எம்.எஸ். அம்மாவின் நிழலாக வாழ்ந்த விசாலம் அம்மாள்: நெகிழ்ச்சி நினைவுகள்!

இசை அரசி எம்.எஸ். சுப்புலட்சுமியின் அந்தரங்கமான மற்றும் பாசமிக்க வாழ்க்கை முறையைப் பற்றி உதவியாளர் கூறுகிறார்.
எம்.எஸ். சுப்புலட்சுமி - MS Subbulakshmi memories
எம்.எஸ். சுப்புலட்சுமி - MS Subbulakshmi memories
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on
Kalki Strip
Kalki Strip

கல்கி வார இதழில் வெளியான எம்.எஸ். நினைவலைகள் தொடரில் எம்.எஸ். அவர்களுக்கு, சிறுவயதிலிருந்தே உதவியாளராக இருந்த விசாலம் அம்மாள் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது…

எனக்கு அப்போ பத்து வயசிருக்கும். எங்க அம்மா அப்பா இரண்டு பேரும் 'கல்கி' கார்டன்ஸ்ல வேலை செஞ்சுக்கிட்டிருந்தாங்க. அரண்மனை மாதிரி பெரிய தோட்டம், விளையாட ராதா, விஜயா, தங்கை ஆனந்தினு என் வயசுக் குழந்தைகள்னு எனக்கே பிடிச்ச விஷயங்கள் நிறைய இருந்ததால நான் அடிக்கடி போய் விளையாடிக்கிட்டிருப்பேன்.

அங்கேதான் எம்.எஸ். அம்மாவைப் பார்த்தேன். மலர்ந்த முகம், அழகான கூந்தல், மென்மையான பேச்சுடன் அவர் வளைய வரும் அழகைப் பார்த்து பலமுறை பிரமித்துப் போயிருக்கிறேன்.

எம்.எஸ். சுப்புலட்சுமி - MS Subbulakshmi memories
விசாலம் அம்மாள் -

நான் துருதுரு என இருப்பதைக் கவனித்த எம். அம்மா, என் பெற்றோரிடம், "இந்தக் குட்டி கொஞ்ச நாளைக்கு இங்கியே இருக்கட்டுமே" என்று கேட்டிருக்கிறார். 'கொஞ்ச நாளைக்கு' என்பது இறைவன் கணக்கில் கிட்டத்தட்ட அறுபத்து மூன்று வருஷம் என்று அப்போது யாருக்குத் தெரியும்?

அன்றிலிருந்து அம்மாகூடவே இருந்து, அவர் காலமாகும்வரை, அவருக்கு வேண்டிய எல்லா தொண்டுகளையும் செய்யும் பாக்கியம் கிடைச்சுது.

சதாசிவம் அய்யாவே அம்மாவைக் கிண்டல் பண்ணுவார்.

"குஞ்சம்மா... உன்னோட லைஃப் டைம்ல அதிகமாகக் கூப்பிட்ட பேர் விசாலமாகத்தான் இருக்கும்" என்பார்.

அதென்னவோ அம்மாவுக்கு அப்படி ஒரு ப்ரியம். நான் கூடவே இருக்கணும்.

"விசாலத்துக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு செஞ்சியில கல்யாணம்"னு எங்கப்பா போய்த் தகவல் சொன்னதும், நான் அவங்களை விட்டு நிரந்தரமாப் பிரிஞ்சுடுவேன்னு நினைச்சாங்களோஎன்னவோ, படுக்கை அறைக்கு ஓடிப்போய் கட்டிலிலே விழுந்து குப்புறப்படுத்துக் கொண்டு கேவிக் கேவி அழ ஆரம்பிச்சுட்டாங்க.

எம்.எஸ். சுப்புலட்சுமி - MS Subbulakshmi memories
எம்.எஸ். சுப்புலட்சுமி - MS Subbulakshmi memories

"அவளுக்கும் பதினாறு வயசாறதே! கல்யாணம் பண்ண வேண்டாமா? திரும்பவும் இங்கே வந்துடுவா"னு சதாசிவம் அய்யா சமாதானப்படுத்தினாரு.

