Review - விமர்சனம் - மெல்ல மெல்ல நம் மனதிற்குள் நுழையும் தோழி இந்த 'மின்மினி'!
ஆராக்கியமான ஆண் பெண் நட்பு என்பது இன்னும் நம் சமுதாயத்தில் முழுவதுமாக ஊக்குவிக்க படவில்லை. சினிமாவில் கூட, ஆண் - பெண் நட்பு ஆரோக்கியமாகவும், கண்ணியமாகவும் மிக அரிதாக காட்டப்பட்டிருக்கிறது. "தோழா, தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்" என்று கதாநாயகி, ஹீரோவை பார்த்து பாடும் பாடல் கொண்ட படங்களும் குறைந்து விட்டன. இந்த சூழ்நிலையில் பள்ளிகளில் இருக்கும் ஆண் பெண் நட்பின் தாக்கத்தை சொல்லும் படமாக வந்திருக்கிறது மின்மினி.
இப்படத்தை ஹலீதா சமீம் இயக்கி உள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன் பூவரசம் பீ பீ படத்தை இயக்கியவர். கதீஜா ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஒரு கான்வென்ட் பள்ளியில் பல மாணவ மாணவிகள் இணைந்து படிக்கிறார்கள். பாரி என்ற மாணவர் குதிரை ஏற்றம், கால் பந்து போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்குகிறார். இதனால் பொறாமை கொள்ளும் மாணவர் சபரி, பாரியை எதிரியாக பார்க்கிறார். அனைவரும் சுற்றுலா செல்லும் வழியில் விபத்தில் சிக்குகிறார்கள். பாரி, சபரி உட்பட அனைவரையும் காப்பாற்றி விட்டு இறந்து விடுகிறார். பாரியின் இதயம் பிரவீனா என்ற மாணவிக்கு பொருத்தப்படுகிறது.
பாரியின் கனவான குதிரை ஏற்றம், நீண்ட தூர புல்லட் ரெய்டிங் போன்ற விஷயங்களை சபரி கற்றுக்கொண்டு முயற்சி செய்து பார்க்கிறார். சில வருட இடைவெளிக்கு பின்பு 2023 ஆம் ஆண்டு பிரவீனா சபரியை தேடி செல்கிறார். சபரி ஹிமாலயா பகுதியில் புல்லட் ஓட்டிக்கொண்டு பயணம் செய்து கொண்டிருக்கிறார். பிரவீனா இதை அறிந்து தானும் புல்லட் ஓட்டிக்கொண்டு செல்கிறார். சபரியுடன் பயணத்தில் நட்பாகிறார். இந்த புல்லட் பயணத்தின் வழியே பழைய பள்ளி நினைவுகளை மீட்டெடுத்தல் என்ற திசையை நோக்கி கதை செல்கிறது.
சில பேரையும், சில விஷயங்களையும் பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் என்பதை போல இந்த மின்மினி திரைப்படமும் மெல்ல, மெல்ல தான் நம் மனதிற்குள் நுழைகிறது. கதாநாயகி கதை சொல்வது போல தொடங்கும் கதை பள்ளி பருவம், ஹிமாலய பைக் பயணம் என்று மாறி மாறி செல்கிறது. இந்த படத்தில் பாரி கேரக்டரில் கெளரவ் காளை, சபரி கேரக்ட ரில் பிரவீன் கிஷோர், பிரவீனா கேரக்டரில் எஸ்தர் அனில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால், இந்த மூவரின் மாணவ பருவ பகுதிகளும் இவர்கள் உண்மையான டீன் ஏஜர்களாக இருந்த போது அதாவது எட்டு ஆண்டுகளுக்கு முன்பே 2016ல் டைரக்டர் எடுத்து விட்டார். இந்த சம கால பகுதியை எடுக்க நடித்தவர்கள் இளைஞர்களாக மாறும் வரை பொறுமையாக இருந்து அதே நடிகர்களை வைத்து 2023 ல் படமாக்கி உள்ளார்.
எட்டு ஆண்டுகள் வரை காத்திருந்து அதே நடிகர்களை வைத்து படம் எடுப்பது யாரும் செய்யாத சாதனை. இதற்காக ஹலிதாவை பாராட்டலாம். இந்த அம்சம் படத்திற்கு ஒரு பல மாக இருந்தாலும் மெதுவாக நகரும் திரைக்கதை ஒரு பலவீன மே.
எதோ தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வுடன் கால் போன போக்கில் மனம் போகும் கதாபாத்திரத்தில் பிரவீன் கிஷோர் நன்றாக நடித்துள்ளார். இப்படி ஒரு சிறந்த தோழி நமக்கு இல்லையே என்று எண்ணும் அளவிற்கு எஸ்தரின் நடிப்பு சிறப்பாக உள்ளது. கொஞ்சம் கோபம், துள்ளல் என நடித்திருக்கிறார் கௌரவ் காளை.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்பட தயாரிப்பாளர்களில் ஒருவர். ஹிமாலயத்தின் மலை முகடுகள், ஓடைகள், எளிய மனிதர்கள் என ஒவ்வொரு ஷாட்டையும் ரசித்து படம் பிடித்திருக்கிறார் மனிதர். இந்திய அளவில் மிக சிறந்த ஒளிப்பதிவாளர்கள் பட்டியலில் கண்டிப்பாக மனோஜ் பரமஹம்சாவிற்கு ஒரு இடம் உண்டு.
ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மான் இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி உள்ளார். அறிமுக படத்திலேயே பின்னணி இசையில் முன்னணியில் இருக்கிறார் கதீஜா.
ஒரு ஆணின் வாழ்க்கை பயணத்தில் தாய், மனைவி, சகோதரி என பல பெண்கள் வருவது போல் ஒரு நல்ல தோழியும் கிடைத்தால் எப்படி இருக்கும் என சொல்கிறது இந்த மின்மினி. ஜனரஞ்சகமான விஷயங்களை எதிர் பார்க்காமல் ஒரு நல்ல சினிமாவை விரும்புபவர்களுக்கு இந்த மின்மினியை பிடிக்கும்.