
இப்போதெல்லாம் கதை இல்லாத படங்கள்கூட வரலாம்; ஆனால் ‘பஞ்ச் டயலாக்' இல்லாத படங்களை பார்ப்பது மிகவும் அரிது. முன்னணி நடிகர்கள் எல்லோருமே தங்களுடைய படங்களில் வில்லனிடம் சவால் விடும் போது ‘பஞ்ச்' பேசாமல் இருப்பதில்லை.
சினிமாவில் இந்த ‘பஞ்ச் டயலாக்'க்கு பிள்ளையார் சுழி போட்டது யாருனு தெரியுமா? அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான். அவரது ‘பஞ்ச் டயலாக்' ரசிப்பதற்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இந்த வகையில் அவரது ‘பஞ்ச் டயலாக்' கள் கருத்துள்ளதாக இருக்கும்.
எம்.ஜி.ஆர் மறைந்து 37 ஆண்டுகள் ஓடிவிட்டாலும் மக்கள் இதயத்தில் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவரின் நினைவுநாள் 24-ம் தேதி கடைபிடிக்க இருப்பதையொட்டி, தனது படங்களில் அவர் பேசிய சில ‘பஞ்ச் டயலாக்'குகள் பற்றி பார்க்கலாம்.
எம்.ஜி.ஆர் வசனங்கள் பெரும்பாலும் அநீதியை எதிர்ப்பதாகவும், ஒடுக்கப்பட்ட - ஆதரவற்ற ஏழை - எளியவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதாகவும், சத்தியத்தை நிலைநாட்டுவதாகவும், தான தர்மங்களை வலியுறுத்துவதாகவும்தான் இருக்கும். படங்களில் அவர் பேசிய ‘பஞ்ச் டயலாக்'குள் பல அவரது கொள்கைகளை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தன.
எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை தொடங்கிய பின் வெளியான படங்களில் அவர் பேசும் வசனங்களில் அரசியல் வாடை இருந்ததையும், அவற்றின் உள் அர்த்தத்தையும் ரசிகர்கள் நன்றாகவே புரிந்து கொண்டனர். இதனால் அந்த வசனங்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது.
‘ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் எம்.ஜி.ஆர். பேசும் வசனங்கள் எல்லாமே காலத்தால் அழியாத புரட்சிகரமான கருத்துகளை கொண்ட ‘பஞ்ச் டயலாக்'குகள்தான். அதிலும் குறிப்பாக “மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?” என்று நம்பியார் ஆவேசத்தில் பிளிற, அதற்கு எம்.ஜி.ஆர்., “சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்” என்று பதிலடி கொடுப்பார். தொடர்ந்து நம்பியார், “தோல்வியே அறியாதவன் நான்”... என்று செல்ல, அதற்கு எம்.ஜி.ஆர். “தோல்வியை எதிரிக்கு பரிசளித்தே பழகியவன் நான்”... என்பார்.
‘சந்திரோதயம்' படத்தில் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரிடம், “சந்திரா நீ யாரோட மோதிப் பாக்குற?" என்று எச்சரிக்க, அதற்கு எம்.ஜி.ஆர்.; “என் எதிரிகூட எனக்கு சமமா இல்லன்னா அலட்சியப்படுத்துறவன் நான்” என பதிலடி கொடுக்கும் காட்சியில் ரசிகர்களின் விசில் சத்தத்தில் தியேட்டரே அதிரும்.
‘நான் ஆணையிட்டால்' படத்தில் ஒரு காட்சியில் வில்லன் மனோகர்; “நான் பயங்கரமானவன்” என்று மிரட்ட, அதற்கு எம்.ஜி,ஆர், சாந்தமாக, “நான் பயப்படாதவன்” என்று பதிலடி கொடுக்கும் போது தியேட்டரே அதிரும்.
‘நம்நாடு' படத்தில் ரங்கராவிடம் அவர் பேசும், “என்னோட முதல் என்ன தெரியுமா? என்னோட நாணயம்! மக்கள் என் மேல் வச்சிருக்கிற நம்பிக்கை. அதுக்கு என்னிக்குமே மோசம் வராது” என்ற வசனம் அவரது நிஜ வாழ்க்கையை பிரதிபலித்தது.
“என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர; நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை” - 'நாடோடி மன்னனில்' எம்.ஜி.ஆர். பேசும் பிரபலமான ‘பஞ்ச் டயலாக்’ இது.
ஒரு படத்தில் அவர் ‘நான் சொல்வதைத்தான் செய்வேன்; செய்வதைத்தான் சொல்வேன்’ என்று ஒரு வசனம் பேசுவார். சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் அப்படி இருந்ததால்தான் மறைந்தும் மறையாமல் அவர் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், எம்.ஜி.ஆரின் சினிமா வசனம் யதார்த்த வாழ்க்கையில் நிஜம் ஆகி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.