

ஒரு பணக்காரக் குடும்பத்தில் தேசத்துக்கு எதிரான நாசவேலை சதிகள் அரங்கேறுவதாக உளவுத்துறை சந்தேகிக்கிறது. அந்தக் குடும்பத்தில் குடும்பத்தலைவர், நாடகத்தில் நடிக்க ஆட்கள் தேவை என பத்திரிக்கையில் விளம்பரம் தருகிறார்.
நாயகன் ஒரு ரகசிய உளவாளி. அவரது அம்மா, தங்கைக்குக் கூட அவர் போலீஸ் டிபார்ட்மெண்ட் சீக்ரெட் ஏஜெண்ட் என்பது தெரியாது.
ஒரு நாடக நடிகன் போல அந்தக் குடும்பத்தில் ஊடுருவி உண்மைகளைக் கண்டு பிடிக்க டிபார்ட்மெண்ட் உத்தரவிடுகிறது.
அந்தக் குடும்பத்தலைவரின் மகள் தான் நாயகி. மகன் தான் வில்லன். அதாவது நாயகியின் அண்ணன் தான் வில்லன். தேசத்துக்கு எதிரான நாசவேலைகளை வில்லன் ரகசியமாக செய்வது வில்லனின் அப்பாவுக்குத்தெரியாது.
வில்லனுக்கு ஒரு காதலி உண்டு. நாயகனுடன் நெருக்கமாகப் பழகி உண்மைகளைக் கண்டுபிடி என வில்லன் சொல்கிறான். நாயகியோ நாயகனிடம் "நீங்கள் ஒரு ஜமீன்தாரர் என பொய் சொல்லி என் அண்ணனின் காதலியுடன் பழகி அவளை உங்கள் காதல் வலையில் விழ வையுங்கள். என் அண்ணன் அவளிடம் சிக்கி சொத்துக்களை எல்லாம் இழந்து விடுவான் போல் தெரிகிறது" என்கிறாள்
இப்போது நாயகனுக்கு 3 டாஸ்க்குகள்:
டிபார்ட்மெண்ட் உத்தர்வுப்படி குடும்பத்தில் நடக்கும் ரகசிய சதி வேலைகளைப் பற்றிய விபரங்களைத் தெரிவிக்க வேண்டும்
வில்லனின் காதலியைக் காதலிப்பது போல் நடிக்க வேண்டும்.
நாயகியை நிஜமாகக் காதலிக்க வேண்டும்.
மேற்கண்ட மிக சிரமமான ஒரு வேலை, ஜாலியான இரு வேலைகளை நாயகன் செய்தாரா? என்பது மீதித் திரைக்கதை.
நாயகன் ஆக புரட்சித்தலைவர் எம் ஜி ஆர். வழக்கமாக ஏழை பங்காளன் ஆக வருபவர் இதில் சீக்ரெட் ஏஜெண்ட், ஜமீன்தார் ரோல்களில் வருவதால், சீன் பை சீன் ஆர்ப்பாட்டமான ,ஆடம்பரமான உடைகள்தான்.
எப்போதும் கோட் சூட் தான். கம்பீரமாக வருகிறார். ஜாலியாக டூயட் பாடுகிறார். வில்லன்களுடன் பைட் போடுகிறார்.
மெயின் கதைக்கு சம்பந்தம் இருக்கோ, இல்லையோ எம் ஜி ஆர் படங்களில் அம்மா, தங்கை செண்ட்டிமெண்ட் கண்டிப்பாக இருக்கும் ( விதி விலக்கு - அன்பே வா) இதிலும் அவை உண்டு.
நாயகி ஆக புரட்சித்தலைவி ஜெயலலிதா. பணத்திமிர், செல்வ செருக்கு , பொறாமை , காதல் போன்ற உணர்வுகளை பிரமாதமாக உடல் மொழியில் கொண்டு வருகிறார்.
