

தமிழ் திரையுலகில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் புதுப்புதுப்படங்கள் வெளியாகும். அந்த வகையில் இன்று திரையரங்குகளில் 5 புதிய படங்கள் வெளியாக உள்ள நிலையில், ரஜினியின் படையப்பா ரீ ரிலீஸாகி போட்டியிடுகிறது. இன்று வெளியாகும் படங்களின் சிறிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
மகாசேனா
தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ள திரைப்படம் மகாசேனா. இந்த படத்தில் யோகி பாபு, சிருஷ்டி டாங்கே, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், ஆல்ஃப்ரெட் ஜோஸ், இலக்கியா, விஜய் சியோன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
மண்புமிகு பறை
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’. இப்படத்தில் லியோ சிவக்குமார் நாயகனாகவும் காயத்ரி ரெமா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக்ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்றதுடன் சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சல்லியர்கள்
கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள, ‘சல்லியர்கள்’ திரைப்படத்தை சேது கருணாஸ், கரிகாலன் இணைந்து தயாரித்துள்ளனர். சத்யாதேவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கருணாஸ், ‘களவாணி’ திருமுருகன், மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு வைரமுத்து பாடல்களை எழுத, கருணாஸ் மகன் கென், அவரது நண்பர் ஈஸ்வர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
யாரு போட்ட கோடு
கதை, திரைக்கதை, வசனம் எழுதி லெனின் வடமலை இயக்கியுள்ள திரைப்படம் யாரு போட்ட கோடு. இந்த படத்தில் பிரபாகரன், மீனாட்சி மெகாலி, துகின் சே குவேரா உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர். செளந்தர்யன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு ஜான்ஸ் வி.ஜெரின், படத்தொகுப்பு ஸ்ரீராம் செய்துள்ளனர்.
அகண்டா 2
நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா - இயக்குநர் போயபதி ஸ்ரீனு கூட்டணியில் உருவான திரைப்படம் அகண்டா 2. 2021-ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுடன் சம்யுக்தா மேனன், ஆதி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா, விஜி சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். முதல் பாகத்தை போன்று ஃபேன்டஸி ஆக்ஷன் ஜானரில் 'அகண்டா 2' உருவாகியுள்ளது.
படையப்பா (ரீ ரிலீஸ்)
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து 1999-ம் ஆண்டு வெளியான படம் படையப்பா. சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில், மறைந்த நடிகை சௌந்தர்யா, வில்லியாக ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 1999-ம் ஆண்டு பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற இப்படம் தற்போது 25 ஆண்டுகள் கழித்து இன்று ரீ ரிலீஸாகிறது.