மிடில் கிளாஸ் திரைப்பட விமர்சனம்!
ரேட்டிங்(3 / 5)
சினிமாவில் ஒரு நடிகர் நடித்த கதாபாத்திரம் மக்களுக்கு பிடித்து விட்டால் அந்த கதாபாத்திரத்தின் பெயருடன் சேர்த்து அந்த நடிகரை நினைவு கொள்வார்கள். ஆனால் முதல் முறையாக தமிழ் சினிமாவில் தன் இயற்பெயரை மாற்றிக் கொண்டு மக்களால் கொண்டாடப்பட்ட கதாபாத்திர பெயரையே தனக்கு வைத்து கொண்டுள்ளார் முனிஷ்காந்த்.
நடிகர் முனீஷ்காந்தின் ஒரிஜினல் பெயர் ராம்தாஸ். சில வருடங்களுக்கு முன் வெளியான முண்டாசுப்பட்டி படத்தில் இவர் பெயர் முனிஷ்காந்த். இந்த படமும் இவரது கேரக்டரும் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் பிறகு முனிஷ்காந்த் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார். டைட்டிலில் இந்த பெயரை தான் பயன்படுத்துகிறார்கள் தற்போது முனிஷ்காந்த் கதையின் நாயகனாக நடித்து வெளிவந்துள்ள படம் மிடில் கிளாஸ். விஜயலக்ஷ்மி அகத்தியன் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
முனிஷ் அவரது மனைவி, குழந்தைகள் சென்னையில் ஒரு சுமாரான அப்பார்ட்மெண்ட் வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு தனியார் கம்பெனியில் ஆபீஸ் உதவியாளராக வேலை செய்து வருகிறார் முனிஷ். மனைவி விஜயலக்ஷ்மிக்கு ஆடம்பரமாக வாழ ஆசை. இதனால் பணம் சம்பாதிக்க படாதபாடு படுகிறார் முனிஷ். ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்யும் முனிஷ் தந்தை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு பாத்திரம் கிடைக்கிறது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தன்னிடம் வேலை செய்தராம் லால் செட் என்பருக்கு தன் கடையை இலவசமாக எழுதி தந்திருக்கிறார் அப்பா.
இந்த சேட்டிடடம் சென்று பண உதவி கேட்க செல்கிறார் முனிஷ்காந்த். சேட் பண உதவி செய்வதாக சொல்லி ஒரு கோடி ரூபாய்க்கு காசோலை எழுதி தருகிறார். அந்த காசோலையை வங்கிக்கு சென்று காசோலை செலுத்த செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக காசோலையை தொலைத்து விடுகிறார். பல இடங்களுக்கு சென்று காசோலையை தேடுகிறார். எங்கேயும் கிடைக்க வில்லை. இறுதியாக டிடக்ட்டிவ் ராதாரவியின் உதவியை நாடுகிறார்.
"என் அக்கா அழகும் அறிவும் என்னை விட கம்மி, ஆனா இன்னைக்கு எல்லா கல்யாணத்துக்கும் அவ கழுத்து நிறைய நகை போட்டுக்கிட்டு வாரா, அதுக்கு காரணம் அவ புருஷன்" என்று விஷயலக்ஷ்மி வசனம் பேசும் போது தியேட்டரில் பல ஆண்கள் "இது நம்ம வீட்டுல அடிக்கடி கேட்கற வசனமாச்சே“ என யோசிப்பதை பார்க்க முடிந்தது. படத்தின் முதல் பாதி ஒரு டிவி தொடர் பார்த்த உணர்வை மட்டுமே தருகிறது.
செக் தொலைந்த பின்பு வரும் இரண்டாம் பாதி காட்சிகள் த்ரில்லர், செண்டிமெண்ட் கலந்து மிக சிறப்பாக நகர்கிறது. த்ரிஷ்யம் படத்தில் வருவது போல, கடந்து போன நாளை மீண்டும் உருவாக்கி, தொலைந்து போன காசோலையை கண்டு பிடிக்க முயற்சி செய்வது, மன நல மருத்துவரின் உதவியுடன் காசோலையை கண்டுபிடிக்க முயற்சி செய்வது என பல காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது. இறுதியில் காசோலை தொலைந்த இடம் என்று ஒன்றை காட்டும் பொது "அட" இது புதுசா இருக்கே என சொல்லத்தோன்றுகிறது.
விஜயலட்சுமியின் நடிப்பை பார்க்கும் போது இவ்வளவு வருட தமிழ் சினிமாவில் இவரை ஏன் டைரக்டர்ஸ் சரியாக பயன்படுத்தவில்லை என சமகால இயக்குனர்களின் மீது கோபம் வருகிறது. விஜயலக்ஷ்மியை சரியாக பயன் படுத்தியதற்கு மிடில் கிளாஸ் டைரக்டர் கிஷோர் முத்துராமலிங்கத்தை பாராட்டலாம்.
ஒரு கணவனாக, குழந்தைகளை நேசிக்கும் அப்பாவாக, காசோலை தொலைந்த பின்பு மனைவியிடம் மறைக்கும் முயற்சிகள், லேசாக காமெடி என ஒரு நாயகனாக மனதில் இருக்கிறார் முனிஷ்காந்த். சூரிக்கு பிறகு காமெடி நடிகர் டு ஹீரோ வரிசையில் முனிஷ் சேர்ந்து விட்டார் என தைரியமாக சொல்லலாம். குழந்தைகள், ராம் லால் செட், ராதாரவி என அனைவருமே சரியான தேர்வுகள்.
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ஒரு மீடியம் பட்ஜெட் படத்திற்கு ஏற்றார் போல் உள்ளது. நல்லகுடும்ப சினிமாவை விரும்புவர்களுக்கு மிடில் கிளாஸ் கண்டிப்பாக பிடிக்கும். மிடில் கிளாஸ் - கனவுக்கும், உண்மைக்கும் இடையே உள்ள உண்மையை சொல்லும் படம்.

