பிரபல கர்நாடக இசைக்குயில் எம் எஸ் சுப்புலட்சுமியின் வரலாற்று படத்தில் நடிகை ராஷ்மிகா!

கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் விவரங்கள்.
MS – A Legacy on Screen
MS – A Legacy on Screen
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

கர்நாடக இசையின் வரலாற்று நாயகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கௌதம் தின்னனுரி இயக்கத்தில், அனிருத் இசையமைக்கும் இந்த படம் ‘MS – A Legacy on Screen’ என பெயரிடப்பட்டுள்ளது. எம்.எஸ்.யின் 110வது பிறந்தநாளான இன்று சென்னையில் மியூசிக் அகாதமியில் வெளியீட்டு விழா நடைபெறுகிறது; கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக வருகிறார்.

பொதுவாகவே நம்மிடையே வாழ்ந்து மறைந்த மேதைகள் மற்றும் பிரபலங்கள், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் என்றாலே அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுவது உண்டு. அந்த பிரபலத்தின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்? அவர் அப்பாத்திரத்துக்கு சரியாக பொருத்துவாரா என்று கவனிப்பார்கள்.

காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லியையும் நடிகை சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷையும் பாரதியார் கவிதைகள் நடித்த சாயா ஷிண்டே வையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த வரிசையில் தற்போது இணைகிறார் பிரபல நடிகை ராஷ்மிகா.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் இயக்குனர் கௌதம் தின்னனுரி இயக்கும் கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
எம். எஸ். சுப்புலட்சுமி: இசையால் உலகை வென்ற தெய்வீகக் குரலின் வரலாறு!
MS – A Legacy on Screen

புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிப்பார் என்று முன்னமே திரை வட்டாரத்தில் தகவல்கள் கசிந்து வந்த நிலையில் இந்த அறிவிப்பால் அது உறுதியாகியுள்ளது.

அண்மையில், நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்படத்தின் முதல் போஸ்டரைப் பகிர்ந்து, படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தப் போஸ்டர் லுக் அனைவரையும் கவர்ந்துள்ளது. அதில் ராஷ்மிகா மந்தனா எம்.எஸ். சுப்புலட்சுமியைப் போலவே பக்கவாட்டுக் கோணத்தில், லேசாக முகம் தெரியும் வகையில் காட்சி தருகிறார். அவர் சிவப்பு நிற பார்டர் கொண்ட அடர் நீல-பச்சை நிறப் புடவையையும் பாரம்பரிய நகைகளையும் அணிந்துள்ளதும் அவரது கை ஒரு பாரம்பரிய வீணையின் தந்திகளின் மீது பதிந்திருப்பதும் அசல் எம் எஸ் போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த கதாபாத்திரம் ராஷ்மிகாவுக்கு கிடைத்த மாபெரும் கௌரவம் என பாராட்டுகின்றனர்.

மேலும் அதில் அவர் சிவப்பு மற்றும் தங்க நிற வளையல்கள், அழகிய மோதிரங்கள் மற்றும் ஒரு நேர்த்தியான கைக்காப்பையும் அணிந்துள்ளார். மேலும் மென்மையான பொன்னிற ஒளி அமைப்பு, போஸ்டருக்கு ஒரு மேம்பட்ட தோற்றத்தைத் தருவதாக உள்ளது. படத்தின் தலைப்பும் அதன் முதல் காட்சியும் இன்று மாலை 5.15 மணிக்கு வெளியிடப்படும் என்று ராஷ்மிகா அதில் உறுதிப்படுத்தியுள்ளார்.

MS – A Legacy on Screen
MS – A Legacy on Screen

ராஷ்மிகாவும் இந்த வாய்ப்பை ஒரு பெரிய கௌரவமாகக் குறிப்பிட்டுள்ளார். படத்தின் முதல் போஸ்டரைப் பகிர்ந்தபோது, சுப்புலட்சுமி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கலைஞரை நடிப்பது தனக்கு பெருமை என அவர் தெரிவித்துள்ளார்.

பல திறமையான நடிகைகள் இருந்தாலும் தற்போது முன்னணியில் உள்ள ராஷ்மிகாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரசிகர்கள் உள்ளனர். இதனால் எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை பரவலாக இந்திய பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல உதவலாம் என்ற காரணமும் அவரது தேர்வுக்கு பின்னணியாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

ராஷ்மிகாவுக்கு இந்த வாய்ப்பு அவரது திரை பயணத்தின் மைல் கல் என சொல்லலாம். காரணம் எம். எஸ். சுப்புலட்சுமி வெறும் புகழ்பெற்ற பாடகி மட்டுமல்ல. கர்நாடக இசையை இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பரவலாகக் கொண்டு சென்ற முக்கிய கலைஞர்களில் ஒருவர்.

மிகப் பெரிய ஆளுமையின் வாழ்க்கை திரைப்படமாக வருவதால், அவரது இசைப்பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் பல்வேறு கட்டங்கள் புதிய தலைமுறைக்கு அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் நாம் அறியாத பக்கங்களை அறிந்து கொள்ளலாம். குறிப்பாக சிறுவயது இசைப்பயணம், கர்நாடக இசையில் அவர் பெற்ற உயர்வு, திரைப்படங்களில் நடித்த காலம், இந்தியாவைத் தாண்டி உலக அரங்கில் பெற்ற புகழ் உள்ளிட்ட அவரது வாழ்க்கையின் பல கட்டங்களை படம் எடுத்துக்காட்டும் என்று தெரிகிறது.

இதையும் படியுங்கள்:
எம்.எஸ். அம்மாவின் நிழலாக வாழ்ந்த விசாலம் அம்மாள்: நெகிழ்ச்சி நினைவுகள்!
MS – A Legacy on Screen

இது வெறும் இசை வாழ்க்கை படமாக மட்டும் அல்லாமல் சுப்புலட்சுமியின் சிறுவயது, இசைப்பயணம், புகழின் உச்சம் உள்ளிட்ட வாழ்க்கையின் பல கட்டங்களை காட்சிப்படுத்த இருப்பதால் ராஷ்மிகாவின் நடிப்புத் திறனுக்கு முக்கியத்துவம் இருக்கும் எனத் தெரிகிறது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110வது பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 16) சென்னையில் உள்ள மியூசிக் அகாதமியில் நடைபெறுகிறது என்றும் அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல் ஹாசன் கலந்து கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் பெயர்: MS – A Legacy on Screen என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

கர்நாடக சங்கீதத்தின் ராணியாக திகழ்ந்த எம்.எஸ் அம்மாவின் பயோபிக் படத்தைக் காண இசை ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் முழுமையான பின்னணி மற்றும் திரைக்கதை வெளியீட்டுத் தகவல்களை அறிந்துகொள்வதன் மூலம், இந்திய இசை வரலாற்றின் பொக்கிஷமான ஒரு கலைஞரின் அறியப்படாத பரிமாணங்களையும் நவீன திரையுலகம் அதை அணுகும் முறையையும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com