

தமிழ் சினிமாவில் புதிய இயக்குனர்கள் சில நல்ல படைப்புகளை தந்து நம்மை திரும்பி பார்க்க வைக்கிறார்கள். சமீபத்தில் சிறை, பிளாஸ்ட் போன்ற படங்கள் இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த வரிசையில் ராஜா கருப்பசாமி என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள 'மொத ராத்திரி' என்ற படமும் சேர்ந்துள்ளது.
இப்படத்தில் ரிஷிகாந்த் ஹீரோவாகவும், சிறை, யூத் படங்களில் ஹீரோயினாக நடித்த அனிஷ்மா ஹீரோயினாகவும் நடித்துள்ளார். சேத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இனி படத்தைப் பற்றி பார்க்கலாம்.
கதையும் கதை சொன்ன விதமும்
தூத்துக்குடி பக்கத்தில் ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தில் உள்ள ரிஷிகாந்த் துபாயில் வேலை செய்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட காதல் தோல்வியால் திருமணமே செய்யக்கூடாது என்ற முடிவில் இருக்கிறார். ஆனால் ரிஷிகாந்த் அம்மா தன் மகனுக்கு திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருக்கிறார். மகனுக்கு தெரியாமல் அருகில் உள்ள வேறு ஒரு ஊரில் பெண் பார்த்து திருமண ஏற்பாடுகளை செய்கிறார். மகனிடம் திருமணம் என்ற காரணத்தை மறைத்து வேறு ஒரு காரணத்தை சொல்லி துபாயிலிருந்து வரவழைக்கிறார். ஊருக்கு வரும் ரிஷிகாந்திற்கு இந்த விஷயம் தெரியவருகிறது. வேண்டா வெறுப்பாக திருமணம் செய்ய ஒத்துக் கொள்கிறார். மாப்பிள்ளைக்கு தான் இப்படி ஒரு பிரச்சனை என்றால் மணப்பெண்ணிற்கு வேற ஒரு பிரச்சனை.
மணப்பெண்ணாக இருக்கும் அனிஷ்மா ஒரு இளைஞரை காதலிக்கிறார். தனது தாயின் வற்புறுத்துதால் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார் காதலன் திருமண நாளன்று எப்படியும் வந்து தன்னை கடத்திக் கொண்டு சென்று விடுவான் என்று நம்பிக் கொண்டு இருக்கிறார். ஆனால் காதலன் வந்த பாடு இல்லை வேறு வழி இல்லாமல் ரிஷிகாந்திற்கும் அனுஷ்மாவிற்கும் திருமணம் நடக்கிறது.
திருமண நாள் அன்று இரவு அனிஷ்மாவின் பழைய காதல் ரிஷிகாந்த்திற்கு தெரிய வருகிறது. தனது காதலன் தனக்காக ஊர் எல்லையில் காத்திருப்பான் என்கிறார் அனிஷ்மா. ரிஷிகாந்த் நானே உன்னை உன் காதலனிடம் கொன்று சேர்க்கிறேன் என்று உறவினர்களுக்கு தெரியாமல் எல்லையில் உள்ள கோவிலுக்கு அழைத்து செல்கிறார்.
இதற்கிடையில் கோவில் பூசாரி மூலமாக ரிஷிகாந்தின் பழைய காதலும் அனீஸ்மாவிற்கு தெரிய வருகிறது. வீட்டில் உள்ள உறவினர்கள் மணமகன், மணமகளும் எங்கே சென்றார்கள் என்று தேட ஆரம்பிக்கிறார்கள். இவர்களின் கடந்த கால காதலும் இரு வீட்டாருக்கும் தெரிய வருகிறது. இது மிகப்பெரிய சண்டையாக உருவெடுக்கிறது. அனீஸ்மா தனது பழைய காதலனுடன் சென்றாரா? குடும்ப உறவினர்கள் சமாதானம் அடைந்தார்களா? என்ன ஆனது? என்று சொல்கிறது மீதி படம்.
ஒரு துளி கூட விரசம் இல்லாமல், இரட்டை அர்த்த வசனங்கள் எதுவும் இல்லாமல் இந்த மொத ராத்திரி படத்தை தந்துள்ளார் இயக்குனர்.
நாம் நிறைய த்ரிலர் வகை படங்களை பார்த்திருப்போம். இது ரொமான்ஸ் திரில்லர் வகை படமாகும். படம் தொடங்கி திருமணம் வரை நார்மலாக செல்லும் படம் அதன் பிறகு எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணிக்கிறது. ஒரு பக்கம் மணப்பெண், மணமகன் இவர்களுடன் கதை பயணிக்கிறது. இன்னொரு பக்கம் வீட்டில் உள்ள உறவினர்களின் செயல்பாடுகளை வைத்து கதை செல்கிறது. மூன்றாவதாக வீட்டில் உள்ள ஆண்கள் சண்டை போட்டுக் கொள்வதாகவும், இந்த கதை செல்கிறது. மூன்று இடங்களில் நடக்கும் இந்த கதையை மிகவும் பரபரப்புடன், சுவாரசியத்துடனும் தந்துள்ளார் இயக்குனர்.
