

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் புதுப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும். அந்த வகையில் கடந்த வாரம் வெளியான படங்கள் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் இன்று வெளியாகும் படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு இருக்குமா என்ற கவலையில் தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் உள்ளனர். தற்போது மக்கள் ஓடிடி தளங்களில் படங்களை பார்க்க அதிக ஆர்வம் காட்டினாலும், தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்று வெளியாகும் படங்களில் மாஸ்க் மற்றும் தீயவர் குலை நடுங்க படங்களுக்கு ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அந்தவகையில் இன்று (நவம்பர் 21-ம் தேதி) திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
மாஸ்க் :
விக்ரனன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடித்துள்ள அதிரடி திரைப்படம் ‘மாஸ்க்’. இந்த படத்தில் இவர்களுடன் ருஹானி ஷர்மா, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வெற்றிமாறன் மற்றும் ஆண்ட்ரியா இந்தப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவை ஆர்.டி. ராஜசேகரும், படத்தொகுப்பை ஆர்.ராமர் செய்திருக்கிறார்.
தீயவர் குலை நடுங்க :
அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் நடித்திருக்கும் படம் தீயவர் குலை நடுங்க. அதிரடி ஆக்ஷன் திரில்லவராக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா, லோகு, பிக் பாஸ் அபிராமி, ராம்குமார், தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார்.
மிடில் கிளாஸ் :
எழுத்தாளர் மற்றும் இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மிடில் கிளாஸ். இந்த படத்தில் முனீஸ்காந்த், விஜயலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் காளி வெங்கட் ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
யெல்லோ (Yellow) :
ஹரி மகாதேவன் இயக்கத்தில் கோலை பிலிம்ஃபேக்டரி பிரசாந்த் ரங்கசாமி தயாரித்துள்ள திரைப்படம் யெல்லோ (Yellow). இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு ஆனந்த் காசிநாத் இசையமைத்துள்ளார்.
இரவின் விழிகள் :
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இரவின் விழிகள்’. சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் மஹேந்திரன், நீமா ரேய் , நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, சிசர் மனோகர், சேரன் ராஜ், கிளி ராமசந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.எம்.அசார் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாஸ்கர் ஒளிப்பதிவையும், ஆர்.ராமர் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
ப்ரண்ட்ஸ் (ரீ-ரிலீஸ்) :
மறைந்த இயக்குனர் சித்திக் இயக்கத்தில் 2001-ம் ஆண்டு வெளிவந்த படம் 'ப்ரண்ட்ஸ்'. இந்த படத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, விஜயலட்சுமி, மதன்பாப், ரமேஷ் கண்ணா, சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர். நட்பை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும், காமெடி காட்சிகளும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்பச்சன் தயாரித்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க, ஒளிப்பதிவு செய்தவர் ஆனந்தகுட்டன். இந்த படம் கிட்டதட்ட 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரீ-ரிலீஸாகிறது.