். இருந்தார். தனக்கு உதவி செய்பவர்களை உயர்வாக நினைத்தார்.

1965ம் வருடம்  'எங்கள் வீட்டுப் பிள்ளை' படம் வெளியாகி வெற்றியுடன் ஓட  எம். ஜி. ஆர். தென் மாவட்டங்களுக்கு வந்தார். தூத்துக்குடியில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு தரப்பட்டது.  திறந்த வேனில் அவர் மஞ்சள் ஜிப்பா, எட்டுமுழ வேட்டி துண்டு அணிந்து புன்னகையுடன் மக்களை கை குவித்து வர ஒரு பெரியவர்  கண்ணீர் விடுவதைப் பார்த்தார். அவரை தன் வேனில் ஏற்றிக் கொண்டார்.

பிறகு பொதுக்கூட்டம் முடிந்ததும் அந்த பெரியவரையும் சாப்பிடச் செய்து அவரது பிரச்னையைக் கேட்க, அந்தப் பெரியவர் தனது பிள்ளையும் பெண்ணும் சோறு போடுவதில்லை என்றும், தனக்கு கண்புரை பிரச்னை உள்ளது என்று கூறினார். அந்தப் பெரியவருக்கு 4 செட் புதிய துணி எடுத்துத்தந்து ஆபரேஷன் செலவையும் ஏற்றுக் கொண்டார் பொன்மனச்செம்மல். 

இதையும் படியுங்கள்:
MGR Quotes: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 15 பொன்மொழிகள்!
MGR true stories

மேலும் 15,000 பணமும் தர, அந்த பணத்திலிருந்தது பெரியவருக்கு வட்டி வந்ததால், மகனும் மகளும் அப்பாவை மதித்தனர். தனது பெருந்தன்மையால் பெரியவரின் பிரச்னையைக் தீர்த்தார்.

ஆதாரம்: (ரங்கவாசன் (பிசீனிவாசன்) எழுதிய 'மக்கள் ஆசான் எம். ஜி.ஆர்.' என்ற நூலிலிருந்து தொகுப்பு)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com