அம்மாவுக்குத் தினமும் கச்சேரி, ரிக்கார்டிங்னு ஏதாவது இருக்கும். அதனால, அவங்க உடம்புக்குச் சின்னதாகூட அசௌகரியம் எதுவும் வந்துடக் கூடாதுன்னு நான் கவனமா இருப்பேன். ஆனால், அவங்க என்னோட ஆரோக்கியத்துல ரொம்ப கண்டிப்பா இருப்பாங்க.

''கிருத்திகை, சோமவாரம், வெள்ளிக்கிழமைனு நினைச்சு நினைச்சு தலைக்குத் தண்ணி விட்டுக்கறே. ஆனா தலையைச் சரியாத் துடைக்கக்கூட செய்யாம, வேலை வேலைனு போயிடறே"னு சத்தம் போடுவாங்க.

அவங்க எதிர்ல ஒத்தைத் தும்மல் போட்டுட்டாக்கூட டென்ஷன் ஆயிடுவாங்க.

'டக்'குன்னு பக்கத்துல வந்து தலையைத் தொட்டுப் பார்ப்பாங்க. அது ஈரமா இருந்ததோ, நான் தொலைஞ்சேன்.

"போ... தலையைத் துவட்டு. சாம்பிராணி போடு' வேலையை விட்டுட்டு விரட்டுவாங்க.

சாப்பிட என்ன கொண்டுபோனாலும் கையில் வாங்குறதுக்கு முன்னால நீ சாப்பிட்டியா?"ன்னு கேட்பாங்க.

"நான் சாப்பிட்டுட்டு தானேம்மா உங்களுக்குக் கொண்டு வர்றேன்" என்பேன்.

''பொய் சொல்லாதே கொன்னுருவேன்"னு ஆள்காட்டி விரலை மூக்குக்கு நேராக வைத்து குழந்தைபோல மிரட்டுவார். அந்த அழகைப் பார்க்கவே, அதுபோன்ற நிறைய பொய் சொல்லத்தோணும்.

உணவு விஷயத்தில் அய்யா எப்போதுமே கரெக்டா இருப்பார். ருசிச்சு சாப்பிடுவார். அளவாச் சாப்பிடுவார். கத்திரி, பிடி கருணை, பீர்க்கங்காய் போன்றவற்றில் ஒரு துவையல் அரைத்து, மோர் சாதம் பிசைஞ்சு வைத்தால் கூட ரொம்ப ரசனையா சாப்பிடுவார். இரண்டு ஸ்பூன் சாதம் அதிகமாயிட்டாலும், தனியே எடுத்து வச்சுடுவார்.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு ஏற்ற சூப்பர் ஹிட் பிசினஸ்! பணம் சம்பாதிக்க 'மாஸ்' வழி!"
எம்.எஸ். சுப்புலட்சுமி - MS Subbulakshmi memories

ஆனால், அம்மா அப்பிடியில்லை. அவங்களைச் சாப்பிட வைக்கிறதுக்குள்ளே பெரும்பாடாயிடும். பெரிய விருந்துக்குப் போனால்கூட ஏதோ பேருக்குக் கொறிச்சு வைப்பாங்க. அதுவும் அம்மாவுக்கு வயசான பிறகு குழந்தைக்குப் பண்ற மாதிரி, ஏதேதோ தாஜா செஞ்சு சாப்பிட வைக்க வேண்டியதா போச்சு.

கோதுமைக்களி, கோதுமை தோசை செஞ்சு கொடுப்பேன். 'பக்கத்துலேயே இருந்து இன்ஸ்பெக்ஷன் பண்றியே"னு செல்லமா கோவிச்சுப்பாங்க.