ஒரு சாதாரண காதல் பிரச்சனையை வைத்து அதனுள் திரில்லர் என்ற பிளேவர் கலந்து சமூகம், ஜாதி, ஆணாதிக்கம் போன்ற பல விஷயங்களை கதையில் சொல்லியுள்ளார். கதையை விட கதை சொன்ன விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. எழுத்தில் நன்றாக ஒர்க் செய்து விட்டு அதன் பிறகு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார் என்று படம் பார்க்கும் பொழுது புரிகிறது.
கதாபாத்திரங்களை உருவாக்கிய விதம்
பொதுவாக பல படங்களில் ஹீரோ ஹீரோயின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நன்றாக எழுதி இருப்பார்கள். மற்ற கேரக்டருக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. ஆனால் இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயினுக்கு இணையாகவும், அதே சமயத்தில் அவர்களை விட கொஞ்சம் அதிகமாகவும் நிறைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தில் வரும் பெண்கள், குறிப்பாக சம்பந்திகள் இருவரும் மிகவும் யதார்த்தமாக, தென் மாவட்டத்தில் உள்ள குடும்ப பெண்களை கண் முன் கொண்டு வருவதை போல் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். பையனுக்கு தாய் மாமா அப்துல் லீ மற்றும் பெண்ணிற்கு சித்தப்பாவாக வரும் பகவதி கதாபாத்திர வடிவமைப்பும் சபாஷ் போட வைக்கிறது.
நடிப்பு
சிறை, யூத், திரைப்படங்களில் ஒரு க்யூட் பெண்ணாக நடித்த அனிஷ்மா இப்படத்தில் அமைதியாக அதே சமயத்தில் பெற்றோர்கள் தரும் அழுத்தத்தினால் சற்று மன சிதைவுக்கு ஆளாகும் பெண்ணாக மிக சரியாக நடித்துள்ளார். கல்யாண வீட்டில் திடீரென்று ஒரு நடனம் ஆடுவார் பாருங்கள் நாமே எதிர்பார்க்காத ஒன்று. இப்படத்திற்க்கு அனீஸ்மா ஒரு மிகப்பெரிய பலம்.
ஹீரோ ரிஷிகாந்த் அமைதியாக எப்பொழுதும் முகத்தில் காதல் தரும் சோகத்துடன் சிறந்த நடிப்பை நடித்திருக்கிறார்.
இதுவரை சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த பகவதியும், அப்துல் லீயும் நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும் காட்சி நம் திருமண வீடுகளில் நடக்கும் சண்டை போலவே உள்ளது.
படத்தில் நடித்த ஒவ்வொருவரும் மிக சிறப்பாக தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். பூசாரி சேத்தன் இதுவரை நடத்திடாத ஒரு மாறுபட்ட கேரக்டரில் நடத்தி இருக்கிறார். படத்தில் வரும் பெண்கள் அனைவருமே மிகப் பிரமாதமாக தனக்கு தரப்பட்ட வசனங்களை உணர்ந்து பேசியிருக்கிறார்கள்.
இசை - ஒளிப்பதிவு - எடிட்டிங்
பரத் ஷங்கரின் இசையில் கல்யாண வீட்டில் நடக்கும் ஒரு பாடல் ரசிக்கும்படியாக இருக்கிறது, மற்ற பாடல்கள் சுமார் தான். சுரேந்திரன் பரஞ்சோதியின் ஒளிப்பதிவும், அசோக் அர்ஜுனனின் எடிட்டிங் படத்தை பரபரப்பாக வைப்பது முக்கிய பங்கு வைக்கிறது. இந்த படத்தில் குறை என்று பெரிதாக எதுவும் இல்லை.
இந்த படத்திற்கு மொத ராத்திரி என்ற டைட்டில் கல்யாண நாள் அன்று இரவில் நடக்கும் சில பிரச்சினைகள் என்ற அடிப்படையில் வைத்துள்ளார் இயக்குனர். படத்திற்கு வேறு தலைப்பு வைத்திருந்தாலும் கூட பெரிய வித்தியாசம் எதுவும் வந்திருக்காது.
ஒரு காதல் திரில்லர் படத்தின் வழியே சமூகம், உறவுகள், சாதிய கண்ணோட்டம் போன்ற பல விஷயங்களை சொன்னதற்காக அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமியை பாராட்டலாம்.
மொத ராத்திரி - தைரியமாக அனைவரும் பார்க்கலாம்.