'ரியல்' கணவன்-மனைவி, கணவன் மனைவியாக நடித்தத் திரைப்படம் - 'மிஸ்' பண்ணக் கூடாத படம்!

Missiamma movie
Missiamma movie

"பிருந்தாவனமும் நந்தகுமாரனும்..!"

பாடல் என்றும் கேட்டு மகிழலாம். அதுமட்டும் அல்ல, படத்தின் எல்லா பாடல்களும் அசத்தும். அந்த படம் தான் மிஸ்ஸியம்மா, 1955 ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் மின்னியது.

கருப்பு வெள்ளை படம். நேர்த்தியாக படம் பிடிக்கப் பட்டு , சிறந்த நகைச்சுவை இழையோடு, குடும்ப பாங்கான, சமூக கருத்தும் கலந்த படம்.

படம் போவதே தெரியாமல் கதை நகரும். ஒவ்வொரு நடிகர், நடிகையர்களும் மிகைப் படுத்தாமல் நடித்து இருப்பது தனி சிறப்பு.

68 வருடங்களுக்கு முன்பு வந்த படமாக இருந்தாலும், இன்றும் குடும்பத்துடன் அமர்ந்து, இந்த படம் பார்த்து ரசிக்கலாம்.

வேலையில்லா பட்டதாரி பாலு ( ஜெமினி கணேசன் ) வேலை தேவையுள்ள பட்டதாரி மேரி ( சாவித்ரி ) இருவருக்கும் ஒரு அரிய சந்தர்பம். அது தான் வேலை வாய்ப்பு. இருவரும் வெவ்வேறு மதம். பாலு ஒரு இந்து. மேரி கிறிஸ்துவ மதம். அந்த வேலைக்கு தேவை கணவன், மனைவி. மற்ற தகுதிகள் இருந்தும், இவர்கள் இருவரும் கணவன், மனைவி இல்லை என்பதால் வேலையும், சம்பாதிக்கும் வாய்ப்பும் கண்கள் எதிரே நழுவி விடும் போல் இருப்பது இருவருக்கும் ஏமாற்றமும், விரக்தியும் அளிக்கும். ஐடியா செய்து இருவரும் கணவன், மனைவியாக நடிக்க ஒப்புக் கொண்டு, அந்த கல்வி கற்று தரும் வேலையில் சேருவார்கள்.

அவர்களுக்கு உரிய மரியாதை, வசதி, சம்பளம் எல்லாம் போகிற இடத்தில் கிடைக்கும்.

இவர்கள் கணவன், மனைவி என்று அங்கு இருப்பவர்கள் நினைத்துக் கொள்ள இவர்கள் இருவர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாடு, சூழ்நிலைக்கு ஏற்ப ஏற்படும் சங்கடங்கள், கட்டாயங்கள் படம் பார்ப்பவர்களுக்கு விருந்து அளிக்கும்.

அந்த ஊரின் ஜமின்தார் பள்ளியில், தலைமை ஆசிரியர், ஆசிரியை மற்றும் பாட்டு டீச்சர் பணிகள் மற்றும் வேறு எதிர்பாராத நிகழ்வுகளுக்கு வழி வகுக்கும்.

அந்த ஜமீன்தாரின் மருமான், தான் ஒரு துப்பறியும் சிங்கம் என்று கூறிக் கொண்டு அட்டகாசம் செய்வார்.

ஜமீன்தாராக எஸ் வி ரங்கராவ் நடித்து அசத்துவார். அவர் மருமான் ரோலில் கே ஏ தங்கவேலு , தனது பாணியில் நகைச்சுவையில் கலக்குவார். க்ளைமாசில் குடும்பம் ஒன்று சேர இவர் துப்பறியும் சேவையால் உதவுவார். இவருக்கு அசிஸ்டெண்டாக ஏ கருணாநிதி.

ஜமீன்தார் தம்பதியின், இரண்டாவது மகளாக ஜமுனா நடிப்பார்.

ஜமுனாவிற்கு பாட்டு கற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பம் ஜெமினிக்கு கிடைக்கும் பொழுது, அதை சாவித்திரி விரும்பாமல் இருவருக்கும் லடாய் ஏற்படும்.

எம் என் நம்பியார், சாவித்திரி படிக்க அவரது பெற்றோருக்கு கடன் கொடுத்தவிட்டு நெருக்கடி கொடுப்பார்.

இதையும் படியுங்கள்:
தெலுங்கு கண்ணப்பா ரசிகர்களைக் கவர்வாரா?
Missiamma movie

கே சாரங்கபாணி, ஜெமினி கணேஷ் உடன் படம் முழுவதும் ட்ராவல் செய்து, அவர் பங்கை சரிவர செய்து இருப்பார்.

முடிவில் தெரியவரும் சாவித்திரி, ஜமீன்தார் தம்பதியின் பல வருடங்களுக்கு முன்னால் கோவில் திருவிழாவில் காணாமல் போன அவர்கள் முதல் பெண் என்று. இவரின் அடையாளத்தை கண்டு பிடிப்பதில் ( அந்த கால சினிமாக்களில் வரும் ) மச்சமும், தங்கவேலுவும் உதவுவார்கள்.

முடிவில் ஜெமினியும், சாவித்திரியும் உண்மையாக இந்த மிஸ்ஸியம்மா சினிமாவிலும் கணவன், மனைவி தம்பதி ஆகி படம் சுபமாக முடியும்.

வங்காளா மொழியின் கதையின் அடிப்படையில் உருவானது இந்த படத்தின் கதை.

இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியானது. ஜெமினி கணேஷனுக்கு அறிமுக இந்தி படம் இது.

எல் வி பிரசாத் டைரக்ட் செய்தார். திரைக் கதை, வசனம் அல்லூரி சக்ரபாணி, இசை எஸ் ராஜேஸ்வர ராவ், பின்னணி பாடியவர்கள்

ஏ எம் ராஜா, பி சுசிலா, பி லீலா.

பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள். காலத்தால் அழியாதவை. அன்றும், இன்றும், என்றும் கேட்டு மகிழலாம்.

பாடல்களில் சில:

அறியா பருவமடா, வாராயோ வெண்ணிலவே, தெரிந்துக் கொள்ளணும் பெண்ணே, பிருந்தவனமும் நந்தகுமார னும், முடியும் என்றால், என்னை ஆளும் மேரி மாதா, பழக தெரியனும், மாயாமே.

பார்த்தவர்கள் பெரும் பாலனோர் மறுபடியும், மறுபடியும் பார்த்து மகிழ்ந்து இருப்பார்கள் என்பது உறுதி.

பார்க்காதவர்களும், பார்த்து ரசிக்க வேண்டிய அருமையான படம் மிஸ்ஸியம்மா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com