''அவளைக் கோவிச்சுக்காதே குஞ்சம்மா... அவ நம்மோட தாயார்"னு சொல்லிட்டு, என் பக்கமாத் திரும்பி, "நாங்க மேலே போனால் கூடவே நீயும் வந்துரு விசாலம். வேளா வேளைக்கு ஆகாரம், மருந்து தர அங்கே ஆள் இருக்காளோ என்னவோ!”னு ஜோக்கடிச்சு, அம்மாவைச் சாப்பிட வைச்சுடுவார் அய்யா.

அம்மா எப்பவும் சிம்பிளா டிரஸ் பண்ணிப்பாங்க. கஸ்தூரி மஞ்சள், ஐதராபாத் குங்குலம் ரிசலாங்கண்ணி மை, சீயக்காய் தூள் என கடைசிவரை இயற்கையான அழகுப் பொருள்களைத்தான் பயன்படுத்தினாங்க.

சின்ன வயசுல, அவங்க கூந்தலைப் பிரிச்சுவிட்டா, மயில் தோகை போல, அவ்வளவு அழகா இருக்கும்.

"எம்.எஸ். என்ன ஷாம்பூ பயன்படுத்தறாங்கனு நிறையப் பெண்கள் என்கிட்ட கேட்டதுண்டு.

"பயத்தமாவு கலந்த சீயக்காய் தூள்தான்னா, நம்பவே மாட்டாங்க.

அம்மாவுக்கு தங்க நகைகளில் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. கண்ணாடி வளையல்கள்னா ரொம்ப ஆசையா போட்டுக்குவாங்க. இரண்டு பெட்டி நிறைய சேர்த்து வைச்சுருந்தாங்க.

எப்பவாவது சதாசிவம் அய்யா பார்க்க நேர்ந்தால்,"எதுக்கு இவ்வளவு? பர்டனா?" ம்பார். உடனே அம்மா அதையும் நாலு நாலு வளையா எடுத்து வேண்டியங்களுக்குக் கொடுத்துடுவாங்க! கண்ணாடி வளையலையே பெருஞ்சுமையா நினைச்ச எளிய மனசுக்காரங்க அவங்க.

அம்மாவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியாமல், 'இஸபெல்லா'வுல சேர்த்திருந்தாங்க. நான் அவங்களைப் பார்க்கப் போயிருந்தேன். ரொம்ப பலவீனமா இருந்ததால எல்லார்கிட்டேயும் ஜாடையில் பேசிக்கிட்டிருந்தாங்க. நான் அவங்களுக்கு நமஸ்காரம் பண்ணிட்டு, 'நான் போயிட்டு வர்றேன்'னு ஜாடை காட்டினேன். உடனே அவங்க மெல்லிய குரலில், "எங்கே போறே? ஏன் போறே... சீக்கிரம் வந்துரு"னு சொன்னாங்க.

அதுதான் நான் கடைசியா பார்த்ததும், பேசியதும்.

இதையும் படியுங்கள்:
Home Tips: பயனுள்ள வீட்டு குறிப்புகள்..!
எம்.எஸ். சுப்புலட்சுமி - MS Subbulakshmi memories

''சீக்கிரம் வந்துரு''னு சொன்னாங்க. அம்மா போய் ஒரு வருஷம் ஆச்சு. இன்னும் அவங்களைப்போய் பார்க்க எனக்கு நேரம்தான் வரலை.

நான் அவங்க வயித்துல பிறக்கலையே தவிர, நானும் அவங்களுக்கு ஒரு மகள் மாதிரிதான். ராதாவும், விஜயாவும் என்னைச் சகோதரி போல்தான் இப்பவும் நடத்தறாங்க. உலகம் போற்றும் இசைப் பேரரசிக்கு சிறு தொண்டு செய்ய எழுதப் படிக்கத் தெரியாத இந்தச் சாமானியளுக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்ததே. அதை என் பூர்வஜென்ம புண்ணியமாகவே நினைக்கிறேன்.

குறிப்பு: இக்கட்டுரை கல்கி குழுமத்தின் அச்சுக் காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இதில் உள்ள தகவல்கள் முதலில் வெளியான காலகட்டத்தைச் சார்ந்தவை.
logo
Kalki Online
kalkionline.com