மன்னன் விஜயசாந்தி , படையப்பா ரம்யா கிருஷ்ணன் போன்ற ஆர்ப்பாட்டமான வில்லி கேரக்டர்களுக்கு இவர் தான் முன்னோடி.
மெயின் வில்லன் ஆக அசோகன். உடல் மொழியில், நடிப்பில் கலக்குகிறார். இன்னொரு வில்லன் ஆக எம் என் நம்பியார். இவர் இரு வேடங்கள் என்ற க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டும் உண்டு.
வில்லனின் காதலி ஆக வெண்ணிற ஆடை நிர்மலா. ஆர்ப்பாட்டமாக அறிமுகம் ஆகி அதிக வாய்ப்பில்லாமல் ஒதுங்கி நிற்கிறார்.
நாயகனின் தங்கை ஆக குமாரி பத்மினி. கெஸ்ட் ரோலில் வருகிறார்.
மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு காமெடி டிராக்கில் நாகேஷ் + அம்முக்குட்டி புஷ்பமாலா வருகிறார்கள். ஆள் மாறாட்டக் குழந்தை காமெடி ரசிக்க வைக்கிறது.
இவர்கள் போக என்னத்த கன்னையா, உசிலைமணி, ஜஸ்டின் ஆகியோர் சின்ன ரோல்களில் வந்து போகிறார்கள்.
எம் எஸ் விஸ்வநாதன் இசையில் 6 சூப்பர் ஹிட் பாடல்கள். வி.ராமமூர்த்தியின் ஒளிப்பதிவில் எம் ஜி ஆர் , ஜெ இருவரும் கல்ர்புல் கலக்கலாகத் தெரிகிறார்கள். டார்க் ஷேடு உடைகள் எம்ஜிஆருக்குப் பிரமாதமாக செட் ஆகி இருக்கிறது. குறிப்பாக சிவப்பு வண்ண உடை அவருக்கு மிகப்பொருத்தம்.
ஆர் தேவராஜனின் எடிட்டிங்கில் படம் 163 நிமிடங்கள் ஓடுகிறது.
ஜி பாலசுப்ரமணியம் எழுதிய கதை, திரைக்கதைக்கு உயிர் கொடுத்து இயக்கி இருப்பவர் பி ஆர் பந்துலு.
சபாஷ் டைரக்டர்
நாயகன் பாகிஸ்தானில் இருந்து தப்பி வரும் ஓப்பனிங் சீன் அசத்தலான அறிமுகக்காட்சி
ஸ்பை ஆக்சன் டிராமா என்றாலும் கமர்ஷியல் விஷயங்களை அதாவது டூயட், ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டம், காமெடி என விறுவிறுப்பாகப் படத்தைக் கொண்டு சென்ற விதம்
எம் ஜி ஆர் + ஜெ இருவரின் கலக்கலான ஸ்க்ரீன் பிரசன்ஸ்
எம் ஜி ஆர் பேசும் உள் குத்து வசனங்கள், பஞ்ச் டயலாக்ஸ்
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போல அந்தக் காலத்திலேயே ரகசிய மைக், பென் டைப் காமராவை நாயகன் உபயோகிப்பது
செம ஹிட் சாங்க்ஸ்:
கண்ணே! கண்ணே! கனியே! கனியே! முத்தே! முத்தே! அருகே வா (வில்லனின் காதலியை மயக்க நாயகன் ட்ராமா டூயட் சாங்க்)
உன்னை எண்ணி என்னை மறந்தேன் (வில்லனின் காதலி நாயகனை மயக்க ஆடும் நடனம், சோலோ சாங்க்)
கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ (வில்லன் உடைய காதலி நாயகனை மயக்கப்பாடும் சாங்க்)
என்ன பொருத்தம்? நமக்குள் இந்தப் பொருத்தம்? (நாயகன் + நாயகி டூயட் சாங்க்)
பால், தமிழ்ப்பால் (வாலியின் வார்த்தை விளையாட்டுக் கவிதைநயத்துடன் வரும் நாயகன் - நாயகி சாங்க்)
சந்தனம், குங்குமம் கொண்ட தாமரைப்பூ (க்ளைமாக்ஸ்க்கு முன்பு வரும் சாங்க்)
சில சுவராஸ்யத் தகவல்கள்:
இயக்குநர் பி ஆர் பந்துலு + எம் எஸ் விஸ்வநாதன் இருவரும் இணைந்து பணியாற்றிய 3 வது படம் இது
இந்தப்படத்தில் 6 பாடல்கள் இருந்தாலும் நாயகிக்கு 3 பாடல்கள் தான். வில்லனின் காதலிக்கு 3 பாடல்கள். இதில் ஜெ வுக்கு மன வருத்தம். எம்ஜிஆர் ஜெ வை சமாதானம் செய்தார்!
