

வள்ளுவருக்கு எந்த நிறத்தை பூசலாம் என்று விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் வள்ளுவன் எழுதிய ஒரு திருக்குறளை மையப்படுத்தி வள்ளுவன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சங்கர் சாரதி. இப்படத்தில் சேத்தன் சீனு, அஸ்னா ஜாவிரா நடித்துள்ளார்கள். மறைந்த நடிகரும் இயக்குனருமான மனோபாலாவிற்கு இது கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஒரு பணக்கார தாதா கொலை செய்யப்படுகிறார். அதன் பிறகு ஓரிரு கொலைகள் நடக்கிறது. இந்த கொலைகளின் தொடர்ச்சியாக இதை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரும் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலையை காவல்துறை துப்பு துலங்க முடியாமல் திணறுகிறது. இது போன்ற கொலைகளை கண்டுபிடிப்பதில் திறமையானவராக இருக்கும் அதிகாரி பிரேம் அவர்களை காவல்துறை இந்தக் கொலையை கண்டுபிடிக்க அனுப்புகிறது.
இந்த கொலைகள் அனைத்திலும் கொலை செய்யப்பட்டவரின் முதுகில் சில தமிழ் எழுத்துகள் இருப்பதை கண்டறிகிறார் பிரேம். இந்த எழுத்துக்களை வைத்து இது ஒரு திருக்குறள் என்றும் கண்டுபிடிக்கிறார். இந்த குறளின் பொருள் 'தீயோரை அழிக்க வேண்டும்' என்பதாகும். திருக்குறள் மீது பற்றும் திருக்குறள் படி நடக்கும் ஒருவர்தான் இக்கொலைகளை செய்கிறார் என்று உறுதியாக நம்புகிறார் பிரேம்.
இந்த சூழ்நிலையில் காவல் நிலையம் உட்பட பல்வேறு இடங்களுக்கு உணவு டெலிவரி செய்யும் இளைஞனாக இருக்கும் சேத்தன் சீனு மீது பிரேம் சந்தேகம் கொள்கிறார்.
இவரின் சந்தேகத்திற்கு காரணம் என்ன? உண்மையில் சேத்தன் சீனு இந்த கொலைகளை செய்தாரா? என்று இந்த வள்ளுவன் பதில் சொல்கிறது.
திருக்குறளை வைத்து சில கொலைகள் என்று யோசித்ததற்கு இயக்குனரை நாம் பாராட்டலாம் ஆனால் என்ன செய்வது? யோசனை மட்டுமே ஒரு படத்தை வலு உள்ளதாக மாற்றாதே! நல்ல திரைக்கதை வேண்டுமே!
ஒரு மாறுபட்ட திரில்லர் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போது, இடைவேளைக்கு முன்பே கொலைக்கான காரணங்கள் தெரிய வருகிறது கொலைக்கான காரணங்கள் தெரிந்த உடனேயே கொலை யார் செய்தது என்றும் நம்மால் யூகிக்க முடிகிறது. இது இப்படத்திற்கு ஒரு பெரிய மைனஸ் பாயிண்ட் ஆகிவிடுகிறது. ஒரு வித்தியாசமான ஒன் லைன். இந்த ஒன்லைனில் ஒரு சிறந்த திரைக்கதை உருவாக்கி இருந்தால் கோட்டையை கட்டியிருக்கலாம். ஆனால் இயக்குனர் திரைக்கதையில் பெரிய கோட்டையை விட்டிருக்கிறார்.
வித்தியாசமாக ஆரம்பித்து சாதாரணமாக தங்கையை நாசம் செய்த வில்லனை, ஹீரோ அண்ணன், பழி வாங்கும் என்ற 'நான் மகான் அல்ல' காலத்து படம் போல செல்கிறது. இந்த போக்கை சற்று மாற்றி யோசித்து இருந்தால் இந்த படம் ஓரளவு ரசிக்கும் படமாக வந்திருக்கும்.
இருப்பினும் இப்படத்தில் ஹீரோ சேத்தன் சீனு, அஸ்னா ஜாவேரி இருவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது. பார்ப்பதற்கு சாக்லேட் பாய் போல் இருக்கும் சேத்தன் சீனு தன்னை கொஞ்சம் மாற்றிக் கொண்டு வடசென்னையில் இருக்கும் ஒரு சாதாரண பையன் போல நடித்திருக்கிறார். இந்த கேரக்டர் இவருக்கு முழுமையாக செட்டாகவில்லை என்றாலும் கூட இதை எப்படியாவது தனக்கு செட் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு இவர் நடிப்பில் இருக்கிறது. இதற்காக சேத்தன் சீனுவை பாராட்டலாம். அஸ்னா மரத்தை சுற்றி சுற்றி வரும் ஹீரோயின் போல் இல்லாமல் கொஞ்சம் நடித்திருக்கிறார். கிளைமாக்ஸில் இவரது நடிப்பு ஓரளவு பேசும்படி இருக்கிறது.
படத்தில் பாடல்கள் எதுவும் கேட்கும்படி இல்லை. பின்னணி இசை சுமார். ஒளிப்பதிவு பரவாயில்லை. வள்ளுவன் என்ற ஒரு நல்ல டைட்டிலுக்கு ஏற்றால் போல் ஒரு நல்ல சிறந்த தளத்தில் திரைக்கதை அமைத்திருந்தால் வள்ளுவன் ஜொலித்திருப்பார். வள்ளுவன் தலைப்பில் இருக்கும் சிந்தனை படத்தில் இருந்திருந்தால் பாராட்டி இருக்கலாம்.
இப்படத்தில் நாம் ரசிப்பதற்கு ஓரிரு விஷயங்கள் இருக்கிறது என்றால், இதில் மனோபாலா செய்யும் காமெடியும் முக்கிய பங்கு வைக்கிறது. போலீஸ் ஏட்டாக வரும் மனோபாலா வசனங்கள் மட்டும் இல்லாமல் தனது உடல் மொழியிலும் கண்களின் பயத்திலும் நம்மை சிரிக்க வைக்கிறார். இவர் மறைந்து ஓரிரு ஆண்டுகள் ஆனாலும் இவரின் நடிப்பை படத்தில் பார்க்கும்போது ஒரு நல்ல காமெடி நடிகரை தமிழ் சினிமா இழந்துவிட்டது என்று சொல்லத் தோன்றுகிறது. வி மிஸ் யூ மனோபாலா சார்.