

அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஹைப்பர் லிங்க் க்ரைம் திரில்லர் படமான மூன்றாம் கண் ஒரு லோ பட்ஜெட் படம். வித்தியாசமான திரைக்கதை உள்ள படங்களாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் விதார்த்,கலையரசன், ஜான் விஜய், சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்போம்.
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஒரு பெரிய தொழிற்சாலையில் ஜெனரல் மேனேஜர். பெண் சபலம் கொண்டவர். ஈகோ பிடித்தவர். தொழிற்சாலை எம்டி உட்பட பலரையும் பகைத்துக் கொண்டவர் ஒரு நாள் கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலையை செய்தது நான் தான் என நான்கு பேர் முன் வருகின்றனர். உண்மையான கொலையாளி யார்?என்பதை எப்படிக் கண்டு பிடிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.
திலீபன் என்ற கேரக்டர். பேக்டரியின் அடுத்த ஜெனரல் மேனேஜர் ஆக கடும் உழைப்பையும், முயற்சியையும் கொடுப்பவர். ஆனால் இப்போது ஜெனரல் மேனேஜராக இருப்பவரான வில்லன் இவரை மதிப்பதில்லை. அவ்வப்போது அவமானப்படுத்துகிறார். இதனால் கடுப்பான இவர் வில்லனைக் கொலை செய்யத் துணிகிறார்.
பிரகாஷ் என்ற கேரக்டர் பேக்டரியின் எம்டி ஆக இருப்பவர். இவர் ஒரு சைக்கோ. தான் ஒரு தொழிற்சாலையின் முதலாளியாக இருந்தும் தனக்குக்கீழ் வேலை பார்க்கும் ஜெனரல் மேனேஜர் தன்னை மதிக்கவில்லையே என்ற வருத்தம் கோபமாக மாறுகிறது. ஜெனரல் மேனேஜரைக் கொல்ல முடிவெடுக்கிறார்.
ஹரிணி என்ற கேரக்டர். பேக்டரியில் வேலை கேட்டு வருபவர். இவரது அம்மாவை வில்லன் பாலியல் வன்கொடுமை செய்யத் துடிப்பதால் வில்லனைக் கொல்ல முடிவெடுக்கிறார்.
சண்முகம் என்ற கேரக்டர். இவர் அதிகம் பேச மாட்டார். சத்தம் இவருக்கு அலர்ஜி. இவரது மனசாட்சி பேசுவது போல் காட்டுவார்கள். ஆனால் இவர் பேச மாட்டார். இவர் பணி புரியும் ஆபீஸ் ரூம்க்கு அருகில் தான் வில்லனான ஜெனரல் மேனேஜரின் ரூம் இருக்கிறது. எப்போப் பார்த்தாலும் யாரையாவது சத்தம் போட்டுத் திட்டிக்கொண்டெ இருப்பதால் அந்த சத்தம் பிடிக்கவில்லை இவருக்கு.
வில்லன் ஜெனரல் மேனேஜராக ஜான் விஜய் நடித்திருக்கிறார். எப்போதுமே ஓவர் ஆக்டிங்க் செய்யும் இவர் இந்தப் படத்திலும் அதிக அலட்டலுடன் நடித்திருக்கிறார். ஆனாலும் இவரை ரசிக்க முடிகிறது.
பேக்டரியின் ஓனராக திரிகன் சைக்கோத்தனமான கேரக்டரில் கச்சிதமாக நடித்துள்ளார்.
மெக்கானிக்காக வரும் விதார்த் அமைதியாக அண்டர்பிளே ஆக்டிங்க் செய்திருக்கிறார். அவரது மனசாட்சியாக சந்தோஷ் பிரதாப் கச்சிதமான நடிப்பு.
அதுல்யா சந்திரா, தேஜூ அஸ்வினி, சுந்தரா டிராவல்ஸ் ராதா மூன்று நடிகைகளும் அவரவருக்குத் தந்த ரோலை சரியாக செய்திருக்கிறார்கள்.
கலையரசன் உதவியாளராக வருகிறார் பாந்தமான நடிப்பு.
இசை அஜிஸ். பின்னணி இசையில் திரில்லர் மூடுக்கு செட் செய்கிறார். உதயகுமாரின் ஒளிப்பதிவு அருமை.
முதல் பாதி விறுவிறுப்பாகவும், பின் பாதி தேவை இல்லாத ஆணிகளும் இருப்பதை கவனித்திருக்கலாம் எடிட்டர். படத்தின் ரன்னிங்க் டைம் 100 நிமிடங்கள். அதனால் குயிக் வாட்ச் ஆக பார்த்து விடலாம்.
கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் சாகோ கணேசன்.
சபாஷ் டைரக்டர்
படத்தின் க்ளைமாக்சை சொல்லாமல் ரசிகர்களை யூகிக்கச் சொல்லும் ஐடியா குட். 1980 களில் ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்களைப் படித்த வாசகர்கள் க்ளைமாக்சை யூகிப்பதில் கில்லாடிகள். உற்சாகமாகப் பார்ப்பார்கள்.
முக்கியமான நான்கு கேரக்டர்களுக்கும் வில்லனைக் கொல்ல சரியான காரணங்களை அடுக்கியது சபாஷ் போட வைக்கிறது.
சொல்ல வந்த கதையை நேரடியாக, குழப்பாமல் சொல்லி கவனம் ஈர்த்த விதம் குட்.
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
படத்துக்கு ஒரு பரிச்சயமான முகம் வேண்டுமே என்பதற்காக விதார்த் கேரக்டரை வலியத் திணித்திருக்கிறார்கள்.
இடைவேளையுடன் சொல்ல வந்த கதையை முழுதாக சொல்லிவிட்டார்கள். இடைவேளைக்குப்பின் ட்விஸ்ட் வைக்கிறேன் என்று திரைக்கதை கிளைக்கதைகளுடன் எங்கெங்கோ பயணிக்கிறது.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - லோ பட்ஜெட்டில் உருவான வித்தியாசமான க்ரைம் திரில்லர். பார்க்க விரும்புகிறவர்கள் பார்க்கலாம்.