தெலுங்கு கண்ணப்பா ரசிகர்களைக் கவர்வாரா?

 Kannappa movie
Kannappa movie

தென்னிந்திய திரைப்படங்களில் அதிரடியும் நகைச்சுவையும் கலந்த தெலுங்கும் படங்களுக்கு என்றுமே அதிக வரவேற்பு உண்டு. பெரும்பாலான தெலுங்குப் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வசூலை வாரியதுண்டு. அந்த வகையில் தற்போது அனைத்து ரசிகர்களாலும் பெருமளவில் எதிர்ப்பார்க்கப்படும் படமாகிறது கண்ணப்பா எனும் படம்.

கண்ணப்பா முகேஷ் குமார் சிங் இயக்கி இந்த ஆண்டு இறுதிக்குள் வரவிருக்கும் தெலுங்கு மொழி கற்பனை திரைப்படம். சிவனடியாரான கண்ணப்ப நாயனாரின் வரலாற்றை கூறும் வகையில் உருவாகி வரும் 'கண்ணப்பா' படத்தில், கண்ணப்பன் கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பதோடு, படத்தின் திரைக்கதையையும் எழுதியுள்ளார்.

'கண்ணப்பா' திரைப்படத்தை ஏ.வி.ஏ. என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி பேனரின் கீழ், விஷ்ணு மஞ்சுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான மோகன்பாபு தயாரிக்கவுள்ளார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மகாபாரதம்' தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இந்த படத்தை இயக்குகிறார். இசை மற்றும் பாடல்களை ஸ்டீபன் தேவஸ்ஸி மற்றும் மணி ஷர்மா ஆகியோர் இசையமைக்கிறார்கள்.

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் பான் இந்தியன் திரைப்படமாகவும் கண்ணப்பாவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில்  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் அக்சய் குமார் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் தெலுங்கு திரையுலகில் நடிகர் அக்சய் குமார் அறிமுகமாக உள்ளார். நடிகர் அக்சய் குமாரை தெலுங்கு சினிமாவிற்கு வரவேற்பதாக நடிகர் விஷ்ணு மஞ்சு 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு அக்சய் குமார் தனது 'எக்ஸ்' தளத்தில், "கண்ணப்பாவின் பயணத்தில் என்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர கோவிலில் 18 ஆகஸ்ட் 2023 அன்று பூஜை போடப்பட்டு,  கண்ணப்பா படம் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு, நியூசிலாந்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 80 சதவிகிதம் நியூசிலாந்தில் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சுகாதாரத் துறையில் Wearable Technology-களின் ஆற்றல் என்ன தெரியுமா? உலகமே மாறப்போகுது! 
 Kannappa movie

விஷ்ணு மஞ்சுவுடன் சிவபெருமானின் தீவிர பக்தராக நடிகை ப்ரீத்தி முகுந்தன், சிவனாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பிரபாஸ் (கௌரவத்தோற்றம்), மோகன் பாபு, ஆர்.சரத்குமார்  மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பதால் கண்ணப்பா மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com