இந்த காலகட்டத்தில் ஜெ சிவாஜி ஜோடி பொருத்தம் அருமை என இண்டஸ்ட்ரியில் ஒரு பேச்சு இருந்தது. அதைப்போக்கும் விதமாக எம் ஜி ஆர் கண்ணதாசனிடம் ஆலோசனை செய்து அதன்படி பாடலின் முதல் வரியில் எம் ஜி ஆர் + ஜெ ஜோடியை சிலாகிக்கும் வகையில் பாடல் எழுத வைத்தார் ( என்ன பொருத்தம் நமக்குள் இந்தப்பொருத்தம்)
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத்துடித்தேன் பாடலில் தேன் என்ற சொல் ரிப்பீட்டாய் வருவது போல இதிலும் ஒரு பாடல் வேண்டும் என எம் ஜி ஆர் கேட்டுக்கொள்ள அதன்படி வாலி எழுதிய பாடல் தான் பால் தமிழ்ப்பால் பாடல்
எம் ஜி ஆர் எம் ஆர் ராதாவால் சுடப்பட்ட நேரம் காவல் காரன் பட ஷூட்டிங் டைம். அதற்கு அடுத்த ஆண்டு வெளியான படம் இது என்பதால் வசன உச்சரிப்பில் ஒலி மாற்றம் தெரிய வேறு ஒருவரை டப்பிஙக் பேச வைக்கலாம் என இயக்குநர் கூற, எம் ஜி ஆர் பிடிவாதமாக அவரே டப்பிஙக் பேசினார்!
க்ளைமாக்சில் சவப்பெட்டியில் இருந்து எம் ஜி ஆர் உயிருடன் எழுந்து வந்து நான் உயிரோட தான் இருக்கேன் என்று வசனம் பேசும்போது தியேட்டரில் எம் ஜி ஆர் ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்களாம்
எம் ஜி ஆர் + ஜெ இருவருக்குமான உடை தேர்வு ஜெ தான் செய்தார். ஒரே கலர் டிரஸ் மேட்சுக்கு மேட்சாக இருக்கும்
வேட்டைக்காரன்க்கு முன்பு வரை காதல் காட்சிகளில் எம் ஜி ஆர் சோபிப்பது இல்லை என பத்திரிக்கைகள் விமர்சனம் எழுதின. இதில் எம் ஜி ஆர் + ஜெ கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆனதாக விகடன் விமர்சித்தது
கல்கி வார இதழ் விமர்சனத்தில் படத்தில் டைட்டிலுக்கு ஏற்றபடி 115 மைனஸ் பாயிண்ட்ஸ் என கிண்டல் செய்து இருந்தது. அசோகனின் நடிப்பு டாப் என்றது
இந்தப்படத்தில் இறப்பதாகக் காட்டப்படும் வெண்ணிற ஆடை நிர்மலா இப்போது உயிருடன் இருக்கிறார். மற்ற அனைவரும் இறந்து விட்டார்கள்.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -13+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஜாலியான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஆக்சன் மசாலாப்படம்.